அனைத்தையும் நாடி  அண்ணன்-தங்கை அலப்பறைகள்

அண்ணன்-தங்கை அலப்பறைகள்

2022 Jan 6

எந்த திரைப்படத்திலும் நாடகங்களிலும் ஏன் குறுந்திரைப்படங்கள் ரீல்ஸ் என எந்த ஊடக படைப்புகளை எடுத்துக் கொண்டாலும் அதிகம் குறும்பு நிறைந்ததாகவும் பாசம் பொங்கி வழிவதாகவும் சித்தரிக்கப்படும் உறவுகளில் அண்ணன்-தங்கை உறவும் ஒன்று. அண்ணனுக்காக தங்கை துடிப்பதும் தங்கைக்காக அண்ணன் துடிப்பதும் என பார்ப்பவர்களின் மனதினை கொத்தாக பறித்து சென்று விடுகிறது. இந்த கதாபாத்திரங்களின் பாசப் போராட்ட காவிய வசனங்கள். ஆனால் நிஜ வாழ்வில்… டொம் & ஜெரி கார்ட்டூன் தான். இதை வாசிக்கும் போது நீங்கள் நகைத்தாலும் உண்மை அதுவே. அதாவது திரைப்படத்தில் வருவது போல் “நீங்க நம்பலனாலும் அதான் நிசம்”. “சரி சிரித்தபடி வர்ணித்தது எல்லாம் போதும் தலைப்புக்கு வா!” என மனதில் திட்டி தீர்க்காதீர்கள்! தலைப்புக்கு போகலாம் வாருங்கள்.

பொதுவாக சகோதர பாசம் எதிர்பாலினராக இருக்கும் பந்தங்களுள் அதிகமாக இருக்கும். அதாவது அக்கா – தங்கையை விட அக்கா – தம்பி உறவில் பாசம் கூடுதலாக இருக்கும், அண்ணன்-தம்பி உறவை விட அண்ணன்-தங்கை உறவில் பாசம் அதிகம். பொறுமையாக கதையினை கேளுங்கள். பாசம் மட்டுமல்ல முட்டி கொள்ளும் அளவும் அதிகம் தான். அவர்களுள் வரும் சண்டைகளும் அவர்கள் செய்யும் அலப்பறைகளும் எண்ணிலடங்காதவை. இந்த பதிவில் அண்ணன் – தங்கை பந்தத்தில் உள்ள அலப்பறைகளை அலசுவோம் வாருங்கள்.

பாசமலர்கள் – எத்தனையோ அண்ணன்-தங்கை படங்கள் வந்தாலும் அந்த காலத்து சிவாஜி சாவித்திரியின் பாசமலர்கள் படத்தை தான் இன்று வரை நாம் அந்நியோன்யமாக இருக்கும் அண்ணன்-தங்கை உறவுகளை உருவகிக்க பயன்படுத்துகிறோம். அது ஏன்? சரி அதற்கான பதிலை தேடுவதற்கு முன் சமீபத்தில் வெளி வந்த ‘அண்ணாத்த’ படத்தினை சிந்தித்து பார்ப்போமா? திரையரங்குகள் காலியாக ஓரிருவர் மட்டும் அமர்ந்து பார்க்கும் படியாக அந்த திரைப்படம் மாறி விட்டது. இப்போது இதனை சொல்ல காரணம் அதிகளவிலான பாசத்தினையும் சென்டிமென்ட் வசனங்களையும் திரைப்படத்தில் எவ்வளவு பெரிய நடிகர் வந்து பேசினாலும் நமக்கு அலுத்து விடுகிறது. காமெடியாக தெரிகிறது. இப்போது தெரிகிறதா ஏன் நாம் பாசமலர்கள் படத்தினை உவமையாக கூறுகிறோம் என்று… ஏனெனில் நமக்கே தெரியும் அவ்வாறான அளவுகடந்த சென்டிமென்ட்டான அன்பு அண்ணன்-தங்கை எவருமே இல்லை. அது வெறும் கதை. அதனால் தான் நாம் அந்நியோன்யமான அண்ணன்-தங்கையை கண்டவுடன் “சரி… சரி… நடிக்காதிங்க” என கூறுவதற்கு பதிலாக “பாசமலர்கள் சிவாஜி-சாவித்திரியையே மிஞ்சிருவிங்க போலயே” என கூற தொடங்கி விட்டோம். இது ஓர் வகையில் வஞ்ச புகழ்ச்சி தான் என்பது கூட அறியாத அப்பாவிகளும் உண்டு.

