கலை கலாசாரத்தை நாடி புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்

புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்

2021 Apr 12

ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும் இணைந்து தத்தமது உறவுகளோடு கோலாகலமாக புதிய வருடப் பிறப்பென கொண்டாடுவது சித்திரை மாதத்தில் மலர்கின்ற தமிழ், சிங்கள புத்தாண்டு நாளினை தான். சிங்களவர்கள் இந்த நாளினை ‘அழுத் அவுறுது’ என அழைக்கின்றனர். அதாவது அழுத் என்றால் புதிய அவுறுது என்றால் வருடம் எனப் பொருள் கொள்கிறது. நம் நாட்டின் தமிழர்களும் சிங்களவர்களும் இன வேறுபாடின்றி இந்நாளில் கூடி விளையாடுதல், கலை கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல் மற்றும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்நாளினை சில சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் கூட கொண்டாடுவது உண்டு. இனி தமிழ், சிங்கள புத்தாண்டு பற்றிய விரிவான சில தகவல்களை காண்போம்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலம்

இந்த நாளில் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கின்றது. இந் நாளானது அறுவடை காலங்களின் இறுதி கட்டத்திலேயே பெரும்பாலும் மலர்கின்றது. இந்நாளானது தமிழ் கால கணிப்பீட்டு முறையின் படியே கணிக்கப்படுகின்றது. இந்நாளில் மருத்து நீர் வைத்து குளித்தல், சமய நிகழ்வுகளுக்கான நேரம், கைவிசேட நேரம் போன்றவற்றோடு இந்நாளில் கடவுளுக்கு படைப்பதற்கான பலகாரங்கள் போன்றவற்றை சமைப்பதற்கான நேரம் முதற் கொண்டு பஞ்சாங்கம்   கொண்டு கணிக்கப்படுகின்றது. சிங்களவர்கள் பஞ்சாங்கம் என்ற சொல்லை ம் என்ற உச்சரிப்பின்றி பஞ்சாங்க என கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழ் கால கணிப்பீட்டின் முறைப்படியே இந்நாளிற்கான நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டு கால நிகழ்வுகள்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலமானது சித்திரை மாதம் 14/15 ஆக காணப்பட்ட போதிலும் அந்நாளை வரவேற்பதற்கான செயற்பாடுகள் அதற்கு முன்னைய வாரத்திலிருந்தே தொடங்கி விடுகிறது. மக்கள் கூட்ட கூட்டமாக சந்தைகளிலும், ஆடை வாங்குவதற்காக கடைகளுக்கும் என சென்று குவிகின்றனர். இவ்வருடம் மக்கள்  ஷொப்பிங் செய்ய போகும் போது சமூக இடைவெளி, தனிமைபடுத்தல், கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் கடைகளுக்குள் பிரவேசிக்கும் போது தம்மைப் பற்றிய தகவல்களை எழுதுவது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்கும் படி சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ், சிங்கள வருடப்பிறப்பு நிகழும் நாளிற்கு முன்பே  “எண்ணெய் தாச்சி வைக்கும் நேரம்” என பலகாரங்கள் செய்வதற்கான நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. தமிழ், சிங்கள புத்தாண்டன்று வருடம் பிறக்கும் நேரத்திற்கு முன் மருத்து நீர் வைத்து குளிப்பதற்கென குறிப்பிட்ட ஓர் நேரம் குறிக்கப்படுகிறது. அந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வருடம் பிறக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்து புதிய வருடத்தினை மக்கள் வரவேற்கின்றனர். அந்நாளில் பாற்சோறு சமைத்து இன்னும் பல பலகாரங்கள் வைத்து கடவுளை வழிபடுவதற்கென “புண்ணிய காலம்” என்ற ஓர் நேரம் பயன்படுத்தப்படுகின்றது. இதனை சிங்களவர்கள் “புண்ணிய கால” என அழைப்பர். இந்த காலத்திற்குள் சமய வழிபாடுகளை நிறைவு செய்ய வேண்டும். சிங்களவர்கள் இந்நேரத்தில் விகாரைகளுக்குச் சென்று ‘பன’ கேட்பது போல், இந்துக்கள் கோயில் பூஜைகளிலும் அல்லது வீடுகளில் பூஜை செய்து வழிபடுவது உண்டு. வியாபாரிகள் இந்நேரத்தில் கடைகளை திறந்து அதன் பின் மீண்டும் கடைகளை மூடுவர். அதன் பின் உறவினர்களது வீடுகளுக்கு நல்ல நேரம் பார்த்து சென்று வாழ்த்துகள் கூறி வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கைவிசேடங்கள் பெறும் வழக்கம் காணப்படுகின்றது. அநேகமான சிறுவர்களுக்கு பிடித்த ஓர் நிகழ்வு இந்த கைவிசேடம் தான். அதே சமயம் தமிழர்களிடம் இல்லாத வழக்கமாக சிங்களப் பெண்கள் இந்நாளில் ஒன்று சேர்ந்து ‘றபான்’ தட்டுதலில் ஈடுபடுவர்.

தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்கள் சிறிய சிறிய கூட்டங்களாக ஒன்று கூடி கலாசார விளையாட்டுகளை ஒழுங்கு செய்வர். இதற்கு கால எல்லை கிடையாது. தமிழ், சிங்கள புத்தாண்டின் நிறைவில் மக்கள் ஓரிரு நாட்கள் மேலதிகமாக விடுமுறை எடுத்து கொண்டு அதன் பின் பணிகளுக்கு திரும்புவர்.

தமிழ் கால கணிப்பீட்டில் 60 வெவ்வேறு வருடங்கள் காணப்படுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொரு வருடத்தினையும் அந்த 60 வருடங்களின் பெயர் பட்டியல் முறைப்படியே அழைக்கின்றனர். அந்த பெயர்களின் பின் அவ்வருடம் எவ்வாறு அமையும் என்ற மறைவான குறிப்புகளும் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டு விளையாட்டுக்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முதன்மையாக கொண்டு நடாத்தப்படும் விளையாட்டுகளில் தலையணையால் அடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் அழகு குமாரி, குமாரன் போன்றவை உள்ளடங்கும். இவற்றை தவிர மேலதிகமாகவும் சில விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. எது எவ்வாறு  இருப்பினும் இவ்வருடம் இந்த மாதிரியான சமூக ஒன்று கூடல்களின் போது மக்கள் முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை பேணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவுறுது குமாரி போட்டிகளின் போது குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு மட்டும் முககவசத்தினை அகற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலை கலாசார நிகழ்வுகளின் போதும் மற்றும் வேறு நிகழ்வுகளின் போதும் 100 நபர்களுக்கு மேல் ஒன்று கூடல் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 பரவுவதற்கான அபாயம் இந்நாட்களில் அதிகமாக காணப்படுவதே இதற்கான காரணமாகும். மக்கள் இவற்றை கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் இலங்கையில் கொவிட்-19 இன் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகி விடும். அதுமட்டுமன்றி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் எந்த நிகழ்விலும் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள பலகாரங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கென சில விசேட பலகாரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது பணியாரமும் பாசிப்பயறு உருண்டையும் தான். அவற்றை தவிர கொக்கிஸ், கெவுன், கொண்டை பணியாரம் போன்றவையும் அடங்கும். தமிழர்கள் இக்கொண்டாட்டத்தின் போது பணியாரத்தினையும் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தினையும் முன்நிலைபடுத்துவது போலேவே சிங்களவர்களும் செயற்படுகின்றனர். இங்கு கொண்டை பணியாரம் எனப்படுவது தமிழர்கள் செய்யும் பணியாரத்தின் சுவையையே ஒத்திருக்கும் ஆனால் உருவத்தில் பெண்களின் கொண்டை போன்று காணப்படும்.

