கலை கலாசாரத்தை நாடி கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

2021 Jan 22

நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும் பழக்கமும் ஒன்று. நாம் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வரும் இந்தப் பழக்கம் நம் நாடித் துடிப்பினை சீராக்கி கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இது போன்ற கையில் கயிறு கட்டுதல் பற்றி நாம் அறியாத சில தகவல்கள்..

நம் உடலில் பல்வேறு இடங்களில் பல்வேறு முடிச்சுக்கள் காணப்படுகின்றன. அவ்வாறாக காணப்படும் முடிச்சுக்களில் முக்கியமான முடிச்சாக விளங்குவது எமது மணிக்கட்டு பகுதி தான். எம் முன்னோர்களின் காலத்தில் எவரேனும் சுகயீனமுற்றால் நாடிப் பிடித்துப் பார்த்து நோயினை கண்டு பிடித்தல் வழக்கம். இதயத்தின் துடிப்பினை அறிய நாடி பிடித்து பார்க்கும் இடத்தில் தான் நாம் கயிறு கட்டுகிறோம். இவ்விடத்தில் கயிறு மற்றும் காப்பு போன்றவற்றை அணிவதால் எம் நாடியின் இயக்கம் சீராகிறது. உடல் ரீதியாக மட்டுமன்றி உள ரீதியாக நம் எண்ணங்களும் சிந்தனைகளும் சீராகின்றன. இதனால் மனம் நல்ல அமைதியான நிலையினை அடைகிறது. இதுவே அறிவியல் ரீதியான காரணமாகும்.

சாஸ்திர சம்பிரதாய ரீதியாக நோக்குவோமானால் ஒவ்வொரு வகையான காப்பு கயிறுக்கும் ஒவ்வொரு நிறக் காப்பு/கயிறுக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவ்வாறு நோக்குவோமானால், காப்பு அணியும் போது தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காப்பினை அணிவது வழக்கம் ஆனால் பட்டு, தர்ப்பை, அறுகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது தான் அறிவியல் ரீதியாக பலன் தரக் கூடிய சரியான ஓர் முறையாகும்.

மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறத்தினாலான கயிறினை கட்டுவதனால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம் என நம்பப்படுகிறது.

கருப்பு நிறக் கயிரானது எதிர் மறையானவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. சிறு குழந்தைகளுக்கு கருப்பு நிறக் கயிற்றினை இடுப்பில் கட்டக் காரணம் கண் திருஷ்டி படாது குழந்தை பாதுகாக்கப்படும் என்பதால் தான்.

சிவப்பு நிறத்திலான கயிறு அணிவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறக் கயிற்றினை கட்டுவதனால் வாழ்வில் புகழ் மற்றும் அதிகாரம் வந்து சேரும்.

முருகன், பிள்ளையார், திருப்பதி மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களின் உருவம் பதிக்கப்பட்ட டொலர்களை கோர்த்து கழுத்தில் அல்லது கைகளில் அணிய பயன்படுத்தப்படும் கயிறே காசிக் கயிறு என்றழைக்கப்படுகிறது.

இவ்வாறாக கயிறு கட்டுவதால் பல பலன்கள் கிடைப்பதாக சம்பிரதாய ரீதியாக கூறப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் கைகளில் கயிறு கட்டுதல் பலன் தரக் கூடியது என்பது அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஓர் உண்மையாகும். கைகளில் கயிறு கட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மூட நம்பிக்கையாக பார்க்காது உடல் ஆரோக்கியத்தினை சீராக்கும் ஓர் அறிவுப் பூர்வமான விடயமாக நோக்குவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here