2020 Jul 6
பண்டைத் தமிழர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்கவழக்கத்திலும் ஏதோவோர் நன்மையினை நோக்கமாகக் கொண்டே கடைப்பிடித்தனர். இதை அறியாத நாம் அவற்றை மதம் சார்ந்த விடயமாக பார்க்கின்றோம்.
இதோ…! உங்களுக்காக, நம்மிடம் அரிதாகிப் போன நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில பழக்க வழக்கங்களும் அவற்றிற்கான காரணங்களும்
கைகூப்பி வணங்குதல்
இன்று கொரோனாவினால் நாம் பேணும் சமூக இடைவெளியினை அன்றே நம் முன்னோர்கள் நமக்கு கைகூப்பி வணங்கி எதிரில் உள்ளவரை வாழ்த்துவதன் மூலம் அறிமுகப்படுத்தி விட்டனர். இதன் பின் மறைந்திருக்கும் உண்மையான காரணம் தான் என்ன…? நம் உடற் குருதி சுற்றோட்டம் சந்திக்கும் இடம் விரல்களாகும். நாம் விரல்களை ஒன்றோடு ஒன்றாக கூப்பி வணங்கும் போது நம் கண், காது, மூளைகளுள் ஓர் அழுத்தம் உண்டாகும். இதனால் ஒருவரை சந்திக்கும் போது அந்நபரின் முகம் மற்றும் அவருடன் நாம் மேற்க்கொள்ளவிருக்கும் உரையாடல் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
வீட்டிற்குள் நுழையும் முன் கை, கால், முகம் கழுவி நுழைதல்
நம் சிலரின் வீடுகளில் இன்னும் இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வெளியில் சென்று வந்தவுடன் “கை, கால் கழுவிட்டு வா..!” என நம் வீட்டின் பெரியோர்கள் வலியுறுத்தியிருப்பர். அச்சமயம் நமக்கு அது எரிச்சல் தரும் ஒன்றாகவே தோன்றும். வெளி இடங்களில் முக்கியமாக சன நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நோய்க் கிருமிகளின் தாக்கம் அதிகமாகயிருக்கும். இதனால் வீட்டினுள் நுழைந்தவுடன் நம் புறத்தினை சுத்தம் செய்து விட்டு நுழைய சொல்கின்றனர். இறந்த வீடுகளுக்கு சென்று வரும் போது பின் வாசல் வழியாக சென்று ஆடைகளை கழற்றி மஞ்சள் கலந்த நீரில் நீராடச் சொல்வதற்கான காரணமும் இதுவே.
வீட்டு வாசலில் துளசிச் செடி
அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் வீட்டில் காணக்கூடிய பொதுவான ஒன்றாக இந்த துளசிச் செடி விளங்குகிறது. வீட்டின் வாசலில் துளசிச் செடி வைக்க வேண்டும் என வலியுறுத்தக் காரணம், ஏனைய தாவரங்களை விட காபனீரொட்சைட்டை உள்வாங்கி அதிகமான ஒட்சிசனை துளசிச் செடி வெளியிடுகிறது. மேலும் துளசிச் செடியினை சுற்றி அதிகாலை வலம் வருவதனால் சுத்தமான ஒட்சிசனை சுவாசிக்க முடியும். இதில் அதிகம் மருத்துவ குணமும் உண்டு. துளசிச் செடியின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து உட்கொண்டால் உடலின் வெப்பம் தணியும். துளசி இலைகள் பிழிந்து இஞ்சிச்சாறு மற்றும் தேன் கலந்து உணடால் சளி நீங்கி விடும்.
சாணம் தெளித்து கோலமிடல்
இன்று நாம் கோலமிடுவதை அழகுக்காக என எண்ணி ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டி விடுகிறோம். வாசலை கூட்டிப் பெருக்கி சாணம் தெளித்து கோலமிடுவதற்கான காரணங்கள் பல உண்டு.
சூரிய வெளிச்சம் வரும் முன் அதிகாலை எழுந்து கோலமிடுவதால் உடலுக்கு தேவையன ஒட்சிசன் கிடைக்கப்பெறும். சாணம் தெளிப்பதால் புழுதி பறக்காது மண் கெட்டிப்படும் மற்றும் கிருமி நாசினியாகவும் செயற்படுகிறது. கோலமிடுவதால் ஈ, எறும்பு போன்ற சிறிய உயிரினங்களின் பசி போக்கப்படுகிறது. கோலமிடும் போது சிந்தனை சிதறாது ஒன்றுபடுவதோடு கண் பார்வையும் சீராகிறது. குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது சிறந்த உடற்பயிற்சியாகவும் மாறுகிறது.
மாவிலை தோரணம்
மாவிலை தோரணம் மரத்திலிருந்து பறிக்கப்பட்டாலும் கூட காபனீரொட்சைட்டினை ஒட்சிசனாக மாற்றி தருகிறது. இதன் பச்சைத் தன்மை அதிகம் நீடிப்பதால் மனதிற்கு புத்துணர்வும், இலகுவான தன்மையும் கிடைக்கப் பெறும். மனதிற்கு அமைதியும் தருகிறது. மாவிலை கட்டப்படும் இடத்தை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும்.
இவ்வாறாக, அறிவியல் ரீதியான நல்ல பயன் தரக்கூடிய பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் நமக்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை நாம் முட்டாள் தனமென ஒதுக்கி வாழ்வதை தவிர்ப்போம். இவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.