அனைத்தையும் நாடி  அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும் உழைப்பு!

அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும் உழைப்பு!

2022 Sep 1

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக  ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.   ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.

வல்லரசு பட்டியலின் முதலிடத்தில் இருக்கும்  அமெரிக்காகூடிய விரைவில் அந்த நிலையை இழக்கும் என பல ஆண்டுகளுக்கு முன்னமே பொருளாதார வல்லுநர்கள் கணித்தமை கொரோனாவிற்கு பின் நிதர்சனமாகியுள்ளது என்பதுதான் உண்மை. இன்றைய உலக பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை அந்தோ பரிதாபம்.

வரலாற்றில் அலெக்ஸ்சாண்டரின் கிரேக்கம், சீசரின் ரோம், நாடுகாண் பயணங்களையே ஊக்குவித்த ஸ்பெயின் தனது காலனித்துவதால் பலநாடுகளையும் ஆட்டிவைத்த பிரிட்டன் போன்ற பெரும் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததைப்போன்றே இன்றைய சமகால வரலாற்றில் அமெரிக்காவின் சாம்ராஜ்யமும் சரிந்துவருகின்றது. சில வருடங்களாகவே அமெரிக்கா ஆட்டம் கண்டுவர அமைதியாக ஒருநாடு முன்னேறி வந்து அமெரிக்காவின் இடத்தை எட்டிப்பிடித்துள்ளது .

அந்த நாடுதான் சீனா !

1872ஆம் ஆண்டு பிரிட்டனை பின்தள்ளி பொருளாதார வல்லரசாகிய அமெரிக்காவை தற்போது பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனா. கடந்த பத்து ஆண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டுவரும் சீனா ஏற்கனவே நீண்டகாலமாக உலகளவில்  இரண்டாம் இடத்திலும் ஆசிய கண்டத்தில் முதலிடத்திலும் இருந்த ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து ஆசிய ஜாம்பவானாக இருந்து தற்போது உலக வல்லரசாக தன்னை உயர்திக்கொண்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி மிக பிரமாண்டமானது. ஜப்பானை விட மிகப்பெரிய வர்த்தக நகராக இன்று உருவாகி உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக  உயர்ந்துள்ளது . ஏராளமான கார்களை வாங்கும் மக்கள் நிறைந்த நாடாக மாறியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர் சீனா. அதன் உலகளாவிய பொருளாதாரம் மற்றும்  ராணுவ செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சீனாவின் வளர்ச்சி என்பது ஆண்டொன்றுக்கு 10 வீதத்தால் அதிகரித்து வருகின்றது  என்கின்றனர் வல்லுநர்கள்.
  இவை எல்லாவற்றையும் விட கடன் ! 

இலங்கை சீனாவிடம் கடன் வாங்கியதைப்பற்றி பேசும் நாம் அமெரிக்காவே கடனில்தான் வாழ்ந்து வருகின்றது என்பதை மறந்துவிடுகின்றோம். ஆம் அமெரிக்காவும்  கடன் வாங்குகின்றது. அதுவும் சீனாவிடம்தான் அதிகம் கடன் வாங்கியிருக்கிறது. சீன பொருளாதாரத்தை அமெரிக்கா வீழ்த்த நினைத்தால் அது அமெரிக்காவிற்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கின்றது.

அந்த அளவிற்கு அமெரிக்க சீன பொருளாதாரம் பின்னிப்பிணைந்திருக்கிறது எனலாம். ஆண்டுதோறும் இவ்விரு தரப்பிற்குமிடையே   அறுபதாயிரம் கோடி டாலர்களுக்கு நடக்கும் வர்த்தகம் அதை உறுதிசெய்யும். மேலும் அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்கள் சீனாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் அமெரிக்காவின் வேளாண் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக சீனா இருப்பது சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கிய நாடாக அமெரிக்கா இருப்பது போன்றவற்றை அமேரிக்கா சீனாவிடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்கு காரணம் என குறிப்பிடலாம்.

