2023 Nov 7
இந்தியா இலங்கை மட்டுமல்ல இந்த உலகம் முழுவதிலுமே இந்து சமய கோவில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்த கோவில்கள் அனைத்திலும் ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக பூசாரிகளாக இருக்கின்றார்கள் . அவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்லும் அனுமதி பெற்றவர்களாககவும் காணப்படுகின்றனர் . இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் கோவில்களில் குருக்களாக இருப்பதற்கு பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை? பெண்கள் யாரும் கோயில் கருவறைக்குள் நுழையமுடியாத சூழ்நிலை இன்றுவரை இறுக்கமாக கடைபிடிக்கப்படுவதன் பின்னணி என்ன ?
” கோவில்களின் தேசம் ” என சிறப்புப்பெயருடன் திகழும் இந்தியாவில் , ஆலய நுழைவுப் போராட்டம் தொடங்கி, பரம்பரை அர்ச்சகர்களின் நியமனத்தைத் தடை செய்யும் போராட்டம் வரை தமிழ்நாடானது கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் , கோயில்களில் பெண்களின் பங்கு என்பதும் , ஆகமக் கோயில்களில் பெண் அர்ச்சகர்களின் நியமனம் என்பதும் இதுவரை பேசாப்பொருள்தான். கோவில் கருவறைக்குள் பெண்களின் நுழைவு என்பது , பெண் ஏன் கோவிலில் அர்ச்சகராகவோ பூசகராகவோ இருக்கக்கூடாது என்பதுடன் தொடர்புபடுத்தி ஆராயப்படவேண்டியவொன்று .
சபரிமலைபோன்ற கோவில்களுக்குள் பெண்கள் நுழைவதற்குக்கூட கட்டுப்பாடுள்ள நிலையில் , கோவில்களின் கருவறைக்குள் செல்ல வேண்டும் எனும் கோரிக்கையானது மதவாதிகளினால் மட்டுமல்ல , அடிப்படைவாத பெண்களால்கூட ஒப்புக்கொள்ளவியளவில்லை என்பதே யதார்த்தம் . இதுநாள் வரையில் பெண்கள் ஏன் அர்ச்சகராகக் கூடாது என்ற கேள்வி பரவலாக எழவில்லை என்றாலும் தற்போது பெண்கள் அர்ச்சகராவது என்பது அவர்களது உரிமைக்கான பிரச்சனையாக சிலரால் பார்க்கப்படுகின்றது .
ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்கள், கடைப்பிடிக்காத கோயில்கள் என பலதரப்பட்ட கோயில்கள் உள்ளன. காலங்காலமாக சிவன் கோயில்களில் சிவாச்சாரிய குறுக்கல்களும் , வைணவ கோயில்களில் பட்டாச்சாரியார்களும் அர்ச்சனை செய்வார்கள். சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்பவர்கள் பூசாரிகள். இவை சாதி மற்றும் குடும்ப உரிமை போன்றதொரு அமைவென்றாலும் தகும் . எனினும் இங்கேயிருக்கும் ஒரே ஒற்றுமை கருவறைக்குள் நுழையும் தகுதி அந்தந்த வகுப்பின் ஆண்களுக்கு மாத்திரமே இருப்பதாக கூறப்பட்டு வந்திருப்பதாகும்.
இந்துக் கோயில்களுக்கும் சிறுதெய்வ வழிபாடுகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு. சிறுதெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்த அல்லது இருக்கின்ற கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இல்லாவிட்டாலும், சமயச் சடங்குகளில் முக்கியப் பங்குவகித்தனர். ஆனால், வேதங்களைப் படிக்கவும் ஆன்மீக ஞானம் பெறவும் தகுதியுடையவர்கள் பிராமண ஆண்களே எனப் பிராமணர்களுக்குள் பிடிவாதம் இருந்ததுபோலவே மற்ற சமூகத்தினரும் பெண்களைச் சமயச் சடங்குகள் ஆற்ற மறுப்புத் தெரிவித்தனர் என்பதே கசப்பான உண்மை .