ரிமோட் சண்டை – அதிகளவில் அண்ணன்-தங்கைக்கு இடையில் வருவது இந்த ரிமோட் சண்டை தான். அது ஏன்? இருவரும் எதிர்பாலினர் ஆகையால் அவர்களது இரசனையிலும் அதிகளவிலான வேறுபாடுகள் இருக்கும். அதுவும் இப்போது இருக்கும் சந்ததியினர் தொலைபேசி தொலைகாட்சி என மூழ்கி கிடக்கும் இயந்திர தாசர்கள். அதனால் சரியாக தங்கைக்கு பிடித்த சினிமா பாடல் போகும் போது அண்ணனுக்கு பிடித்த மெட்சில் இறுதி சுற்று போய்க் கொண்டிருக்கும். சரி அதன் பிறகு வீட்டில் அந்த ரிமோட் படும் அவஸ்தையினை சொல்லவா வேண்டும்.

காதலுக்கு தூது – அண்ணன் காதலுக்கு தங்கைகள் உதவி செய்ய மறுப்பதில்லை. ஆனால் அதற்கு பதில் தமக்கு பிடித்த விடயங்களை சன்மானமாக வாங்கி கொள்வார்கள். அதுவும் அதிகார தொனியுடன். இது இவ்வாறு இருந்தாலும் தங்கை யாரையும் காதலிப்பதாக இல்லை. இல்லை நட்போடு ஒரு ஆணோடு பழகுவது தெரிந்தால் கூட அந்த உறவினை முறிக்கும் எமனாக அண்ணன்கள் உருவெடுத்து விடுவார்கள். அதற்கு காரணத்தை கேட்டால் “அவன் என்ன மைன்ட் செட்ல இவளோட பழகுவானு எனக்கு தான் தெரியும்” என டயலோக் விடுவார்கள்.

அண்ணனுக்கு உடை இல்லை – இப்போது பெண்கள் அணியும் உடைகளாக அனைத்தும் மாறி வருகிறது. அதனால் அண்ணனின் உடைகளில் தனக்கு பொருத்தமாக அழகாக இருக்கும் உடைகளை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை, எடுத்து அணிந்து விடுவார்கள். அதன் பின் அது அவர்களுக்கு தானாக சொந்தமாகி விடும். அது ஏனென்றால் அண்ணனின் மனநிலை அவ்வாறானது ஏனெனில் “இவ போட்டு வெளிய போன ட்ரஸ நான் எப்டி போட்டு போறது? என்ன அப்றம் பொம்பள புள்ள ட்ரஸ் போடுறேனு சொல்லுவாங்க” என கூறி சண்டையை தொடங்குவான். அண்ணனால் பலி வாங்கலின் பொருட்டு தங்கையின் உடையை அணிந்து செல்ல இயலாது. அதனாலோ என்னவோ இறுதியில் ஆடை பற்றாக்குறை வருவது அண்ணனுக்கே! இதனால் வாக்குவாதம் வருவதும் தங்கை அடி வாங்குவதும் காலப்போக்கில் அவளுக்கு பழகி போய் விடுகிறது அதனால் அடியும் வார்த்தையும் எந்தவொரு மாற்றமும் தரப்போவதில்லை.

