கலை கலாசாரத்தை நாடி நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!

நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!

2020 Feb 27

நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே! - உன்
கொண்டை அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு..

இப் பாடலை எங்கோ கேட்டது போல உள்ளதா?
இதுவே நாம் மறந்த நாட்டார் பாடல்களில் ஒன்று…

நாட்டார் பாடல்கள் என்பது நாட்டு புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடவாழ்விலும் தொழில் செய்யும் இடங்களிலும் பணி நேரங்களிலும் தங்கள் களைப்பை குறைக்கும் வகையில் பாடப்படும் பாடல்களே நாட்டார் பாடல்கள் எனப்படும்.

வாய் மொழி இலக்கியம், நாடோடி பாடல்கள், நாட்டு பாடல்கள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபு வழி பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரை பாடல்கள் என நாட்டார் பாடல்கள் பல் வகை பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சின்ன சுவாமி சுப்புரமணி பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் நாட்டார் பாடலில் ஈடுபாடு காட்டியதுடன் தமது பல்வேறு பாடல்களில் நாட்டார் பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள். பிற இலக்கியங்களை போலவே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.

1876-1878 ஆம், ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னையில் கடும் பஞ்சம் நிலவியது. அக்காலகட்டத்தில் ஏற்ப்பட்ட தமிழர் திருமணம், தமிழர் கலாசார சடங்குகள் முதலிய அனைத்தையும் பற்றிய தகவல்கள் உள்ளடக்கியதாக அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட நாட்டார் பாடல்கள் அமைகிறது .

கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய “மலையருவி” என்ற நூலில் இருந்து……

தாது வருஷப் பஞ்சத்திலே – ஓ சாமியே
    தாய்வேறே பிள்ளைவேறே – ஓ சாமியே
    அறுபது வருசம் போயி – ஓ சாமியே
    அடுத்தாப் போலே தாதுதானே – ஓ சாமியே
    தைப் பொங்கல் காலத்திலே – ஓ சாமியே
    தயிருக்கும் பஞ்சம் வந்ததே – ஓ சாமியே
    மாசி மாதத் துவக்கத்திலே – ஓ சாமியே
    மாடுகளும் பட்டினியே – ஓ சாமியே
    பங்குனிக் கடைசியிலே – ஓ சாமியே
    பால் மாடெல்லாம் செத்துப் போச்சே – ஓ சாமியே

 

சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை

தாலாட்டுப்பாட்டு ,முளைப்பாரிப்பாட்டு அல்லது கும்மிப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு,
நடைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிப்பாட்டு, நடவுப்பாட்டு, நெற்குத்திப்பாட்டு என வகைப்படுத்தலாம்.

மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையிலும் ஏதோ ஒரு வகை ஓசை முறையை பயன்படுத்தி தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து பாடப்பட்ட நம் தமிழர் நாட்டார் பாடல்களை நாம் மறக்காமல் நம் எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php