மேலும் சீனாவில் அமெரிக்கா செய்துவரும் முதலீட்டைவிட அமெரிக்காவில் சீனா செய்துவரும் முதலீடு கடந்த ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ளனவாம். சீனா என்கிற வல்லரசின் வளர்ச்சிக்கு அமெரிக்க வல்லரசு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றது என்பதுதான்  நிதர்சனம். அமெரிக்காவுடன் போட்டிபோட்டுக் கொண்டு ஒவ்வொரு வருடமும் தனது பாதுகாப்புபடைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்குவதுடன் ஆயுதங்களின் தரத்தை உயர்த்துவது, புதுப்புது ராணுவ தளவாடங்களை அறிமுகம் செய்வது என அடுத்தடுத்து தன்னை வளர்த்துக்கொண்டே செல்கிறது சீனா.

சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி அந்நாட்டை மற்றைய துறைகளிலும்  வளர்த்தெடுத்து வருகின்றது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு மையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013ஆம் ஆண்டே ஆய்வு விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு ஏவியது. இதில் பயணித்த சீன விஞ்ஞானிகள் விண்வெளியில் தமது ஆய்வுகளை பதினைந்து நாட்கள் நடாத்திவிட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது போலும்,  சீன ரயில்களின் வேகம் மணிக்கு 300_400 km 500km கூட பயணித்து அன்றாடம் வேலைக்கு சென்றுவரும்  மக்கள்கூட சீனாவில்  இருக்கின்றனர். ஏனெனில் அவர்களது பயணநேரம் 500kmக வெறும் இரண்டு மணிநேரமே . இதில் முக்கியமான விடயம் இந்த அதிவேக ரயில்கள் எல்லாமுமே சீனர்கள் வடிவமைத்து தயாரித்தவை ! சொந்த தொழில்நுற்பம் .

எந்த  நாடுகளிலிருந்தும் பேரம்பேசி வாங்கியவவை அல்ல . இதற்கெல்லாம் முக்கியமான அடித்தளம் ஆராச்சிகளை ஊக்குவிப்பது ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகை அளப்பரியது . இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் சீனர்கள். அதனால் தான் இன்று அனைத்து  தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும்   சீனர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்.

குண்டூசி முதல் ஏவுகணைவரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்பு. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அத்தனை எலக்ட்ரானிக் பொருட்களும் சீன தயாரிப்பு. நாமெல்லாம் குடிசை தொழிலாக மிளகாய்  பக்கெற்றுக்களை  போடுவோம் இல்லை பீடி சுற்றுவோம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களை செய்வது செல்போன்களை செய்வது என இருக்கிறார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் தைத்த ஆடைகள் உணவுப்பொருட்கள், வீட்டு  உபயோகப்பொருட்கள், மடிக்கணினிகள் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்,  பட்டாசுகள்  முதற்கொண்டு அழகுசாதன பொருட்கள்  வரை அத்தனையும் “made in china “ !  உலக நாடுகள் பலவற்றிலும் சீன தயாரிப்புகளை விற்பதற்கென்றே பெரிய பெரிய அங்காடிகளை திறந்துள்ளார் சீனர்கள்  . (நம்முடைய நாட்டின் one galle face சீன அங்காடி  இதற்கு ஒரு உதாரணம்.

விண்வெளி ஆராய்ச்சியா ? ராக்கெட் தயாரிப்பா ? செயற்கை கோள்களா ? ஏவுகணைகளா ? எதுவாக இருந்தாலும் சீனர்கள் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள். உலக வர்த்தகத்திற்கு ஆங்கிலம் மிகவும் முக்கியமென்பதை உணர்ந்த சீனர்கள் இன்று அதிவேகமாக ஆங்கிலத்தையும் படிக்கின்றார்கள் . கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் அதிகமாக விற்ற புத்தகங்களின்  பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஆங்கில டிக்ஷனரி.

