2020 Jul 8
நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது.
இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள் நம் நாட்டின் இலங்கை மக்களிடையே புனிதமான ஓர் அடையாளமாக விளங்குகிறது. இதற்கு யானைகள் பெரஹராக்களில் அலங்கரிக்கப்பட்டு வலம் வருவதும் பௌத்த சமய சடங்குகளின் போது யானைகள் முக்கிய இடம் பெறுவதும், பிரசித்திப் பெற்ற பௌத்த விகாரைகளில் யானைகள் காணப்படுவதும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இன்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. உதாரணம் : பிரித்தானிய இலங்கைச் சின்னம், போர்த்துக்கய இலங்கைச் சின்னம், ஒல்லாந்து இலங்கைச் சின்னமாக யானை இடம் பெற்றது. பிரித்தானிய இலங்கை கொடியிலும் 1875 முதல் 1948 வரை யானை காணப்பட்டது.
இலங்கையில் காணப்படும் யானைகள் ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றாகும். இதனை Elephas maximus maximus என அடையாளப்படுத்துவர். இதனை 1758யில் முதலில் கரோலஸ் லின்னேயஸ் என்பவர் குறிப்பிட்டார். இவை உலர் வலயம், ஈர வலயம், குளிர் மலைப் பிரதேசம் மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் அதிகம் காணக் கூடியதாகவுள்ளன. இந்த யானைகள் ஆபிரிக்காவை சேர்ந்த யானைகளை விட சிறியனவாகவும் தலையில் பெரிய உடலமைப்பினை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றின் தும்பிக்கையின் நுனிப்பகுதியில் சிறிய விரல் போன்ற அமைப்பு காணப்படும். இவற்றின் பின் புறம் புடைத்து அல்லது சமதளமாக அமைந்திருக்கும். இவ் இன யானைகளில் ஆண் யானைகளை விட பெண் யானைகள் உருவத்தில் சிறியவையாகவும் தந்தம் சிறியதாக அல்லது தந்தம் அற்றும் காணப்படும். இவை தமது தோளினை 2-3.5 மீற்றர் வரை எழுப்பக் கூடியன. இவற்றின் எடை 2,000-5,500 கிலோ கிராம் வரை உடையன. இவை 19 சோடி விலா என்புகளை கொண்டது. இவ் யானைகளின் தோல் நிறம் இந்தியாவை சேர்ந்த யானைகளை விட கருமையானதாகும். இவற்றின் வயிறு, காது, முகம் மற்றும் தும்பிக்கை ஆகிய பகுதிகளில் மங்கல் புள்ளிகள் காணப்படும். இவற்றில் 7 வீதமான யானைகள் மட்டுமே தந்தமுடையன. ஆனால் 2011யில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கையானது 2 வீதமான யானைகள் மட்டுமே தந்தமுடையன என தெரிவிக்கிறது. இவை நாளொன்றுக்கு 150 கிலோகிராம் வரை உணவாகக் (தாவரங்கள்) உட்கொள்கின்றன.
இலங்கை யானைகள் அருகிய இனங்களில் ஒன்றாக 1986யில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியிலிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆகக் குறைவடைந்தமை 60-75 வருட கணக்கெடுப்பில் காணப்படுகிறது.
1830 வரை யானைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டமையால் அவற்றை கொல்பவர்களுக்கு அரசு சன்மானம் அளித்தது. இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே போனது. இதனால் 1829-1855 வரையான காலப்பகுதியில் ஏறத்தாள 6000 யானைகள் கொல்லப்பட்டன. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் நினைவுச் சின்ன வேட்டைக்காரர்களால் யானைகள் கொல்லப்பட்டன. இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் நிலக்கண்ணி வெடிகளால் யானைகள் அங்கவீனமாக்கப்பட்டும் கொல்லவும் பட்டன. 1990-1993 வரையான காலப்பகுதியில் 165 யானைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டன. 1994யில் ஏறத்தாள 196 யானைகள் துப்பாக்கியால் சுடப்பட்டும் நிலக்கண்ணி வெடிக்கு உட்பட்டும் இறந்தன. 20 யானைகள் முடமாக்கப்பட்டன. 1999-2006 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 100 யானைகள் கொல்லப்பட்டன. பயிர்களையும் வீடுகளையும் காப்பாற்றும் பொருட்டும் வரட்சி, பட்டினி, காடழிப்பு போன்றவற்றினை கருத்திற் கொண்டும் யானைகள் கொல்லப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் 80 யானைகள் வடக்கிலும் 50 யானைகள் தெற்கு மற்றும் கிழக்கிலும் 30 யானைகள் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் என 160 யானைகள் கொல்லப்பட்டன.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் யானைப் பாதுகாப்பு தந்திரோபாயமானது முடிந்தளவு யானைகளை பரந்த ஓர் இடத்தில் பாதுகாத்து பராமரிப்பதனை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டது. அதற்கேற்ப கேகாலையிலுள்ள பின்னவள யானைகள் அனாதை மடம் விளங்குகிறது. இங்கு காயப்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் கவனிக்கப்படுகின்றன. உடவளவை தேசியப் பூங்காவிலுள்ள உடவளவை இடைக்கால நிலையத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் காட்டில் விடப்படும் வரை பராமறித்து வளர்க்கப்படுகின்றன. இது ஓர் புனர் வாழ்வு நிலையமாக காணப்படுகிறது.
எம்மால் முடிந்தவரை யானைகள் மீதான வன்முறைகளையும் தந்த வர்த்தக நோக்குடன் அவை துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதையும் இனி வருங்காலங்களில் நேராதபடி பாதுகாப்போம்.