தமிழ், சிங்கள புத்தாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை இந்தப் பகுதி சற்று வேடிக்கையான ஓர் அனுபவத்தினை உங்களுக்கு பெற்று தரக்கூடும். ஏனெனில் நாம் இப்போது சித்திரை புதுவருட காலத்தின் ஆரம்பம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் நவீன நாகரிக வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றத்தினை காணப் போகிறோம்.

ஆரம்ப காலங்களில் வீடுகளை சாணியிட்டு மெழுகு வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிட்டு சிறிய உயிர்களுக்கும் உணவு படைக்கும் வழக்கம் தினமும் கடைபிடிக்கப்பட்டு வந்த அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதன் பின் வருடத்தில் ஒரு முறை வருடப்பிறப்பின் போது மட்டும் மேற்கொண்டனர். அதன் பின் வண்ணங்கள் கலந்து அரிசியல் கோலத்தினை நிரப்பினர். இன்றைய காலகட்டத்தில் இரசாயன கலவைகளை நீரில் கலந்து வீடுகளை தூய்மை செய்து கோலம் இடுவதற்கான காரணத்தை மறந்து ஸ்டிக்கர் கோலங்கள் வாங்கி ஒட்டி விடுகின்றனர். “என்ன இது? ” என வினவும் பெரியோர்களை  “மாவு கோலம் போடுறதெல்லாம் ஓல்ட் பேஷன்” என கூறுவது நியூ பேஷன் ஆகி விட்டது.

சித்திரை வருடப் பிறப்பின் போது மருத்து நீர் வைத்து விட்டு பாரம்பரிய முறைப்படி சீயக்காய் வைத்து நீராடுவது வழக்கம். இது உடலில் உள்ள உஷ்ணம் தணித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதும் கூட ஆனால் இன்று பெயரிற்கு மருத்து நீரை தலையில் தெளித்து விட்டு இரசாயான சேர்வைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஷேம்புகளை பயன்படுத்தி குளிக்கின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை பிரித்துக் கொண்டு பலகாரங்கள் செய்யும் வழக்கமானது குடும்ப அங்கத்தவரிடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்துகிறது. இன்று அனைவரும் கைகளில் மொபைல்களை வைத்து இரண்டு தட்டு தட்டி ஒன்லைன் ஓர்டர் செய்து பலகாரங்களை கொள்வனவு செய்கின்றனர்.

உறவுகளது வீடுகளுக்கு வருடத்தில் ஒரு முறையாவது சென்று அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்த காலங்களெல்லாம் இன்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் கூறும் போர்வைகளுக்குல் மறைந்து அழிந்து விட்டன.

சமூக கலாசார விளையாட்டுக்கள் எல்லாம் இன்று ஒன்லைன் விளையாட்டுக்களாக மாறி விட்டன. இதற்கு சிறந்த உதாரணம் தாயம் தான். உங்களில் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். சரி உங்களுக்கு புரியும் படியே கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் பிடித்த லூடோ. பாரம்பரிய பெயர்களை மறந்து அப்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

கைவிசேடம் வழக்கம் எல்லாம் இப்போது பேன்ங் டெபோசிட்களாக மாறி விட்டது. வெற்றிலைகள் எல்லாம் பேன்க் சிலிப்களாக மாறி விட்டன. காலம் ஓடும் வேகத்தில் அனைத்தும் மாறிக் கொண்டே வருகிறது. மாற்றங்கள் தவறல்லவே அந்த மாற்றங்கள் நம் பாரம்பரியங்களை முற்றிலுமாக நம்மிலிருந்து அழிக்கும் அளவிற்கு நாம் அனுமதிப்பது தான் தவறு. கடந்த வருடம் வீடுகளுள் இருந்து புதிய வருடத்தினை கொண்டாடிய நமக்கு காலம் இவ்வருடம் வெளியில் சென்று உறவுகளை சந்திக்கும் அளவிற்கு அமைத்து தந்துள்ளது. கொவிட்-19 பரவுதலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டு மொபைல்களை ஓரம் வைத்து விட்டு உண்மையான உலகில் முழுமையான ஓர் புதிய வருடத்தினை கொண்டாடுவோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php