2020 Dec 16
அனைவருக்கும் பிறக்கும் போது இருக்கும் அழகிய சருமம் காலப்போக்கில் மாசு, மருக்களினாலும் ஆடைகளை இறுக்கமாக அணிவதனாலும் அம்மை வருவதாலும் பிரசவத்தின் போதும் முகப்பருக்கள் ஏற்பட்டு தழும்புகளால் அழகிழந்து போகிறது.
பெரும்பாலும் பருக்களினால் உருவாகும் தழும்புகள் தான் அதிகம். குறிப்பாக முகத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய்ப்பசை, தொற்றுக் கிருமிகளின் தாக்கம், ஹார்மோன் சமநிலை சீரற்றதாக மாறுதல், சில மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை, முறையில்லா உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றால் இளம் வயதினையுடையவர்களுக்கும் சில கர்ப்பிணிப் பெண்களுக்கும் பருக்கள் தோன்றுகிறது. இந்தப் பருக்கள் தானாகவே பழுத்து உடையும் போது தழும்புகள் உருவாகின்றன.
இந்த தழும்புகளால் முகத்தின் பொலிவு கெட்டு விடுகிறது. இந்த தழும்புகளை இயற்கை முறையில் நீக்குவதற்கான வழிகள் சில,
ஆலிவ் எண்ணெய்இரவில் தூங்கும் முன் தழும்புகளுள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெயினைப் பூசி காலையில் எழுந்து கழுவிக் கொள்ளவும்.
பாதாம்
பாதாமினை 12மணி நேரத்திற்கு பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து அதன் தோலை நீக்கிக் கொள்ளவும். அதன் பின் அரைத்து எடுத்த பன்னீருடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து தழும்புள்ள பகுதிகளின் மேல் தடவி வரவும்.
எலுமிச்சை
எலுமிச்சைச் சாறில் பஞ்சை நனைத்து தழும்புள்ள இடங்களில் ஒத்தி எடுக்கவும். எலுமிச்சைச் சாறிலுள்ள விட்டமின்- Cயானது தழும்புகளை மறையச் செய்யும் தன்மை கொண்டது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து ஜூஸாக்கி தழும்புகளின் மேல் தடவி வரவும்.
அரச இலை
காய்ந்த அரச இலைகளை எரித்து அதன் கரித்தூளினை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் தழும்புகளுள்ள இடங்களில் தடவி காலையில் குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளவும்.
இவற்றை பரு வந்த தழும்புகள் மேல் மட்டுமன்றி காயங்களால் உருவாகும் தழும்புகள் மேலும் தடவி வந்தால், தழும்புகள் மறைந்து பொலிவான சருமத்தைப் பெற முடியும்.