கலை கலாசாரத்தை நாடி தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

2022 Oct 21

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குளித்துவிட்டு வாங்கி வைத்த புத்தாடையை அணிந்துகொண்டு ஒப்பனைக்கும் நன்றாக நேரமொதுக்கி ‘நல்லா இரு” என்ற வாழ்த்துக்கும் ஆயிரம் ரூபா நோட்டுக்கும் வீட்டிலுள்ள பெரியவர் காலில் விழுந்து ஆசி பெற்று கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்ப்பதை விடுத்து வரும் போகும் நபர்களையும் அவர்கள் அணிந்துள்ள ஆடைகளையும் பார்த்துவிட்டு ஒரு வழியாக தரிசனம் முடிந்து பின் உற்றார் உறவினர் தோழர் வீடுகளுக்கு அழையா விருந்தினராகச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து அங்கு கொஞ்சம் அரட்டைகளும் அடித்து உண்ணும் உணவை விருந்து போல பங்குபோட்டுண்டு வீட்டு முற்றத்தில் ரங்கோலி கோலம் போட்டு மதிலில் ஒளிர்விடும் விளக்கு ஏற்றி மத்தாப்பு அனைத்தையும் தாறுமாறாக அங்காங்கே வெடிக்கவிட்டு “டும் டும்” என்ற சத்தத்தோடு முடிந்திடும் அந்த நாள் தீபாவளித் திருநாள்.

பொதுவாக பண்டிகையென்றாலே எந்த கோயிலுக்குச் செல்வது பற்றி யோசிப்பதை விட என்ன ஆடை வாங்குவது என்றே குழப்பமே அதிகமாக இருக்கிறது. அதுவும் தீபாவளி வருவதற்கு பத்து நாட்களுக்கு முன் ஏன் ஒரு மாதத்திற்கு முன்னே சிந்தனை செய்யவேண்டியிருக்கும். கொண்டாட்டம் தீபாவளி மட்டுமல்ல ஷாப்பிங் செய்வதும் தான். கடைத்தெருக்கள் எல்லாம் தேடி அலைந்து தன் மனதிற்கு பிடித்த ஆடையைத் தெரிவு செய்து வாங்குவதற்குள் ஒரு நாளே போய்விடும். பத்து கடைகள் ஏறி இறங்கி கடைசியாக போகும் ஒரு கடையில் பிடித்த ஆடையைத் தெரிவுசெய்த பின்னர் ‘அப்பா.. ஒரு வழியா வாங்கியாச்சு” என்று பெருமூச்சு விடும் பரபரப்பான ஷொப்பிங் அனுபவத்தை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். தீபாவளி ஷொப்பிங் செய்வது பெரும்பாடுதான். நவீன ரக மற்றும் ட்ரெண்டியான ஆடைகளைத் தேடி படையெடுக்கும் இளம் தலைமுறையினரின் கூட்டம் ஒரு பக்கம். பட்டுபுடவை, குர்தா, சுடிதார் என புதிய ரக விழாக்கால ஆடைகளை தேடி அலையும் மகளிர் கூட்டம் இன்னொரு பக்கமென பண்டிகை காலத்தில் கடைத்தெருக்கள் பிஸியாகவே இருக்கும்.

தீபாவளி அன்று பெரும்பாலும் மக்கள் பாரம்பரிய உடைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் புடவைகளும் ஆண்கள் பட்டு வேஷ்டிகளும் தெரிவுசெய்கின்றனர். காலத்திற்கேற்றாற்போல நம் ஆடைத்தெரிவுகளும் மாற்றம் பெறுகிறது என்பது உண்மைதான். அதனால் தான் பாரம்பரிய உடைகளான புடவைகளும் வேஷ்டிகளும் தற்கால ஃபேஷன் வடிவமைப்பில் வெளிவந்து பலரையும் ஈர்க்கிறது.

சுருக்கு பதித்த (Ruffle Saree),

சல்வார் வடிவிலான தோத்தி ஸ்டைல் சாரி (Dhoti Style Saree),

அரைவாசிப்பகுதி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவை (Half and Half
Embroidered Saree),

நெட் சாரி(Net Saree),

பூக்கள் பதித்த அலங்கார சாரி (Floral Printed Party Wear Saree),
கோடுகள் – வரிகள் பதித்த சாரி (Stripes Printed Saree) போன்ற சாரிகள் நவீன வடிவமைப்பையேற்று இளம் பெண்களை பெரிதும் கவர்கின்றன.

அதிலும் இவ்வருடம் ஒரே நிறத்திலான லினென் (Linen sarees) மற்றும் காட்டன் சாரிகள்(cotton silk sarees) அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறது.

ஆண்களுக்கும் வேஷ்டிகள் தற்கால வடிவமைப்போடு வித்தியாசமாக சந்தைக்கு வருகிறது.
கோர்ட்டுடனான வேஷ்டி(Dhoti with Suit),

குர்த்தா வடிவில் வேஷ்டி(Dhoti with Tuxedo),

டீ என்ட் கார்டிகன் வேஷ்டி (Dhoti with Tee and Cardigan),

டெனிம் சேர்ட்டுடனான வேஷ்டி(Dhoti with Denim Shirt),

பிளேஸர், போ மற்றும் டை உடன் வேஷ்டி (Dhoti with a blazer and a Bow Tie),

நேரு சட்டையுடனான வேஷ்டி (Dhoti with Kurta and a Nehru Jacket),

கோர்ட் சூர்ட்டுடனான வேஷ்டி (Dhoti with Coat and a Shirt),
ஜோத்புரி சட்டையுடனான வேஷ்டி (Dhoti with Jodhpuri Jacket) போன்ற வேஷ்டிகள் தற்கால ஃபேஷன் வடிவமைப்போடு மக்களை கவர்ந்துவருகின்றன.

குறிப்பாக வேஷ்டி கட்ட விருப்பமில்லாதவர்கள் கூட தனக்கு பிடித்த முறையில் அதனைக் கட்டிக்கொண்டு திருப்தியடைகிறார்கள். வேஷ்டிகளை விதம் விதமாக கட்டுவதுதான் இப்போது ட்ரென்ட். குர்தா வடிவிலும் கோர்ட் வடிவிலும் வேஷ்டிகளை அணிந்து அனைவரினதும் பார்வையை ஈர்க்கின்றனர். மாஸான ஆண்களுக்கு ஸ்டைலாகவும் ட்ரென்டியாகவும் வேஷ்டிகள் அணியும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது. நவநாகரீக சாயல் கலந்த பாரம்பரிய ஆடைகளைத் தெரிவுசெய்து அணிந்து இவ்வருட தீபாவளியை ஸ்டைலாக கொண்டாடிடுங்கள்!

‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்.. பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்.’

அனைவருக்கும் Team நாடியின் தீபாவளி நல்வாழ்த்துகள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php