2021 Feb 7
பல நாடுகள் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, தமது இல்லாத புராதன வரலாற்றைக் கண்டு பிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்நுற்றாண்டில் கடல் நுரை போல் கொள்ளளவில்லா வரலாற்றைக் கொண்ட எம் இலங்கையின் வரலாற்றை உற்று நோக்குவதற்கு எம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும்.
இலங்கையின் தொடக்க கால குடியேறிகளாக வேடர்கள் கருதப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து இயக்கர்கள் மற்றும் நாகர்கள் இருந்ததாக எம்மவரால் காலத்தால் முந்திய நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் சில முக்கிய குறிப்புகள் காணப்பட்ட போதும், கி.மு. 5ம் நூற்றாண்டில் விஜயனின் வருகையில் இருந்து தற்போது வரை பல நெகிழ்வான, சில கசப்பான வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.
விஜயன் முதல் சுதந்திரம் வரை, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது, போர்த்துக்கேயரை கப்பலில் கூட்டிக்கொண்டு போனது போன்ற பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் இருப்பினும் ஆங்கிலேயர் இலங்கை மீது கொண்ட செல்வாக்கை சற்று உற்று நோக்குவோம். 1505ல் போர்த்துக்கேயர் தொடக்கம் வெளிநாட்டவர்களின் மோகம் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. முறையே போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக ஒல்லாந்தரை அழைத்து நாட்டை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தது மட்டுமல்லாது போர்த்துக்கேயர் விளைவித்ததை விட கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதே போல் ஏற்கனவே இலங்கையில் ஆதிக்கம் செலுத்தக் காத்திருந்த ஆங்கிலேயரை, ஒல்லாந்தரை விரட்டுவதற்கு அழைத்த பெருமை கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனை சேரும்.
1789ல் பிரான்ஸியப் புரட்சி ஏற்பட்ட பின்னர் ஐரோப்பாவில் உருவான புதிய அரசியல் சூழ்நிலை, ஐரோப்பியரின் ஆசியக் குடியேற்றவாதக் கொள்கையிலும் செல்வாக்கு செலுத்தியது. இதன் அடிப்படையில் 1795ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆங்கிலேயப்படை ஒல்லாந்தர் வசமிருந்த திருகோணமலை துறைமுகத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர். அதனை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தனது கம்பனிகளையிட்டு இலாபம் ஈட்டி வந்தனர்.
ஆனால் முதல் முறையாக 1815ல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் கைப்பற்றிய பெருமை ஆங்கிலேயரைச் சாரும். இதனால் கி.மு. 543 தொடக்கம் கி.பி. 1815 வரையிலாலான 2359 ஆண்டுகள் கொண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்தது.1818 மற்றும் 1848 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் பல சுதந்திர போராட்டங்கள் நடந்தாலும் ஆங்கிலேயர்கள் கையாண்ட கடுமையான உத்திகள், எம்மிடம் போதுமான அளவு ஆயுதங்களோ வளங்களோ இல்லாமை மற்றும் பல துரோகங்கள் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
1838 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர் சிறுத்தம் முதல் சோல்பெரி அரசியல் யாப்பு வரை பல அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளாகவே காணப்பட்டதோடு மட்டுமல்லாது பிரித்தானியாவின் முடிக்குறிய இளவரசியே நாட்டை ஆள்பவராக கருதப்படுவார். 1804ல் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி இயக்கங்களின் விளைவாக நாட்டில் பல புத்திஜீவிகள் உருவாகத்தொடங்கினர். இதனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் சிவில், சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இலங்கையர்கள் உள்வாங்கப்பட்டு நிர்வாக சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இது இலங்கை வரலாற்றில் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியாவில் காந்தியின் போராட்டம் மற்றும் 19ம் நூற்றாண்டின் உலக மகா யுத்தங்களின் விளைவால் பிரித்தானியா வலுவிழந்தது. ஏறத்தாழ அத்தோடு பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்தது. 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. தேசத்தின் சுதந்திரத்தில் தலைசிறந்த ஆளுமைகள், கல்விமான்கள், போராட்டக்குழுக்கள் மற்றும் ஒருசேர்ந்த மக்களின் பெரும்பங்கு ஒருபுறமிருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் பிரித்தானிய பேரரசின் சரிவும் ஒரு முக்கிய காரணமாகும். டி. எஸ். சேநாநாயக்க இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றார். 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் சோல்பரி யாப்பின்படி பிரித்தானிய நாட்டு இளவரசியே நாட்டின் பேரளவு ஆட்சி தலைமையாக விளங்கினார். 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு இயற்றப்பட்டதன் பின்னர் பிரித்தானிய பேரரசுடன் இருந்த அரசியல் ரீதியான தொடர்புகள் முற்றாக நீக்கப்பட்டு ‘லங்கா’ எனப்பட்ட இந்நாடு ஶ்ரீ லங்கா என அழைக்கப்பட்டது.
இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கத்தால் காணி உரிமையற்ற மக்கள், மரபு ரீதியாக காணப்பட்ட தன்னிறைவு பொருளாதாரத்தின் வீழ்ச்சி, தேசிய ரீதியான அறிவும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டமை போன்ற பிரதிகூலங்கள் இருப்பினும், தற்போதைய எம் நாட்டின் அந்நிய செலாவணியில் பாரிய பங்கு வகிக்கும் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கோப்பி போன்ற பயிற்செய்கையை அறிமுகம் செய்து, அவற்றை வணிகம் செய்யும் பொறிமுறையை வகுத்துக் கொடுத்த பெருமை பிரித்தானியர்களை சாரும். அவற்றை அறிமுகம் செய்யாமல் இருந்திருந்தால் தற்போது தேயிலைக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் இடங்கள் வெறும் புற்தரைகளாக காணப்பட்டிருக்கக்கூடும்.
இலங்கையில் இருக்கும் பெரும்பாலான பெரு நகர் வீதிகள் பல மீள்திருத்தி பராமரிக்கப்பட்டாலும் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ரந்தெனிகல, விக்டோரியா நீர் தேக்கங்கள் எம் விவசாயத்திற்கு எந்தளவு பயன்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட மாத்தறை முதல் பெலியத்தை வரை செல்லும் புகையிரத பாதையை தவிர, ஏறத்தாழ மற்றைய புகையிரத பாதைகள் அனைத்தும் நாட்டிற்கு நெறிப்படுத்திக் கொடுத்த பெருமை பிரித்தானியரைச் சாரும் என்பதோடு மட்டுமல்லாது இலங்கை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரித்தானியர் எமக்கு காட்டித்தந்த புகையிரத செயன்முறையே இன்னமும் அமுலில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.