2020 Jul 8
“வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்”
இப்பழமொழியினை அடிக்கடி கூற கேட்டிருப்போம். உண்மையில் நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் தூரமாகிறது. வாய்விட்டு சிரிப்பதால் நோய்கள் வராது காத்துக் கொள்வதோடு நம்முள்ளிருக்கும் நோய்களும் பட்டுப் போகிறது.
குழந்தையாக தத்தி தவழ்ந்து நடந்த காலங்களில் “நான் பெரியவனாக வேண்டும்” “நான் வளர வேண்டும்” என செல்ல மொழிப் பேசி திரிந்தோம். நம் பெற்றோரும் “வளரலாம் காலம் உண்டு” என உரைத்து எம்மை அள்ளி அணைத்த காலங்கள் நினைவிருக்கிறதா? இன்று நம் மழலைப் பருவ கனவு நினைவாகி விட்டது. ஆனால் நம் மனம் தேடுவது என்னவோ காலத்தோடு கரைந்துப் போன மழலைப் பருவத்தை தான்… காரணம் என்னவென்றால் அப் பருவத்தில் இருந்த சந்தோஷம் இப்போது நம்மிடம் இல்லை. குழந்தைகள் ஓர் நாளைக்கு சராசரியாக 500 தடவைக்கு மேல் சிரிக்கின்றனர். ஆனால் பெரியவர்கள் நாளொன்றுக்கு 15 தடவைக்கும் குறைவாகவே சிரிக்கின்றனர். நம்மில் சிலர் காலப் போக்கில் மெய் புன்னகை தொலைத்து போலி புன்னகை மாட்டிக் கொண்டு நகர்கிறோம்.
குழந்தைகளை கவனித்துப் பாருங்கள். எந்த நேரமும் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியாகவும் ஓடித் திரிவார்கள். அவர்களின் கள்ளம் கபடமற்ற புன்னகையில் நம் துன்பம் தொலைந்து விடுகிறது. அவர்களின் புன்னகை தான் அவர்களின் துடிதுடிப்பான செய்கைக்கு காரணமாகிறது.
வாய்விட்டு சிரிக்கும் போது நாம் அதிக பிராண வாயுவை சுவாசிக்கின்றோம். இதனால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. இதயத்தில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் குறைவு. நாம் அதிகமாக சிரிக்கும் போது நம் ஹோர்மன்கள் தூண்டப்பட்டு உடலை சமநிலையை வைத்திருக்கிறது. மூளையினை சுறுசுறுப்பானதாக வைத்திருக்கிறது.
நாம் எந்த அளவிற்கு சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவிற்கு நம் ஆயுளை நீடித்துக் கொள்ள முடியும். சிரிக்கும் போது முகத்தின் தசைகளும் புதுப் பொலிவும் அழகும் இளமையான தோற்றமும் பெறுகின்றன.
“துன்பம் வரும் போது சிரி” என்ற முதுமொழிக்கு ஏற்ப எப்போதும் சிரித்த படி துன்பத்தையும் சோதனைகளையும் எதிர்க் கொண்டு நலமுடனும் அழகுடனும் வாழ்வோம்!