2020 Mar 6
இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு காரணமாக நம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கான விளையாட்டு, சந்தோஷம் , மன ஆறுதல் என்பது குறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது. இது போன்ற சூழலில் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கை தருவதுடன் மனத்திற்கு மகிழ்வையும், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது. இதில் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவர்ந்த சிறந்த நண்பனாக வீட்டு வளர்ப்பு கொக்டைல் பறவைகள் திகழ்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கொக்டைல்கள் ஓர் கவர்ச்சி பறவையாகும். தன்னுடைய வண்ண நிற சிறகுகள் மூலம் மனதை கொள்ளை கொள்ள செய்யும் இக் கொக்டைல் பறவைகள் மனிதர்களுடன் இலகுவில் பழகும் தன்மை கொண்டது . இதன் தலை பகுதியில் காணப்படும் முகடுகள் கொக்டைல் பறவையின் அழகை மேலும் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. இம் முகடுகள் பறவையின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
சுமார் 30cm தொடக்கம் 60cm வரை வளரக்கூடிய கொக்டைல் பறவையின் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் தொடங்கி 25 ஆண்டுகள் வரை ஆகும். இதன் போஷாக்கான உணவிலேயே இதன் ஆயுட்காலம் தங்கியுள்ளது. கொக்டைல் பறவைகள் தனது கால்களின் உதவியுடன் சொண்டுகளை பயன்படுத்தி உணவு உட்கொள்கிறது. பொதுவாக இந்த இன பறவைகள் விதைகள், காய் கறிகள், பழங்கள், கீரை வகைகள் என்பவற்றை விரும்பி உண்ணுகிறது.
கொக்டைல் பறவைகள் தன்னுடைய துணையை கவருவதற்கு செய்யும் நாடக நடனமே மிகவும் சிறப்பானது.
பார்வையாளர்கள் கொக்டைல் பிரியர்கள் ஆவதற்கு இதுவே காரணமாகும். தன்னுடைய அனைத்து செயல்களிலும் தனித்துவமான ஆற்றல்களை கொண்டிருப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் பறவையாக இது மாறியுள்ளது.மனிதர்களுடன் இலகுவில் பழகும் தன்மை கொண்ட கொக்டைல் பறவைகள் நம்மைப் போல சத்தத்தை ஏற்படுத்தும் திறனை கொண்டுள்ளது.
எனவே, வீட்டில் வளர்க்கப்படும் கொக்டைல்கள் உங்கள் குழந்தைகளை எலக்ட்ரானிக் உபகரணங்களை விட்டு அகலுமாறு செய்து, அவர்களை ஓடியாடி விளையாட வைக்கிறது. நன்றாக சிரிக்க வைக்கிறது. இதன்மூலம், மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களின் குழந்தைகள் பெரியளவு நன்மையடைகிறார்கள்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் கொக்டைல் பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்.