மக்களுக்கு சொந்தமாக வீடுகள் , குடிநீர் மின்சாரம் உற்பட அடிப்படை வசதிகள் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் நிறைந்த ஊர்கள் , தரமான சாலைகள் , போக்குவரத்து வசதிகள் , மருத்துவ வசதிகள் , எல்லோர்க்கும் பொதுவான அடிப்படை இலவசகல்வி யாவர்க்கும் பொதுவான சட்டமும் நியாயமான தண்டனைகளும் அனைத்து  விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது.

விதி மீறல்களுக்கு சரியான தண்டனை , பொது இடத்தில சுத்தம் , திருட்டு வன்முறை போன்றவை நிகழாத   வண்ணம் அடிப்படை பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்  ஊழல் லஞ்சம் போன்றவை இடம்பெறாத வண்ணம் அவதானித்தல் போன்ற சகலமும் பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்ட ஓர் நாடாக இருக்கும் சீனா இன்று மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது . இது எப்படி சாத்தியமானது ?

ஜப்பான் போன்றதொரு குட்டி  நாட்டிடம் வீழ்ந்துகிடந்த  மூட பழக்கவழக்கங்கள் நிறைந்த  பழமைவாதம் மிகுந்திருந்த சீனாவில் இதெல்லாம் எப்படி சாத்தியமானது ? இந்த கேள்விக்கான விடை மாசேதுங் ! சீனா இந்தியாவைப் போலவே ஒரு பழமையான பிரிவுகள் நிறைந்த பண்ணை அடிமைமுறை நீடித்த ஒரு நாடு. மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயகம் ஏற்பட்டாலும் மக்கள் வாழ்க்கையில் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான் கம்யூனிச தத்துவத்தை வளர்த்தெடுத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ . சீனாவின் தலைவரான மாவோ சீனாவின் தலையெழுத்தையே  மாற்றினார் . புரட்சியின் தொடர்ச்சியாக கலாசார புரட்சியை மேற்கொண்டு மூட பழக்க வழக்கங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் களைந்து நாட்டையே புரட்டிப்போட்டார். 50 வருடங்களுக்கு முன்பே வல்லரசு சீனாவிற்கு அடித்தளமிட்டார் .

மாவோவின் இழப்புக்கு பின்னரான சீன தலைவர்கள் கம்யூனிச தத்துவத்தில்  இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கினாலும் சீனாவின் வளர்ச்சி தடைப்படவேயில்லை . சீனாவின் தற்போதைய அதிபரான ஜி ஜிம்பிங்  (Xi Jinping) கம்யூனிச தத்துவதிலிருந்து பெருமளவு விலகி ஒரு வல்லரசுக்கான பண்போடு சீனாவை நிர்வகித்து வருகின்றார் .

எது எப்படியாகிலும் சீனாவின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தும் அதேவேளை அச்சமூட்டவும் செய்கிறது. ஆபிரிக்காவில் அந்நாடு ஏராளமான முதலீடுகளை செய்து வருகின்றது.பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டிக்கொண்டே பழைய பட்டுப்பாதை திட்டத்தை தூசு தட்டி பெரிய வர்த்தக நடவடிக்கைகளுக்காக திட்டம் வகுக்கிறது . தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்துகிறது.அதுவும் செயற்கை தீவுகளை அமைத்துக்கொண்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தன் கடற்படை தளங்களை அமைத்து வருகின்றது. அறுபது வருடங்களுக்கு முன் ஓர் ஏழை தேசமாக இருந்தது.  இன்று உலக நாடுகளையெல்லாம் பிரம்மிக்க பவைத்துள்ள சீனாவின் இந்த செயல்களுக்கெல்லாம் பின்னால்  இருக்கப்போகும் “மாஸ்டர் பிளான்” என்னவாக இருக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php