சாப்பாட்டு சண்டை – ஒவ்வொரு வீட்டிலும் பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளைக்கு இறைச்சி, மீன், முட்டை அதிகமாக பரிமாறப்படுவது வழக்கம். அதற்கு மறைமுகமான காரணம் அந்த குடும்பத்துக்காக எதிர் வருங்காலங்களில் காலநிலை மாற்றம் பாராது அயராது உழைக்க இருப்பவன் அவன் தானே என்ற பரிதாபமும் பாசமும் கலந்த பெற்றோரின் மனநிலை. இது பெண் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. அவர்கள் எனக்கு வேண்டும் என கேட்பதில்லை. “இருக்கத எல்லாம் அவன் தட்டுலயே வைக்றிங்க எனக்கும் வைங்க” என்று தான் கேட்பார்கள். இங்கு ஆரம்பமாகும் சண்டை கேலியில் வளர்ந்து சில சமயம் இருவரும் பட்னியாக உறங்கும் நிலை உருவாக காரணமாகிறது.

பெண்ணியம் பேசுவமா? – இன்றும் வீட்டில் பெண் பிள்ளை தான் வேலை செய்ய வேண்டும், பெண் பிள்ளைகள் மாலை ஆன பின் வெளியில் செல்ல அனுமதிக்கபடாமை என பல வழக்கங்கள் நடைமுறையில் உள்ளது. அண்ணனோடு பிறந்தாலே அந்த பெண் வாய் சண்டையில் திறன் படைத்தவளாக இருப்பாள். அவளிடம் இவற்றை நடைமுறைபடுத்த முயல்கையில் அரங்கேற இருக்கும் விவாதங்கள் பற்றி கூறவா வேண்டும். அதுவும் அவளுக்கு அவளுடைய அண்ணனை வேலை வாங்காமல் வளர்ப்பதும் மாலையில் வெளியில் அனுமதிப்பதும் வாதத்தில் வெற்றி பெறுவதற்கு முன் வைக்கப்படும் ஒப்பிடல் சாட்சிகளாக மாறி விடுகிறது. இறுதியில் அவள் பெண்ணியத்திற்கு தனியே குரல் கொடுத்து ஓய்ந்து போகும் அளவிற்கு அவளது அண்ணன் பெற்றோர் காதில் கேட்கும் கேட்காதபடி இருக்க ஐடியா கொடுத்து வைத்திருப்பான். இந்த சண்டையில் தோல்வி தங்கைக்கே. ஒரு வேளை அண்ணனை காக்கா பிடித்து முயன்றிருந்தால் வெற்றி பெறலாமோ என்னவோ!

அப்பாவும் தங்கையும் ஒரு கட்சி – அண்ணனுடன் ஏற்படும் சண்டைகளில் தோல்வி அடைவதாக தெரிந்தாலோ அல்லது அண்ணன் அதிகமாக கேலி செய்வதால் பொறுமை இழந்தாலோ உடனே அடி வாங்காமலயே கையை பிடித்து கொண்டு “அப்பா…. அண்ணா அடிக்றான்ப்பா…. ஐயோ அடிக்காத அண்ணா… வலிக்குது….” என முதலை கண்ணீர் வடித்து கதறியழுவார்கள். இதை அறியாத அப்பாவி அப்பாக்கள் அண்ணனை வெளுத்து வாங்குவார்கள். ஆமாம். அது ஏன் அப்பா? ஏனென்றால் அம்மாக்கு தான் மகளின் நாடகம் தெரியுமே. அது எவ்வாறெனில் ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்கு தானே தெரியும்.

அண்ணனுக்கு பிடித்த சமையல் – அப்பாக்கள் எப்படி மகளின் கட்சியோ அம்மாக்கள் மகனின் கட்சி. அப்பாவை பகைத்தால் பொக்கெட் மணி கட் ஆகும் ஆனால் அம்மாவை பகைத்தால் உப்பு உரைப்பில்லாத சோறு தான். அம்மாக்களின் அதிகாரம் சமையலறை தானே. எப்போதும் வீட்டில் அம்மாக்களின் செல்ல மகன்களுக்கு பிடித்த சாப்பாடு தான் அனைவருக்கும் சமைக்கப்படும். இது தங்கைகளுக்கு பொறாமை தீயில் வாட்டி வதங்கிடும் சூழல் அமைத்து கொடுக்கும் ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அப்பா அடித்த போது அம்மா அமைதியாய் இருந்தாற் போல் இப்போதும் அமைதியாய் சாப்பிட வேண்டியது தான்.

