கலை கலாசாரத்தை நாடி பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

2022 Oct 31

பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா?
இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?’

‘குழந்தை பொறக்கலானா அப்போ அந்த பொண்ணுக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கு இவையெல்லாம் பெண்கள் மேல் இந்த சமூகம் எழுப்பும் விமர்சனங்கள். ஏன் பெண்பிள்ளைகள் பிறந்தாலே சாபக்கேடு என்று கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் சமூதாயமும் இருந்திருக்கிறது என்பதும் மறைக்க முடியாத உண்மைதான்.

வாசித்துக்கொண்டிருக்கும் போதே புரிந்திருக்கும் உங்களுக்கு இப்படியொரு சமுதாயத்தில் தான் நாமும் வாழ்கின்றோம் என்று.இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒரு பெண்ணென்றால் இது போன்ற விமர்சனங்களை நீங்களும் கேள்விப்பட்டோ அல்லது அனுபவித்தோ இருந்திருக்ககூடும். இத்தனை கேள்வி கேட்கும் இந்த சமூகம் உன் இலட்சியம் என்ன? உன் கனவு என்ன? உன் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே ஒரு பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்கிறது.
பன்னிரண்டு வயதில் பூப்படைவு. இருபது வயது கடந்தால் திருமணம். கணவன் இழந்தால் மறுமணம். அடுத்த வருடம் கையில் குழந்தை. இல்லையென்றால் பெயர் தரும் மலடி.

திருமணம் வரையில் சுதந்திரம் முடிந்தபிறகு சிறைதினம் இப்படி பெண்கள் சிலருக்கு வாழ்வதும் கூட ரணம் தான்.பெண்களின் வாழ்க்கை உண்மையிலேயே மீளமுடியாத போராட்டம்தான். அதிலும் மிகப்பெரிய போராட்டம் திருமணவாழ்வு.ஒரு பெண்ணின் விருப்பத்தை கேட்காமலேயே சில இடங்களில் திருமணம் நடக்கிறது. அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்யவும் தனி கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் நிச்சயம் பெண்களுக்கு உண்டு. ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து கனவுகளோடு வாழும் பெண்களை கல்யாண உறவமைத்து அவர்களின் வாழ்க்கையை வேறொரு பாதைக்கு திசைதிருப்புகின்றனர்.

பெண்கள் தம் வாழ்வையை பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்.இதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு நம் அம்மாக்கள் தான். தம்மை சுற்றியிருப்பவர்களுக்கு செய்யும் அன்றாட சேவைகளே தன்னுடைய கடமைகளாக கருதிவாழ்கிறவர்கள் பெண்கள்தான். பெண்கள் பிறந்ததிலிருந்து வளர்ந்து வர வர சமூதாயத்தின் கண்ணோட்டத்திற்குள் அகப்பட்டுவிடுவார்கள்.நான் கூறியது போல் விமர்சனங்களும் எழக்கூடும். பெண்கள் சுதந்திரமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா?பின்பா? என்ற கேள்வி எழுப்பினால் பெரும்பாலான பதில்கள் முன்பு என்றுதானிருக்கும்.பெண்பிள்ளைகள் பெற்றோர்களுடன் இருக்கும் போது தான் சுதந்திரமாகவும்,தமக்கு பிடித்தமாதிரியும் இருப்பார்கள்.வளரும் காலத்தில் தம்முடைய பெற்றோருடன் சுதந்திரமாக வெளிப்படையாக வாழும் வாழ்க்கையை தான் பெண்பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்.

