2023 Oct 25
ஓர் வரலாறு காணாத புலம் பெயர்வு தற்போது இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது . நாட்டில் யுத்த சூழ்நிலை நிகழ்ந்துகொண்டிருந்தபோதுகூட இந்த அளவு புலம்பெயர்வு இடம்பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை . அதிலும் குறிப்பாக புத்தி ஜீவிகளின் இடப்பெயர்வு .
என்னென்ன காரணங்கள் மக்களை தற்போது இப்படியான புலம்பெயர்வுக்கு சரவாரியாக இட்டுச் செல்கின்றது என சற்று நோக்குவோமாயின் ,
“நாளை என்ன நடக்கும்” ? என்கிற நிச்சயமற்ற தன்மையானது அண்மைய காலத்தில் முன்பைக்காட்டிலும் அதிகமாகவே மக்களது மனதில் எழுந்து ஒருவித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது . பொருளாதார ரீதியிலும் சரி , அரசியல் ரீதியியலும் சரி மக்களது அதிருப்தியானது இந்த நாட்டைவிட்டு போனால் போதும் என்கிற எண்ணத்தினை விதித்துள்ளது எனலாம் .
எந்தவித பொருளாதார மீட்சியும் இல்லாமல் நாடு தொடர்ந்தும் கடன் வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் , இந்த கடன் சுமையானது எதிர்காலத்திலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லாது என்பதுடன் , இலங்கை அரசியல்வாதிகளின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் மீதுள்ள அதிருப்தி மற்றும் நம்பிக்கையீனம் , மீண்டும் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரே ஆட்சிக்கு வரலாம் என்கிற அச்சம் போன்றவையும் இவ்வாறான புலம்பெயர்வுகளுக்கு காரணம் .
சம்பள உயர்வு இல்லாத இக்காலகட்டத்தில் , அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் , அதிகப்படியாக அறவிடப்படும் வரி போன்றன மக்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது . மக்களின் கொள்வனவு சக்தியானது கடந்த காலங்களைவிட சடுதியாக குறைந்துள்ளது . தம்முடைய வாழ்க்கைத்தர வீழ்ச்சியினை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரும்கூட வேறு நாடுகளுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர் , குறிப்பாக வைத்தியர்கள் உற்பட்ட சமூக அந்தஸ்துள்ளவர்கள் தமது உழைப்புக்கேற்ற வாழ்க்கைத்தரமானது இலங்கையில் கிடைக்காதபோது , சர்வதேச சந்தையில் அவர்களுக்கு இருக்கும் டிமாண்ட் அதிகம் என்பதை கருத்திற்கொண்டு பெருவாரியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள் .
கடந்தவருடத்தினைப்போலவே ஒரு மிகப்பெரிய பொருளாதார தட்டுப்பாடு , அதனால் ஏற்பட்ட அசவுகர்யங்கள், மரணங்கள் போன்றவை இனியும் நிகழாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்கிற அச்சம் , மற்றும் தற்போது நமது சுகாதாரத் துறையில் , நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவானது தம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சம் போன்றவையும் மக்களை வேறு நாடுகளுக்கு செல்லவைத்துக்கொண்டிருக்கின்றது .
மேலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் பொருளாதார தன்னிறைவு மற்றும் பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்கிற மனோநிலை அதிகமாக காணப்படுவதால் , தற்போதைய இலங்கை நிலைமையினை காரணமாக வைத்துக்கொண்டு புலம்பெயர்பவர்களும் அதிகம் .
திடீரென அதள பாதாளத்திற்கு வீழ்ச்சியுற்ற இலங்கை நாணயப்பெறுமதியும் புலம்பெயர்விற்கு வித்திட்டதெனலாம். அதாவது , முன்பு வெளிநாட்டிலிருந்து உழைத்தனுப்பும் பணமானது தற்போதைய இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சியினால் சடுதியாக இரண்டு மூன்று மடங்குகளாக அதிகரித்துள்ளமை , வீட்டுக்கு ஒருவராவது வெளிநாடு சென்றால் நல்லது என்கிற நிலையை தோற்றுவித்துள்ளது .
இவை எல்லாவற்றையும்விட இன்னுமொரு காரணம்தான் , ” பதற்றப்படுத்தல் ” என்பது . தமக்கு அறிந்தோர் தெரிந்தோரெல்லாம் நாட்டைவிட்டு வெளியேறுகையில் தாமும் செல்லவேண்டும் என்கிற உந்துதலுக்கு அல்லது பதற்றப்படுத்தலுக்கு உள்ளாகும் மனோநிலை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது . கொரோனா காலத்தில் எப்படி ஒருவித பதற்றத்துடன் முட்டிமோதி சூப்பர் மார்க்கெட்டுக்களில் இருந்து பொருட்களை வாங்கி பதிக்கினோமோ அதேபோன்றதொர் பதட்ட நிலை என்றுகூட கூறலாம் .
எழுத்து :- பிரியா ராமநாதன்