2021 May 1
மே 1ம் திகதி, பலர் இதனை மே தினமாகவும், தொழிலாளர் தினமாகவும் ஓர் விடுமுறை நாளாக கொண்டாடி வருகின்றோம். எனினும் இதன் பின்னனியில் பல தொழிலாளர்களுடைய செல்வம், இரத்தம், உயிர் போன்றவை இழக்கப்பட்டுள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கக்கூடும். இக் கட்டுரையின் மூலம் தொழிலாளர் தினம் உருவானதன் பின்னணியையும், தொழிலாளர் வர்கத்தினரால் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் பற்றியும் நோக்குவோம்.
தற்போதைய உலகில், நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோகம் நாளுக்கு நாள் வலுப்பெற்ற வண்ணமே உள்ளது. அநேகமான வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை ஸ்திரமின்மை ஆக்குவதையே குறிக்கோளாக வைத்து இயங்கி வரும். அதே வேளை பொருளாதாரத்தடை விதிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றது. மனிதனின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக தோன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், மக்களை அழிவுகரமான பாதைக்கு கூட்டிச் செல்கின்றது என்பது வேதனை தரக்கூடிய விடயமாகும். இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிப்படைந்தனர் என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மை. இச் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழிலாளர்களிடையே ஒற்றுமை என்பது ஓர் மிக முக்கியமான அம்சமாக விளங்குகின்றது.
19ம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடது சாரி கோட்பாடுகள் என்றும், அக் கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கொம்யூனிஸ்ட் நாடுகள் என்றும் வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றது. மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவைகளாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் – துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இவ் ‘உழைப்பு’ மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது என்பது, அக் காலப்பகுதிகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விடயமாகும். “உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதே நேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஓர் பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்’’ என்று அறிவித்தவர் மார்க்ஸ்.
இதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிராக பல கிளர்ச்சிகள் அறிமுகமாக தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்கவில் Hay Market Square என்ற இடத்தில் 40,000 க்கு அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்தனர். இப் போரட்டத்தின் 3ம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதோர் கலவரம் ஒன்றுக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். உலக வரலாற்றில் Hay Market Square விவகாரம் போன்றதொறு நிகழ்வொன்று தொழிலாளர் வர்கத்தினருக்கு ஆதரவாக இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே 1989 ஆண்டு முதல் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இலங்கையின் ஆரம்ப காலத்தில் மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ம் ஆண்டு தொழில் சங்க தலைவரான குணசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் கோடிட்ட சிவப்பு பெனியன்கள் மற்றும் வெள்ளை சாரன் அணிந்ததாகவும் பெண்கள் சிவப்பு நிற ஜாக்கட் அணிந்து, மேள தாள நடனத்துடன் தற்போதைய Price Park முதல் Galle Face Green மைதானம் வரை நடைப்பெற்றதாக சித்தரிக்கப்படுகின்றது. இதுவே 1956 ஆம் ஆண்டு S. W. R. D. பண்டாரநாயக்க பிரதம மந்திரி காலத்தில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
1891 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த A. E. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்திற்கு பாரிய சேவை செய்ததுள்ளார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை வென்றுள்ளார் என்பதோடு, இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாக அறியப்படுகிறார்.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தை மையமாகக் கொண்ட மே தின ஊர்வலங்கள் நடத்தப்பட்டாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளதோடு, அரைப் போத்தல் மதுபாணத்திற்கும், 1000 ரூபாய் பணத்திற்கும் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக எம் மக்கள் மாறியுள்ளனர் என்பது வேதனை அழிக்கின்றது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, கூட்டுறவுகள் மூலம் நாட்டை ஒன்றுபடுத்தி சிறந்ததோர் எதிர்காலத்திற்கு நான், நீ, என எல்லோரும் ஒன்றுபடுவோம்.