கலை கலாசாரத்தை நாடி சங்கடஹர சதுர்த்தி விரதம்

சங்கடஹர சதுர்த்தி விரதம்

2021 Apr 28

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம் தெரிய, புன்முறுவல் செய்த படி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரியும் அன்பின் வடிவமே விநாயகர். கணங்களின் அதிபதியாக நிற்பதனால் கணபதி எனவும் சிறு பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்ட தெய்வம் என்பதால் பிள்ளையார் எனவும் விக்கினங்களை தீர்ப்பதால் விக்னேஸ்வரர் எனவும் பல நாமங்களால் போற்றப்படும் விநாயகரை வழிபட உகந்த நாள் தான் சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு மாதமும் இரு சதுர்த்தி விரதங்கள் வருகின்றன. ஆனால் இதில் சங்கடஹர சதுர்த்தி விரதமே விநாயகரை வழிபடுவதற்கான சிறப்பான நாளாகும். சங்கடஹர சதுர்த்தி என்ற சொல்லானது சங்கட + ஹர + சதுர்த்தி என பிரிபடும். இதில் சங்கட என்ற சொல் துன்பங்களையும் ஹர என்ற சொல் அழித்தலையும் சதுர்த்தி என்ற சொல் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளையும் குறிக்கின்றது (இங்கு சங்கடஹர சதுர்த்தி பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளில் தான் அனுஷ்டிக்கப்படுகிறது). அதாவது சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி நாளே சங்கடஹர சதுர்த்தியாகும். இந்நாளினை பற்றி இன்னும் விரிவான தகவல்கள் இதோ,

சங்கடஹர சதுர்த்தி விரத நியதிகள்

*முதன் முதலில் விரதமிருக்க விரும்புபவர்கள் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாளான சங்கடஹர சதுர்த்தியன்று தங்களது முதலாவது விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதன் பின் பதினொரு சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து முடிக்க வேண்டும்.

* எல்லா விரதங்களை போலவே இந்நாளிலும் அதிகாலை எழுந்து நம்மை சுற்றியுள்ள வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மை செய்து குளித்து விட்டு சாமியறையினையும் சுத்தம் செய்து விளக்கேற்றி விரத நாளை தொடங்க வேண்டும்.

*விநாயகரை வழிபடும் போது அறுகம்புல் அல்லது வன்னி இலைகளை கொண்டு பூஜித்து அவருக்கு பிடித்த மோதகம், கொளுக்கட்டை என எதாவது ஒரு உணவினை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இவற்றுள் எதையும் படைக்க இயலாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் அறுகம்புல் இட்டு விநாயகருக்கு படைக்கலாம்.

*விநாயகரை வழிபடும் போது சங்கடஹர சதுர்த்திக்குரிய காயத்திரி மந்திரமான,
“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்திஹி ப்ரசோதயாத்” என உச்சரித்தபடி அல்லது விநாயகர் துதி பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.

*சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து மாலை வரை உணவு உண்ணாது விரதமிருக்க வேண்டும்.

*மாலையில் கோயிலில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

*கோயிலுக்கு சென்று விநாயகரை வழிபடும் போது அவரை 11 முறை வலம் வர வேண்டும்.

*முதலாவது விரத நாளன்று 11 நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும். அடுத்தடுத்து வரும் சதுர்த்தியில் ஒவ்வொரு விளக்காக 11,10,9… குறைத்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதால் எமது சங்கடங்களும் குறைந்துக் கொண்டே வரும் என்பது ஐதீகம். நம்மில் பலர் விளக்கேற்றும் போது எண்ணெய் ஊற்றி திரி போட்ட பின்பு தான் சந்தன குங்குமம் கொண்டு விளக்கினை அலங்கரிக்கின்றோம் ஆனால் உண்மையில், சந்தன குங்குமம் வைத்து எண்ணெய் ஊற்றிய பின்பே விளக்கில் திரியிட வேண்டும்.

*கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின் பச்சரிசி, வெல்லத்தூள் மற்றும் ஒரு வாழைப்பழம் கலந்து பிசைந்து வீட்டில் உள்ள பசுவிற்கோ அல்லது தெருவில் உள்ள பசுவிற்கோ அதனை கொடுத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தல், சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் நற்பலன்களை அதிகரிக்கும்.

*இறுதியாக நெய்வேத்தியம் படைத்து தூபம் காட்டி விநாயகரை வணங்கி பால், பழம் சாப்பிட்டு விரதத்தினை முடித்து கொள்ளலாம்.

இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை அனுஷ்டித்து பல தேவர்களும் முனிவர்களும் கூட அருள் பெற்றுள்ளனர். அவ்வாறாக சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றி புராணங்கள் கூறும் கதைகள்,

*அங்காரகன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக பதவியை அடைந்தான். அதனால் தான் செவ்வாய்க்கிழமை வருகின்ற சங்கடஹர சதுர்த்தி விசேடமானதாக கருதப்படுகிறது.

*தமயந்தி இவ்விரதமிருந்து நளனை அடைந்தாள்.

*விநாயகரின் உருவத்தை கண்டு கேலி செய்த சந்திரன் விநாயகரின் சாபத்திற்கு ஆளானான். அந்த சாபத்திலிருந்து சந்திரன் விமோசனம் பெற்ற நாளும் இந்நாளே ஆகும்.

*நான்காம் பிறையினை பார்த்தமையால் ஸ்ரீ கிருஷ்ணபிரான் அபவாதத்திற்கு ஆளானார். அதன் பின் இவ்விரத்தை அனுஷ்டித்தே அதிலிருந்து மீண்டு வந்தார்.

*சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை பற்றி முருகப் பெருமான் முனிவர் ஒருவருக்கு எடுத்துரைத்தார்.

*வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் இவ்விரதம் பற்றி எடுத்துரைக்க அவர்கள் அதனை முறையே அனுஷ்டித்து தமது நாட்டை மீண்டும் அடைந்தனர்.

*இந்திரன் மற்றும் இராவணன் ஆகியோரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்றுள்ளனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதனால் ஏற்படும் பயன்கள்

*உடலில் உள்ள நோய்கள் குணமாகி, உடல் வலுப் பெறும். நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

*கலக்கமான புத்தி மாறி தெளிவான அறிவும், கல்வி நடவடிக்கைகளில் சிறப்பாகவும் மிளிர முடியும்.

*வாழ்வில் உள்ள துன்பங்கள் தானே அகன்று விடும்.

*சாதிப்பதற்கு தடையாக நிற்கும் தடைகள் இல்லாமல் போகும்.

*இதுவரை வாழ்வில் பெற்ற சாபங்கள் நீங்கும்.

*எந்த துறையிலும் சிறப்பாக செயற்பட முடியும்.

*நினைத்த காரியங்கள் கைகூடும்.

*திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.

*சனி தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும்.

*எந்த செயலை செய்தாலும் வெற்றி உண்டாகும்.

*வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் வாழ்க்கை துணையுடன் இணைவர்.

இவ்வாறாக பல பலன்களை பெற்றுத் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை முறையே அனுஷ்டித்து விநாயகரின் அருளைப் பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here