அனைத்தையும் நாடி  2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலும் – தமிழக அரசியல் வரலாறும்

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலும் – தமிழக அரசியல் வரலாறும்

2021 Apr 13

திராவிட கட்சிகளின் வருகைக்கு முன் தமிழ் நாட்டின் அரசியல் யுகம் இந்திய தேசிய காங்கிரஸின் (Indian National Congress) வசம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்த இந்திய தேசிய காங்கிரஸ், 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியைத் தொடர்ந்து தனது ஆதிக்கத்தினை இழந்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய இரு கட்சிகள் மாத்திரம் ஆட்சியை தம் வசம் வைத்திருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கட்சியின் தோற்றம்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாரிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் பிராமணரை மாத்திரம் மய்யம் கொண்டு தனது சேவையினை மேற்கொண்டு வந்ததோடு, திராவிடர்களுக்கு எதிரான இன ரீதியான அடக்கு முறை உத்திகளைக் கையாண்டு வந்தது. இவ் அடக்கு முறைக்கு எதிராக நீதிக் கட்சி (Justice Party) என்ற கட்சி செயல்பட தொடங்கியது. இக் கட்சியே காலப்போக்கில் திராவிட கழகம் (DK) என புத்தாக்கம் பெற்றது. மேலும் இக் கட்சியை நெறிப்படுத்திய தலைவராக பெரியார் E. V. ராமசாமி அவர்கள் விளங்கியதோடு மட்டுமல்லாது திராவிடர்களின் தந்தையாகவும் போற்றப்பட்டார். மேலும் இவர் பகுத்தறிவு, சுய மரியாதை, பெண்கள் உரிமை மற்றும் சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகளை மையமாக கொண்டு இயங்கி வந்தவராவர்.

அண்ணாவின் வருகையும் தேசிய காங்கிரஸின் வீழ்ச்சியும்

பெரியார் அவர்களின் தீவிர போராளியாக விளங்கிய C. N. அண்ணாதுறை அவர்கள், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியதோடு மட்டுமல்லாது திராவிடர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் அதி ஆர்வம் காட்டி வந்தார். இக் காலப்பகுதியிலேயே தேசிய காங்கிரஸின் செல்வாக்கு தென்னிந்தியாவில் அதிக தாக்கம் செலுத்தி வந்தது.

அண்ணாதுறை அவர்களின் அதி தீவிர அரசியல் ஈடுபாட்டினால் 1967 ஆம் ஆண்டு தேர்தலை வெற்றிகொண்டு தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று, தேசிய காங்கிரஸின் ஆதிக்கத்திற்கு முற்றுகையிட்டார். இவரது காலத்திலேயே ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் தென்னிந்திய மாகாணம் தமிழ் நாடு என பெயர் முகம் பெற்றது. 

எம்ம்ம்ம்ம்ம்ம் ஜி ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சினிமாவில் நடித்து கதாநாயகன் வேடம் வகித்த எம். ஜி. ராமச்சந்திரன், தமிழ் நாட்டிற்கு சேவையாற்றி தமிழ் நாட்டின் கதாநாயகன் என்ற பெயரை முழங்கச் செய்தார். ‘புரட்சி அரசியல்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை  தனது தனித்துவமான பாணியில் செய்து காட்டி, மத்திய அரசை அதிரவைத்த பெருமை இவரையே சேரும். C. N. அண்ணாதுறை அவர்களின் மறைவை தொடர்ந்து தலைவராகிய M. கருணாநிதி, M. K. முத்து என்று அழைக்கப்படும் தனது மூத்த மகனை அரசியல் மற்றும் சினிமாத் துறையில் ஈடுபடச் செய்தார். அண்ணா அவர்களின் மறைவின் பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிதி மோசடி பற்றி வெகுவாக விமர்சித்த MGR கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இச் செயற்பாடே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) என்ற கட்சி உருவாகியதன் பின்னணியாகும். இதுவே பிற்பாடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) என அழைக்கப்பட்டது. ஆளுமை, கட்சி, குலம், அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால், மக்கள் மனதில் வேரோட்டம் பெற்ற நபராக வலம் வந்த MGR, 1987ல் இயற்கை எய்தினார்.

