அனைத்தையும் நாடி  டாட்டூக்கள் கலாச்சாரம்!

டாட்டூக்கள் கலாச்சாரம்!

2020 Sep 15

இன்றைய இளைஞர்கள் பலர் தமது உடற்பாகங்களில் பல வடிவங்கள், எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சின்னங்களை வரைகின்றனர். இதனை டாட்டூ என்றழைக்கின்றனர். இந்த டாட்டூ அவர்களை தனித்துவபடுத்தி காட்டுவதோடு, பார்ப்பவர்களை கவர்வதாகவும் அமைகின்றது. இளைஞர்கள் தமது விருப்பத்திற்கேற்ப செயற்படும் சுதந்திரம், தமது தன்நம்பிக்கையின் அளவு மற்றும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகயாக டாட்டூக்களை பயன்படுத்துகின்றனர். சிலர் தனக்கு பிடித்தவர்களின் பெயர்களையும், வாழ்வில் மறக்க முடியாத தினங்களையும் டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர். காதலிக்கும் நபரின் பெயரை டாட்டூவாக குத்திக் கொள்ளும் வழக்கமும் தற்போது காணக்கூடியதாக உள்ளது. டாட்டூக்களின் மூலம் தனது காதலின் ஆழத்தினை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். காதல் நிரந்தரமாக நிலைக்கும் என உறுதி செய்த பின் இதனை செய்வது நல்லது ஏனெனில் டாட்டூ போடும் போது ஏற்படும் வலியை விட அதை அழிக்கும் போது ஏற்படும் வலி தான் மிகவும் அதிகமாகயிருக்கும். “இந்த டாட்டூக்கள் என்றால் என்ன…?” “இவை எப்போது ஆரம்பிக்கப்பட்ட கலாச்சாரம்…?” போன்ற டாட்டூக்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள்.
இதோ…! உங்களுக்காக,

பச்சைக் குத்துதல் என்றால் என்ன…?

மஞ்சள் பொடியோடு அகத்திக் கீரை சேர்த்து அரைத்து, ஓர் துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி அதன் பின் நீர் கலந்து அதைப் பசையாக்கி வைத்துக் கொள்கின்றனர். கூர்மையான ஊசி ஒன்றினால் பசையைத் தொட்டுத் தோலில் குத்தி எடுத்து அவர் அவர்களுக்கு பிடித்த உருவங்களை வரைகின்றனர். இதனை பச்சைக் குத்துதல் என்றழைக்கின்றனர். இன்றைய காலத்தில் போடப்படும் டாட்டூக்களிற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவையானது நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபால்ட் மற்றும் டைடேனியம் ஒட்சைட் போன்ற பல விதமான இரசாயானங்கள் கலக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது. இந்த நிறக்கலவையினை காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் நிரப்பி அவரவர்க்கு பிடித்த வடிவங்களை டாட்டூவாக குத்துகின்றனர். எது எவ்வாறெனினும் பொதுவாக நமது தோலில் காணப்படும் மூன்று அடுக்குகளுள் முதல் அடுக்கில் தான் பச்சைக் குத்தப்படுகிறது. இது மேற்புற தோளின் கீழாக நிறப்பொருட்களை உட்செலுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பச்சை குத்துதல் பற்றிய வரலாறு…

டாட்டூக்கள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. இவை பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே காணப்பட்டு வரும் ஓர் நாகரிகமாகும். இது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் கற்கலாம் தொட்டு பரவலாக காணப்பட்டு வருகிறது. பச்சை குத்தும் தொழிலை குறவர்களும் நாடோடிகளும் செய்து வந்தனர். அவர்கள் இதனை பல நோக்கங்களுக்காக கடைப்பிடித்தனர். அவற்றுள் சில,
அக்காலப் பெண்கள் தமது கணவரின் பெயரை சொல்வது புனிதமற்ற ஓர் செயலாக கருதப்பட்டது. இதனால் திருமணத்தின் பின் பெண்கள் தமது கைகளில் கணவரின் பெயரை பச்சையாக குத்திக் கொண்டனர். அவர்களிடம் கணவரின் பெயர் பற்றி எவரும் வினவும் போது தமது கையிலுள்ள பச்சையை காட்டுவர்.

