2023 Nov 14
“The Lion King “ தொடருக்குப்பின் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அது பற்றி தேடவைத்ததென்னவோ விஜய்யின் லியோ திரைப்படம்தான் என்றாலும் மிகையில்லை. டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளில் , விகாரமான தோற்றத்துடன் , இறந்து அழுகிப்போன நிலையில் உள்ள மிருகங்களை கூட்டம்கூட்டமாக பிய்த்துத் தின்று நம்மையெல்லாம் அருவருக்கச் செய்யும் இந்த மிருகம் பற்றிய உண்மைத் தகவல்களைக் காட்டிலும் கட்டுக்கதைகளும் புரளிகளுமே அதிகமானோரிடத்தே பரவியுள்ளதெனலாம். பல்வேறு நாடுகளின் நாட்டார் கதைகளில் ஹைனா அதிபயங்கரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஹைனா கல்லறைகளில் இருக்கும் பிணங்களைத் தின்னும் விலங்கு என்றுகூட ஒரு நம்பிக்கை உண்டாம். குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்று தின்னும் விலங்கு என்றுகூட பல இனக்குழுக்கள் இன்றும்கூட நம்புகின்றனராம் . பல நாட்டார் கதையாடல்களில் துரோகத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் ஹைனா அடையாளமாக சொல்லப்படுகிறது. இந்த விலங்கை சூனியக்காரிகளோடு பிணைத்துப் பேசும் பல இந்திய நாட்டார் கதைகளும் உண்டு. உண்மையில், ஹைனாக்களின் தோற்றமும், சில செயற்பாடுகளும் இந்தப் பயங்களுக்கும் அருவருப்புக்கும் வித்திட்டிருக்கலாம்.
கழுதைப்புலிகள் ஆபிரிக்கக் கண்டத்தினையே தமது பூர்வீகமாக கொண்டிருந்தபோதிலும் உலகின் பல பாகங்களிலும் அவற்றின் வகையறாக்கள் வாழ்ந்துவருகின்றன என்பதோடு, அவை striped hyena (Hyaena hyaena), the brown hyena (Parahyaena brunnea), the spotted hyena (Crocuta crocuta), aardwolf (Proteles cristata) என வகைபிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்குவகைகளில் the spotted hyena (Crocuta crocuta) என்கிற வகையே மிகப்பெரியவை. வன விலங்குகளிலேயே சிங்கம் மற்றும் புலிகளைவிட தாடை பலம் அதிகம் இருக்கும் உயிரினம் என்றால் அது கழுதை புலிதானாம். இதனால்தான் எவ்வளவு பெரிய உயிரினம் இறந்துகிடந்தாலும் அதன் எலும்புகள் முதற்கொண்டு அனைத்தையும் கழுதைப் புலிகள் சற்றுநேரத்தில் தின்று தீர்த்துவிடுகின்றனவாம். இப்படி மற்றைய விலங்குகளின் எலும்புகளை நொடிப்பொழுதில் நொறுக்கிவிடுவதால் இவற்றுக்கு “Bone crushers” என்கிற பட்ட பெயரும் உண்டு .
இப்படி பலசாலியாக இருக்கும் கழுதைப்புலிகள் தாய்வழி சமூகத்தைச் சார்ந்தவைபோலும். ஏனெனில் கூட்டம் கூட்டமாக வாழும் இவை பெண் தலமைத்துவத்தினைக்கொண்டவை . கழுதைப் புலிகள் எழுப்பும் சப்தம் மனிதர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதுபோல இருந்தாலும், அவை மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் இவ்வாறு சத்தம் எழுப்புவதில்லையாம். இரையை கண்டுவிட்டால் தனது சகாக்களுக்கு தகவல் அளிக்க மற்றும் பயம், பதற்றம், கோபத்தை
வெளிப்படுத்த இவ்வாறு சப்தம் எழுப்புகின்றன என்பதோடு மற்றைய பெரிய விலங்குகள் தம்மைத்தாக்கவரும்போதும் அவற்றை எச்சரிப்பதற்காகவும் இவ்வாறு சிரிப்பது போன்ற ஒலியினை ஏற்படுத்துமாம் .