ஒப்பனைகள் திருமணத்திற்கு முன்னரான வாழ்க்ககையில் தம்மை அழகாக பாவித்து அலங்கரித்து இன்பம் கொள்ளும் பெண்களுக்கு திருமணம் முடிந்தால் தம்மை அலங்கரிப்பதற்கு கூட நேரமொதுக்குவதில்லை. பேரழகிகள் என்று எண்ணி திருமணத்திற்கு முன்பு தம்மை ஒப்பணை செய்யும் பெண்கள் திருமணமான பின் தலை வாரி பூ வைப்பதை கூட விரும்பிசெய்வதில்லை. தம்மை தாமே கவனித்துக்கொண்டு அலங்கரித்து அழகாக இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து தம்மை எங்கு கவனித்துகொள்ள போகிறார்கள்? கணவரையும் அவர் குடும்பத்தையும் தம் குழந்தைகளையும் கவனிப்பதிலேயே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அதிலும் வேடிக்கையான விடயம் என்ன தெரியுமா? திருமணத்திற்கு முன் ஒல்லியாக
ஸ்ரோபரி பழம் போலிருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து பழுத்துவிட்ட பலாபழம் போல் மாறிவிடுகின்றனர். அவர்கள் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு சில சமயம் தோன்றாது காரணம் வீட்டு சூழ்நிலைதான்.
கணவருக்காகவும் தம் புகுந்த வீட்டிற்காகவும் தமக்கு பிடித்த வேலைகளை கூட திருமணமான பெண்கள் செய்ய முன்வருவதில்லை.

கணவருக்காக தமக்கு பிடித்த வேலைகளை கூடத் தியாகம் செய்யும் எத்தனையோ பெண்கள் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.தம்முடைய கனவுகளை மூட்டை கட்டி வைத்து. பெண்கள் எந்த துறையை தேர்வு செய்து சிறப்பாக செயற்படுகின்றனரோ அதில் அவர்கள் சாதிக்க நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்.சமையலறையிலும் வீட்டுக்குள்ளேயும் தம் வாழ்நாளை கழித்துக்கொள்ளும் பெண்கள் பலரும் தனக்கென்று ஒரு வேலைசெய்யவேண்டும். நிறைய சம்பாதிக்கவேண்டுமென்ற விருப்பத்தோடு வாழ்பவர்கள்.

அவர்களிடம் அவர்களுக்கு பிடித்த தொழில் என்னவென்று கேட்டு அதனை அவர்கள் செய்ய இடமளிக்கவேண்டும். அதுவரையில் வெளியில் சென்று வேலை பார்த்த பெண்கள் சுயதொழிலை ஏற்படுத்தும் திறமையும் கொண்டவர்கள். எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பின் சுய வியாபாரம் சுயதொழில் போன்றவற்றை மேற்கொண்டு சம்பாதிக்கின்றனர். சாதிக்கத்துடிக்கும் பெண்களை முடக்கிப்போடக்கூடாது. அவர்களின் திறமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கக்கூடாது. திருமணமாகினாலுமே அவர்களுக்கு அவர்களுக்கு பணிபுரிய விருப்பம் இருந்தால் அதற்கு இடமளியுங்கள்.சாதிக்கும் எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பிறகு தான் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இல்வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்கும் ஆதரவும் ஊக்கமும் அவளை உச்சம் தொட செய்யும். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதுமில்லை. அப்படியிருக்க சாதிக்கும் கனவோடு இருக்கும் பல பெண்களை கல்யாணமெனும் பாசக்கயிற்றில் கட்டிபோடுகின்றனர். பல பெண்கள் இதனால் தம்முடைய விருப்பத்தை செய்யாமல் கணவருக்காக விட்டுக் கொடுக்கின்றனர். ஆணோ பெண்ணோ கனவுகள் யாருக்கும் வரலாம்.திருமணத்திற்கு முன்னோ பின்னோ அது எப்போதும் வரலாம்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மையென்றால் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அதுவும் திருமணமான பெண்ணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் அவளின் கணவர் தான் இருப்பார். விஞ்ஞானத்துறையிலிருந்து விளையாட்டுத்துறை வரை பெண்கள் தடம்பதித்து வருகின்றனர். அதிலும் திருமணமான பெண்கள் பலதுறைகளில் சாதித்துவருகின்றனர்.

திருமணமான உங்கள் வீட்டு பெண்களுக்குள்ளேயும் பல திறமைகள் ஒழிந்திருக்கும். மறைந்திருக்கும். சிலசமயம் புதைந்திருக்கும்.அவற்றை வெளிக்கொணர்ந்து உலகிற்கு உணர்த்துங்கள்.வரம்புகளற்ற பெண்களின் கனவுகளை மஞ்சற்கயிறு கட்டிவிடக்கூடாது. சுதந்திரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்கு தாலி வேலி போடக்கூடாது. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முடிந்த அளவு ஆதரவும் அன்பும் கொடுத்தாலே போதும் வீட்டுக்கொரு பெண் நிச்சயம் சாதனைப்பெண்தான்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php