சில குழுவினர் பச்சைக் குத்துதலை ஓர் சடங்காக மேற்கொண்டனர்.

பண்ணை விலங்குகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தினர்.

மலைப்பகுதிகளில் வாழும் சில மக்கள் கூட்டத்தினர் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி பச்சைக் குத்திக் கொள்கின்றனர். இதன் பின் ஓர் வித்தியாசமான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. வாழ்கின்ற போது மட்டுமன்றி இறந்தப் பின்பும் அடையாளப்படுத்திக் காட்டும் சின்னமாக இது விளங்குகிறது. எவ்வாறெனில் இறந்த பின் உங்கள் ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்துக்கு செல்லும் போது அவர்கள் யாருடைய சந்ததியினர், அவர்களின் மூதாதையர்கள் யாவர் மற்றும் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடையாளப்படுத்த முடியும் என நம்புகின்றனர்.

சாதிப் பிரிவினையின் படி தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் பெண்களை பிற சாதியை சேர்ந்த ஆதிக்கம் மிக்க ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தங்களை தாங்களே அழகின்றி காட்டிக் கொள்ளும் பொருட்டும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.

ஒருவர் மீதான அன்பினை வெளிப்படுத்துவதற்காகவும் தம்மை தானே அழகுபடுத்திக் கொள்வதற்காகவும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்த மக்களை தனித்துவபடுத்திக் கொள்வதற்காகவும்,

பெண்கள் தமது அழகினை மெருகூட்டி கொள்வதற்காகவும்,

சிறைகைதிகள், பணியாட்கள் மற்றும் அடிமைகள் ஆகியோரை அடையாளப்படுத்துவதற்காகவும்,

மனிதர்களை சாதி வாரியாக வகைப்படுத்திக் காட்டுவதற்காகவும்,

அடிமைப்படுத்தும் நோக்குடனும், தண்டனைகளாகவும் பச்சைக் குத்துதலை கையாண்டனர்.

ஆரம்ப காலங்களில் பச்சைக் குத்துதல் நாகரிகமாக காணப்பட்டமைக்கான சான்றுகள் சில,
நாஜிக்களின் வதை முகாமில் யூதர்களுக்கு இலக்கங்களை பச்சையாக குத்தினர்.

பழங்கால இந்தியர்களிடம் காணப்பட்டது போன்று கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடமும் பச்சைக்குத்தும் வழக்கம் காணப்பட்டது.

ஜப்பானில் ஒரு இனக்குழுவைச் சேர்ந்த மக்களிடம் முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

ஜப்பானியரின் அக்குபங்சர் மருத்துவ முறை பச்சைக் குத்துதல் கலையுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.

கி.மு 4000 முதல் 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சி பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஒட்சி பனி மனிதனின் முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் புள்ளிகளும் கோடுகளுமாக காணப்பட்டன.

பச்சைக் குத்துதலில் காணப்படும் வகைகள்,
1. இயற்கையான தழும்புகளாலானது. ( விபத்தில் ஏற்படும் காயங்கள்.)

2.தொழில் முறை சார்பிலான பச்சைக் குத்துதல். (சமூகப்பிரிவு, குலம், கூட்டம், சமயம், நம்பிக்கை, தண்டனை, வீரதீரம் மற்றும் காதலை வெளிப்படுத்தல்.)

3.அழகியல் ரீதியான பச்சைக் குத்துதல்.

4.மருத்துவ நோக்கிலான பச்சைக் குத்துதல்.

5.அடையாளப்படுத்துவதற்காக பச்சைக் குத்துதல்.

