அனைத்தையும் நாடி  யாழ் நகரில் கால்வாய் சுத்திகரிப்பின்போது கண்டகற்றப்பட்ட நெகிழிக் கழிவுகள்.

யாழ் நகரில் கால்வாய் சுத்திகரிப்பின்போது கண்டகற்றப்பட்ட நெகிழிக் கழிவுகள்.

2020 Dec 22

இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதிகமான தமிழ் மக்கள் வாழ் பகுதியாக கருதப்படும் யாழ்ப்பாணம், இயற்கை அரன்களை கண்டு கழிக்கவும் இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கும் சிறந்த ஓர் பகுதியாகும். பெரும்பாலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பிரசித்திப் பெற்ற கோயில்களை கொண்ட ஓர் மாவட்டமாகவும் யாழ்ப்பாணம் விளங்குகிறது.

இவ்வாறு பல புகழினை தன்னகத்தே கொண்ட, காணும் இடமெல்லாம் பனை மற்றும் தென்னை மரங்களால் சூழப்பெற்ற யாழ்ப்பாண பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் மக்கள் தமது அன்றாட வாழ்வினை வாழ்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். பலரது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி வீட்டின் பொருட்கள் நீரோடு அடித்துச் செல்லப்பட்டது. சிலரது வீடுகளில் காணப்படும் பண்ணை விலங்குகளான கோழி, ஆடு போன்றன வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தன. சில வீடுகளில் காணப்பட்ட கிணற்றுப் பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு கிணற்று நீரோடு வெள்ள நீர் கலந்தமையால் குடிப்பதற்கு தேவையான நீரின்றி மக்கள் அவதியுற்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் கட்டுமரங்களை தற்காலிக போக்குவரத்தாக பயன்படுத்தும் அளவிலான சிரமங்களுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அத்தோடு நகர்ப்பகுதி மக்களும் வணிகர்களும் மேலும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தனர். காலநிலை மாற்றங்கள் சீரான பின்பும் வெள்ள நீர் வழிந்தோடாமல் தேங்கி நின்றதோடு, தொடர்ந்து மழை பெய்ந்தமையே இவற்றிற்கான காரணமென சிரமங்களை எதிர்கொண்டுக் கொண்டிருந்த மக்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையினை சீர் செய்யும் நோக்குடன் யாழ் மாநகரின் சந்தைப் பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட வடிகாலினை சுத்தம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் வடிகால் சுத்திகரிப்பாளர்கள் ஈடுபடத் தொடங்கினர். குறித்த வடிகால் சுத்திகரிப்பின் போது எவரும் எதிர்ப்பாராத அளவிலான பிளாஸ்திக் கழிவுகள் அகற்றிக் குவிக்கப்பட்டன.

அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களில் இருந்து பெறப்படும் உக்காத கழிவு வகைகளில் ஒன்றாக பிளாஸ்திக் கழிவுகள் விளங்குகின்றன. இவை மண்ணோடு கலக்கப்பட்டாலும் உக்குவதற்கு பல வருடக் காலங்கள் எடுப்பதோடு, விளை நிலங்களை மலட்டு நிலங்களாக மாற்றும் அளவுக்கு ஆபத்தானவை.

இந்த பிளாஸ்திக் கழிவுகளினை அகற்றுவது மற்றும் அவற்றின் பாவனையையும் தயாரிப்பினையும் மட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி அவற்றினை மீள்சுழற்சி செய்வதே. நம் நாட்டில் மட்டுமல்லாது பிற நாடுகளுக்கு நாம் செல்லும் போதும் இம்முறையை கடைபிடித்தல் சிறந்த ஓர் பண்பாகும். பிளாஸ்திக் கழிவுகளை கால்வாய்களிலும் தெருக்களிலும் போடுவதனால் நாளடைவில் அவை காற்று அல்லது மழை நீரினால் கால்வாய்களுக்குள் தள்ளப்பட்டு வடிகாலினுள் சென்று ஒன்றிணைந்து அடைப்பினை உருவாக்குகின்றன. இதன் விளைவாக நீர் ஓடுவது தடைப்பட்டு தேங்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறான வெள்ள அனர்த்தங்களின்போது அவை பாரிய சிரமங்களை உருவாக்குவத்தோடு பல சொல்லெணா விளைவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.

இந்த பாதிப்பிற்கான பங்கு நம் அனைவருக்கும் உண்டு. நாம் வாழும் சூழலினை பாதுகாத்து நலமுடன் வாழும் பகுதியாக மாற்றியமைக்க நம் சூழல் நம் தவறினை சுட்டிக்காட்டி கற்றுத் தந்த ஓர் பாடமாக இதனை ஏற்று, உரிய முறையில் கழிவுகளை அகற்றி இனி வருங்காலங்களில் நாம் நம்மையும் நம் சுற்றுச் சூழலையும் பாதுகாத்து வாழ்வோமாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here