அனைத்தையும் நாடி  உச்சிமுனைத்தீவில் கிறிஸ்துமஸ்

உச்சிமுனைத்தீவில் கிறிஸ்துமஸ்

2021 Jan 3


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லாத இலங்கை நாட்டில் சமூக நலன் கருதி சேவையாற்றும் அமைப்புகள் பல உண்டு. அவ்வாறாக தன்நலமற்று சேவையாற்றும் அமைப்புகளில் சோல்மேட் – Soulmate அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராது வறுமையாலும் வாழ்வியல் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களை தேர்ந்து தங்களால் முடிந்தவரை உடல் மற்றும் பண ரீதியான முதலீடுகளை கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.


நாம் அனைவரும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் எவ்வாறான ஆடைகளை கொள்வனவு செய்யலாம், எந்த வகையிலான உணவினை சமைத்து உண்ணலாம், நம் உறவுகளுக்கு கையளிப்பதற்கான பரிசுகள் என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம். நம்மை சுற்றி பசியாலும் வறுமையாலும் வாடும் ஏனைய சகோதரர்களை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது. நாம் அணிய ஆடை வாங்க வேண்டுமென சிந்திக்கும் எமக்கு, தெருவில் குளிரால் அவதியுற்று இரவுகளை கழிப்பவர்களுக்கும், கந்தல் அணிந்து நல்ல ஆடை அணிய வசதியற்றவர்கள் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை. நம் தட்டின் உணவின் சுவை பற்றி கவலை கொள்ளும் எமக்கு பிறர் பசி பற்றி சிந்திக்க நேரமிருப்பதில்லை. இவ்வாறான நடைமுறைகளை மாற்றி அனைவர் மனதிலும் புதியதொரு பண்டிகை கொண்டாடும் முறையினை சோல்மேட் அமைப்பினர் முன்னெடுத்து வைத்துள்ளனர்.


இந்த 2020ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சோல்மேட் அமைப்பு தங்களது குழுவினரின் பங்களிப்புடன் கற்பிட்டி உச்சிமுனை மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. இந்த கொவிட் – 19 அசாதாரண சூழ்நிலையினால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் பலர் வருமானம் ஈட்ட வழியின்றியும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஆளாகியும் வருகின்றனர். இதுபோன்ற இடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் உச்சிமுனை மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொதிகள், உடைகள், கம்பளிகள் மற்றும் 80 சிறுவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் அடங்கலான பொதிகளை சோல்மேட் அமைப்பு வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிறார்களுக்கென கலாசார நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


சோல்மேட் அமைப்பின் இந்த சேவை நோக்கிலான நிகழ்ச்சித் திட்டமானது கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் தங்களது குழுவினருடன் 22ஆம் திகதி காலை புறப்பட்டு அதன் பின் மறுநாள் 23ஆம் திகதி தாம் கொண்டு சென்ற பொருட்களை கையளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி திட்டத்தின் போது தனிமைப்படுத்தலுக்கான கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பதில் இவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டமை மேலும் பாராட்டுதலுக்குரிய ஓர் விடயமாகும்.


இவ்வாறாக சோல்மேட் அமைப்பினரின் இந்த முயற்சியினை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் பண்டிகை காலங்களில் நம்மை சுற்றி வாழும் ஏழை, எளியவர்களது நலன் கருதி, எம்மால் இயன்ற உதவிகளை செய்ய முற்படுவோம். சோல்மேட் அமைப்பானது மேலும் எதிர்வரும் காலங்களில் தனது சேவைகளை முன்னெடுத்துச் செல்ல எங்களது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php