இன்றைய காலத்தில் பச்சை குத்துதலில் பொதுவாக இருவகை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
அவை,
1. தற்காலிகமானது = 7 நாட்களில் தானாகவே மறையக் கூடியது. (ஸ்டிகர் டாட்டூஸ், மருதாணி)

2. நிரந்தரமானவை = இறக்கும் வரை அழிக்க முடியாதவை.

பச்சை குத்தலில் இடம்பெறும் உருவங்கள்,
தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு, பெயர்கள், இலக்கங்கள், சின்னங்கள் போன்ற பல வடிவங்கள் பச்சை குத்துதலில் காணப்படுகின்றன.

 

பச்சைக் குத்துதல் பரவலாக காணப்படும் இடங்கள்,
இலங்கை, இந்தியா மட்டுமன்றி ஆசியாவின் வேறு பகுதிகளிலும், அமெரிக்கா, இந்தானேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பச்சைக் குத்துதல் பரவலாக காணப்படுகிறது.

பச்சைக் குத்தும் முன் கவனத்திற் கொள்ள வேண்டியவை,
பச்சை குத்துபவர் முறையாக பயிற்சி மற்றும் அனுபவம் உடையவரா எனவும்,

பிறருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மை அன்றி புதிய ஊசி மற்றும் மை பயன்படுத்தப்படுகிறதா எனவும்,

பச்சைக் குத்துபவர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறாரா எனவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பச்சைக் குத்துதலினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன…?
டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக் ஷன் போன்ற தோல் வியாதிகள் உருவாக வாய்ப்புகள் உண்டு.

எச்.ஐ.வி மற்றும் ஹெப்டய்டிஸ்-பி போன்ற வியாதிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு எவ்வாறெனின் அதிகப்படியான டாட்டூ போடும் நிலையங்களில் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்கும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது தரமற்ற நிறக்கலவைகளையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

நிறக்கலவைகளில் காணப்படும் இரசாயன பொருட்கள் தோலின் வழியாக உள் சென்று உடலினுள் இருக்கும் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

‘லுக்கே மியா’ எனப்படும் ஒரு வகை புற்றுநோயினை ஏற்படுத்தக் கூடியது.

நிறக் கலவையிலுள்ள இரசாயான சேர்வை ஒவ்வாமையினை ஏற்படுத்தக் கூடியது.

சருமப் பாதிப்பு ஏற்படக் கூடும்.

உடல்நலம் பாதிப்புக்குள்ளாகும்.

நிரந்தரமாக போடப்படும் டாட்டூ மீண்டும் அழிக்க முடியாது. இதனால் பெயரோ அல்லது டாட்டூ போடும் போது வடிவங்கள் அழகாக வராவிட்டாலோ அவற்றை லேசர் ட்ரீட்மன்ட் மூலம் அழிப்பது என்பது கடினம். அதன் மேல் வேறு வடிவங்கள் வரைந்து மறைப்பதென்றாலும் வலி அதிகமாக இருக்கும்.

சிறிய மருக்கள் போன்றவை இருக்கும் இடத்தில் பச்சைகுத்துவதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

முறையாக பயிற்சி பெறாதவர்களிடம் டாட்டூ குத்துவதால் அந்த இடத்தில் தழும்பு ஏற்பட வாய்ப்புண்டு.

முறையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காதவிடத்து சருமத்தில் கிருமித் தொற்று, புண்கள் மற்றும் பெரிய சீழ் கட்டிகள் போன்றன ஏற்படக்கூடும்.

அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

பச்சைக் குத்திய பின் செய்ய வேண்டியவை,
பச்சைக் குத்திய இடத்தை அழுத்தி தேய்தலை தவிர்த்தல் வேண்டும்.

ஒரு வாரத்திற்கு உலர விடாது ஈரமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சைக் குத்துதலின் போதும் பச்சைக் குத்தியப் பின்னும் அவதானமாக செயற்படுவதனூடாக பாதகமான விளைவுகளிலிருந்து எம்மை நாமே காத்துக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here