பெண் கருவறைக்குள் நுழையவோ , அர்ச்சகராக இருக்க முற்பட்டாலோ ஏன் இத்தனை எதிர்ப்பு? மாதவிடாய் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முதலாவதாக, யாகம் நடத்துபவருக்கும் , புரோகிதருக்கும் இடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர் கையில் “கங்கணம் ” கட்ட வேண்டும். அந்த வகையில்ஒரு ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் . அடுத்து, யாகம் முடிந்ததும் யாகத்தினை நடத்துபவர் புரோகிதருக்குச் “சம்பாவனை ” (பணம் )கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடாகக் கருதப்படுமாம் கலாசார பார்வையில்!
பண்டைய காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருந்தபோதும் பொருளாதார வளர்ச்சி அடையும் எண்ணம் துளிர்த்தவுடன், ஆண்கள் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல் சமய, ஆன்மிகத் தளத்திலும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். அதுமட்டுமன்றி , முன்பெல்லாம் பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டு குடும்பப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் பல ஆண்டுகள் தொடர்ந்து பயின்றால் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்கிற அந்த மனோநிலை இன்றுவரை தொடர்வதும் பெண் அர்ச்சகர்கள் உருவாகாமைக்கு ஓர் காரணமாகவும் சொல்லப்படுகின்றது .
வேத நூல்கள் உள்ளிட்ட இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை என்றே விவாதிக்கப்படுகின்றது . புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வேதம் பயின்றனர். திருமணம் முடித்தோ அல்லது திருமணம் முடிக்காமலோ “பிரம்மவாதினி” எனும் பெண் பூணூல் அணிந்து வேதம் பயின்றதற்கான எடுத்துக்காட்டுகள் உண்டு . வேத குருக்களாகப் பணியாற்றியதைத் தவிரவும் கோயில் விக்ரகங்களுக்கு முக்கிய அபிஷேகப் பூசைகளும் பெண்கள் செய்திருக்கின்றனர். என்கிற வாதங்கள் உண்டு. தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவனைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே, முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. மேலும், திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டதாக பெரிய புராணம் கூறுகின்றது .
அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்தபோது, தானே சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தபோது , பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே, அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது பிடித்துக்கொண்டபோது இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டு தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்ததாக பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மத நூல்களும் சம்பிரதாயங்களும் மனிதர்களால் அதிலும் குறிப்பாக அதிகாரம் கொண்ட ஆண்களால் உருவாக்கப்பட்டவையே . காலமாற்றத்திற்கு ஏற்ப அவை மாற்றம் காண்பதென்பது யாராலும் தடுக்கவியலாதவொன்று . இன்று இது அவசியம்தானா? என யோசிக்கவைக்கும் பல விடயங்கள் நாளை அவசியமானதாகவோ அல்லது சாத்தியப்படும் ஒன்றாகவோ மாறக்கூடும் . எது எப்படியோ கோவில் கற்பகிரகத்தினுள் நுழைய வேண்டும் என்பதோ , தானொரு அர்ச்சகராக வரவேண்டும் எனும் எண்ணமோ நம்மில் எத்தனை பெண்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை . ஏனெனில் , கோவில் அர்ச்சகர் பணி என்பது பொருளாதார நோக்கத்தோடு நோக்கின் மிகப்பெரிய வருமானத்தினை கொடுக்கக்கூடிய ஒன்றல்ல . ஆக, நம் பெண்கள் அதற்காக கடினப்பட்டு படித்து முடித்து அந்த பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்களா என்றால் , அந்த எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கும் . (ஒரு காலகட்டம்வரையில் இறை பணி என்பது ஆன்மீகம் என்ற நிலையில் இருந்தது இன்றோ எல்லாம் வணிக மயம் என்கிற நிலையில் )
எழுத்து :- பிரியா ராமநாதன்