அண்ணனுக்கு சப்போர்ட் – அண்ணன் செய்கிற சிறிய சிறிய தவறுகளை எல்லாம் தவறில்லை என வாதிட்டு காப்பாற்றும் வக்கில்களாக அம்மாக்கள் மாறி விடுகிறார்கள். ஆனால் மகளின் தவறுகளை துப்பறிந்து கோர்த்து விடும் துப்பறிவாளர் ஆக செயற்படுகிறார்கள். இதற்கு காரணமாக பலவற்றை கூறலாம். ஆனால் தலைப்பு திசைமாறி சமூக சமத்துவம் பற்றி பேசுவதாக மாறி விடும்.

தங்கையின் தோழிகள் – தங்கையின் அழகான தோழிகளின் இலக்கத்தை திருட்டுதனமாக எடுத்து பேசி மாட்டிக் கொள்ளும் போது அண்ணனின் மூக்கு உடைக்கப்பட்டு அடிக்கடி பயமுற்று தங்கை கேட்பதை எல்லாம் செய்யும் அடிமையாக மாற்றப்படுகிறான். அதே போல் தங்கை அண்ணனின் நண்பர்களுடன் கதைத்தால்… அதற்கான வாய்ப்பு குறைவு தான் ஏனெனில் அவள் அவளது அண்ணனையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை அவ்வாறு இருக்கையில் எப்படி?

அண்ணன் கல்யாணம் – தங்கையின் சிறகுகள் 25 இல் உடைக்கப்பட்டு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கல்யாண கூண்டுக்குள் தள்ளப்படுகிறது. ஆனால் அண்ணனுக்கு அவன் எப்போது அதைப் பற்றி சிந்திக்கிறானோ அப்போது தான். இது ஒவ்வொரு பெண் பிள்ளையும் பொறாமை கொள்ளும் விடயம். அத்தோடு அண்ணனின் காதலுக்கு எளிதில் பச்சை கொடி காட்டும் பெற்றோர் தங்கைகளின் காதலுக்கு ஒரு கையில் சிவப்பு கொடியும் ஒரு கையில் விஷ போத்தலும் ஆக காட்சியளிப்பார்கள். வாசிக்கையில் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இது நாம் சிந்தித்து மாற்ற வேண்டிய ஒன்று.

தங்கையை சைட் அடிப்போர்களுக்கு – அண்ணனிடம் வந்து தன்னிடம் வம்பு செய்யும் ஆடவர்கள் பற்றி புகார் அளிக்கையில் “நீ உன் வாய திற ஓடிருவான்” என கேலிக்கு உள்ளாக்கப்பட்டு தங்கை திரும்ப அனுப்ப படுகிறாள். ஆனாலும் தங்கையை விட்டு கொடுக்காது மறைமுகமாக அந்த ஆடவர்களை கண்டிப்பதும் உண்டு.

இவ்வாறாக அண்ணன் தங்கைகள் செய்யும் அலப்பறைகள் ஏராளம். எந்தளவுக்கு முரண்பாடுகளும் சண்டைகளும் சினமும் அதிகமாக உள்ளதோ, அதே அளவிலான பாசமும் பிணைப்பும் அவர்களிடையே உண்டு. ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். திருமணத்தின் பின் கூட தங்கைக்கு ஒரு துயரமென்றால் அண்ணனும், அண்ணனுக்கு ஒரு துயரமென்றால் தங்கையும் தான் முன் சென்று உதவுவது அதிகம். சகோதர பந்தங்கள் தொப்புள் கொடியினால் மட்டுமல்ல பாசத்தின் பிணைப்பாலும் உருவாகலாம். எது எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்தில் சொன்னது போல் அவர்கள் டொம் & ஜெரி என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் போன்றவர்களே. ஒருவர் இல்லாது இன்னொருவர் ஓர் நொடியினை கடத்தலும் கடினம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php