பூனைக் குடும்பத்திற்கு நெருக்கமான இனம்தான் ஹைனா என்றாலும்கூட அதன் முகம் நாய் போன்ற அமைப்பினைக் கொண்டிருப்பதால் பலரும் அவற்றை நாய் குடும்பத்தினை சார்ந்த விலங்காக தவறாக கருதுவதும் உண்டு . கழுதைப்புலிகளின் வேட்டை முறைக்கு “Endurance hunt “ என்று பெயர். அதாவது, வேகமாக ஓடி இரையைப் பாய்ந்து பிடிப்பதோ, மறைந்திருந்து தாக்குவதோ இல்லாமல், துரத்தித் துரத்தி இரையைச் சோர்வுறச் செய்வது. இரை விலங்கு ஓரளவுக்கு மேல் சோர்ந்துவிடும். ஆனால், கழுதைப்புலிகள் விடாமல் சோர்வடையாமல் துரத்தும். ஓடி ஓடிக் களைப்படையும் இரைவிலங்கு, உயிர்போனாலும் பரவாயில்லை என்று சோர்ந்து நின்றுவிட அதன்பின் கொன்றுதின்னும் கழுதைப்புலி. ஓடி முடித்ததும் உடலைக் குளிர்விக்க ஹைனாவின் நீண்ட மூக்கு உதவுவதாகவும், அதனால்தான் இவற்றால் உடனே உணவு உண்ண முடிகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் விநோதமான முதுகு அமைப்பு, இதுபோன்ற நீண்ட வேட்டைகளின்போது ஆற்றலைப் பாதுகாக்க உதவுகிறது. எனினும், வேட்டையாடுகிற எல்லா தகுதிகளும் இருந்தாலும் கழுதைப்புலிகள் அவ்வளவு எளிதில் வேட்டையாடுவதில்லையாம். சிங்கமோ சிறுத்தையோ ஒரு இரையை வேட்டையாடும்வரையில் அசராமல் காத்திருக்கும் இவை , சிங்கம் இரையை வேட்டையாடி வீழ்த்திவிட்டால் ஒருவித ஓசையை வெளிப்படுத்தி மொத்த கழுதைப்புலி குழுவையும் வரவழைத்துக்கொண்டு சிங்கத்தை சூழ்ந்து வெறுப்பேற்றும். ஹைனாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடிய இரையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட , அதன்பின்னர் மொத்த ஹய்னா கூட்டமும் குறித்த இறையினை உண்டு தீர்த்துவிடும் .
பொதுவாக, கழுதைப்புலிகள் இரவு நேரத்திலேயே தமக்கான இரையினை தேடிச் சென்று ,பொழுது விடிவதற்குள் தம் இருப்பிடத்துக்கு வந்துவிடும். அடர்ந்த காட்டுக்குள் இறந்து கிடக்கும் விலங்குகளைத் தேடிப்போகும் கழுதைப்புலிகள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து, அழுகி, புழுக்கள் நெளியும் உடல் பாகத்தைக்கூடத் தின்று தீர்க்கின்றனவாம் இவற்றின் ஜீரண மண்டலத்தில் மிக பயங்கரமான பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்கொள்ளும் சக்தி இருப்பதால் எந்த வகை உணவை இவை சாப்பிட்டாலும் இதன் உடலுக்குக் எவ்வித பிரச்சினைகளும் வருவதில்லையாம். இதனால்தான் இவை “கானகத் தோட்டி” , என்றும் “காட்டின் துப்புரவாளர்” என்றும் அழைக்கப்படுகின்றனவாம் . ஆண் கழுதைப்புலிகளுக்கும் பெண் கழுதைப்புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி போன்றதோர் அமைப்பு பெண் கழுதைப்புலிகளுக்கும் இருப்பதால் , நீண்ட நெடுங் காலமாக கழுதைப்புலிகள் “இருபால்” இன விலங்காகவே கருத்தப்பட்டுவந்தது . இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர் (Pseudopenis). உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாறால் , சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். ஆணுறுப்பு போன்ற தோற்றம் மட்டுமல்லாமல், பெண்ணுறுப்புக்கு அருகில் போலி விதைப்பை (False scrotum) போன்ற ஓர் அமைப்பும் இருக்குமாம் . பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் குறி வாயிலாகத்தான் பிரசவிக்க முடியும். முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப்புலிகளில் 15% இறந்துவிடுவதாக கூறுகின்றன ஆய்வுகள் . சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழ்கின்றனவாம். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன. இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. பிறக்கும்போது மட்டும் கழுதைப்புலி இனத்திற்கு சவால் ஏற்படுவதில்லை, இணை சேர்ந்த பின்னும்கூட பெண் கழுதைப்புலிகளின் பெண் உறுப்பின் சிக்கலான அமைப்பால், ஆண் உயிரணுக்கள் சினைமுட்டையைச் சென்றடைய நீண்ட நேரம் பிடிக்கும் என்பதோடு , இந்தக்கால இடைவெளிக்குள் பெண்விலங்கு சிறுநீர் கழித்துவிட்டால் சிறுநீரோடு உயிரணுக்களும் வெளியேறிவிடும். ஏனெனில், பெண் கழுதைப்புலிகள் சிறுநீர் கழிக்க, இணைசேர, குட்டி போட எல்லாவற்றுக்குமே இந்த ஓர் உறுப்புதான் பயன்படுத்தப்படுகிறது போதாக்குறைக்கு இன்று மனிதர்களுக்கும் கழுதைப்புலிகளுக்குமிடையே ஏற்படும் மோதல்களினால் ஏராளமான கழுதைப்புலிகள் அழிக்கப்பட்டு வருவது அவற்றின் இருப்புக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.