34 வருட சுழற்சி முறை அரசியல்

‘மக்களாலேயே நான்; மக்களுக்காகவே நான்’ என்றும் ‘துணிவிருந்தால் தூக்கமில்லை, துணிவில்லாதவனுக்கும் தூக்கம் இல்லை’ போன்ற வாசகத்தை கூறி, 1987 ஆண்டு MGR இன் மறைவைத் தொடர்ந்து சராசரியாக 34 வருடங்கள் தமிழ் நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் இரண்டிற்கும் காரணமாக விளங்கியவர்களாக கலைஞர் கருணாநிதி அவர்களும் புரட்சி தலைவி ஜெயலலிதாவுமாவர். இருவர் மீதும் நிதிக் குற்றச்சாட்டுகள் பல இருப்பினும், இருவருமே தமிழ் நாட்டு அரசியலின் பெரும் ஆளுமைகள் என்று  போற்றப்பட்டு, அரசியலுக்கும் அப்பால் மக்களின் நேசத்தை வென்ற தலைவர்களாகவும் விளங்கினார்கள்.

அரசியல் ஜாம்பவான்களின் மறைவும், புதிய அரசியல் கட்சிகளின் வருகையும்

2016 ஆம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் இறப்பும், 2018 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் இறப்பும் தமிழ் நாட்டு அரசியலில் பல வெற்றிடங்களை தோற்றுவித்தது மட்டுமல்லாது பல புதிய கட்சிகளின் வருகைக்கும் வழிவகுத்தது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து OPS, EPS, சசிகலா என பல போட்டி எழுந்தாலும், சின்னம்மா சசிகலாவின் முறையில்லா சொத்து குவிப்பு தீர்ப்பும், OPS இன் விட்டுகொடுப்பும் AIADMK கட்சியில் விரிசலை ஏற்படுத்தியது.

கலைஞர் கருணாநிதி, M. K. ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக வளர்த்தமையினால் DMK கட்சியின் மற்ற புள்ளிகளிடம் கட்சி தலைவர் மோகம் இருக்கவில்லை. இது அக் கட்சிக்கு பாரியதோர் பிரதிபலனாக காணப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் தமது அரசியல் பிரவேசத்தை அறிவித்தாலும், ரஜினிகாந்த போட்டியிடாமலே தனது ஓய்வை அறிவித்தது காமெடி. எனினும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பிரவேசம் இரு பிரதான கட்சிகளுக்குமிடையே போட்டி மிகுந்த  சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். 

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் – 2021

இச் சட்டப்பேரவை 234 ஆசனங்களை கொண்டுள்ளது. 118 ஆசனங்களையோ அதற்கு பெரும்பான்மையான ஆசனத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஆட்சி அமைப்பதோடு கட்சியின் தலைவராக கருதப்படுபவர் முதலமைச்சராக பதவி ஏற்பார். Covid – 19 பரவலுக்கு மத்தியில் இத் தேர்தல் நடைபெற்று 71.79% வாக்களிப்பு வீதத்தை கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலுக்கு DMK, AIADMK, MNM, NTK, INC மற்றும் BJP ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மேலும் தேர்தல் முடிவுகள் மே மாதம் 2ம் நாள் அறிவிக்கப்படும் என திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவை ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் சர்கார் படத்தில் விமானத்தில் வந்திறங்கி வாக்களிக்க சென்றாலும், நிஜ வாழ்க்கையில் தனது சைக்கிளில் வாக்களிக்க சென்று, வரும் வழியில் ரசிகர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினாரென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அஜித் தேர்தல் வாக்குச் சாவடி அருகில், அவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தவரின் தொலைபேசியை பறித்தெடுத்து, பின்னர் எச்சரித்து, தொலைபேசியை ஒப்படைத்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php