அனைத்தையும் நாடி  அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்

அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்

2021 May 13

இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் பல தற்கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிபரங்களையும், அதற்கு தாக்கம் செலுத்தும் காரணிகளையும் பற்றி சற்று கவனம் செலுத்துவோமா?

சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் 100,000 நபர்களில் 9 பேரும், 1970களில் 19 பேரும், 1980களில் உச்சகட்டமாக ஒரு இலட்சம் நபரிற்கு 33 பேர் தற்கொலை செய்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதில் அதிகமாக விவசாயிகளும், முறையே நாள் கூலித்தொழிலாளர்கள், பெண் தலை குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டில் பணி புரியும் குடும்பங்களாகும். இதற்கு முக்கிய காரணமாக அக்காலப்பகுதியில் அதிகளவிலான கிருமிநாசினிகளின் பயன்பாடுகளாகும். பிற்பாடு அரசாங்கத்தினால் கொடிய கிருமிநாசினிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. இதன் விளைவாக 1995 – 2015 காலப்பகுதி வரை 93,000 உயிர்கள் காப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. பிராந்திய வீதம் இலட்சத்திற்கு 13.2 ஆக காணப்பட்ட போதிலும், 2016 அறிக்கைப்படி இலங்கையில் தற்கொலை 16.6 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அதிகமானோர் 26 – 30 வயதுக்கு உட்பட்டோரும், 70 வயதிற்கு அப்பாற்பட்டவர்கள் எனவும், அதிலும் ஆண்களே அதிகம் என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

WHO இன் அறிக்கை படி உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர், அதாவது வருடத்திற்கு 800,000 பேர் தற்கொலை மூலம் மரணிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இலங்கையில் தற்கொலை இறப்புகள் குறைவாக இருப்பினும் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகளவாகவே காணப்படுகின்றது. இது மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா நாடுகளை விட அபாயகரமான வரிசையில் உள்ளது என்பது வேதனையளிக்கக்கூடிய விடயமாகும். எனினும் முதல் நிலை நாடுகளாக கருதப்படும் அவுஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், சுவிஸர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறந்து விளங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது இலங்கையை பொருத்தமட்டில் 45/100,000 என விகிதத்தில் இருந்து, தற்கொலைக்கு முயன்றோரின் இறப்பு விகிதம் 14/100,000 என்ற விகிதத்திற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் இளம்பருவ மற்றும் சிறுவர் மனநலன் தொடர்பான சிரேஷ்ட வைத்தியரான ஜயமால் டீ சொய்சா கூறுகையில்,
‘விதிக் கட்டமைப்புகள் விருத்தியடைந்த பின், தற்கொலைக்கு முயன்ற நபரை சிகிச்சை அளிக்கும் போது, மருத்துவ ரீதியான அணுகுமுறையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியமையேயாகும். பொதுவாக இவ்வாறான சந்தர்பங்களில் உட்கொண்ட நஞ்சினை வெளியே எடுப்பதிலேயே கவனம் செலுத்துவோம். ஆனால் தற்போது இதயத்தை முடியுமான வரை இயங்க வைப்பதிலும், பின்னர் ஏனைய சிகிச்சைகளை படிமுறையின் அடிப்படையில் வழங்குவதையும் செய்துவருகிறோம்’ என கருத்து தெரிவித்தார்.

20 வீதமானோர் திருமணம் சார் பிரச்சனைகளாலும், 8 வீதத்தினோர் மன நிலை குறைப்பாட்டினாலும், 12 வீதமானோர் நாள்பட்ட வலியினாலும், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மதுபோதையினால் தற்கொலை செய்வதாகவும் கருத்துக்கணிப்புகளில் கூறப்படுகின்றது.

எம் நாட்டை பொருத்தளவில் இளைஞர் மட்டதினாலான தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக பரீட்சை நோக்கமாகக் கொண்ட கல்வி முறை, துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையாகும். இதனால் ஒரு மாணவன் தனக்கு ஏற்பட்ட மன விரக்தி மற்றும் சோர்விற்கான மூலங்களை அறிந்து அதற்கான தீர்வினை வகுக்காமல், தற்கொலையை மாத்திரம் ஓர் தீர்வாக கருதுகிறான். இதனடிப்படையில் 7 தொடக்கம் 9 வரையான ஆண்டு மாணவர்களுக்கு இரு தசாப்தங்களாக தற்கொலை தொடர்பான விழிப்பூட்டல்கள் வழங்கப்பட்டாலும் 15 – 25 வயதுடையவர்களே இலங்கையில் அதிகம் தற்கொலை செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது செல்வந்த நாடுகளை ஒப்பிடுகையில் இரு மடங்காகும்.

இது தொடர்பில் ஜயமால் டீ சொய்சா கூறுகையில், ‘YouTube இல் தற்கொலை சார்பான பல விடயங்கள் உள்ளன. மிக பிரபல்யமான பல பாடல்களில் போதைப்பொருள், தற்கொலை மற்றும் வன்முறைகள் தொடர்பிலேயே அதிகம் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே இவை அனைத்தையும் மாற்றி அமைப்பதற்கு இதுவே சிறந்த தருணம்’ என தெரிவித்தார்.

நாம் தற்கொலையை தீர்வாக எண்ணும் ஓர் கலாச்சாரத்திலே வாழ்ந்து வருகின்றோம். எமது சிந்தனைகளை மாற்றி அமைப்பதோடு, நாம் வாழும் கலாச்சாரத்தையும் மாற்றி அமைக்கும் கடமை எம் எல்லோருக்கும் உண்டு. தற்கொலை செய்யும் முறையில் கூர்ப்பு கண்ட எம் மக்கள், தீர்வை நோக்கி பயணிக்கவில்லை என்பதே உண்மை. ஆகவே, தற்கொலையை இருளுக்கான விடிவாக எப்போதும் கருதாமல், எச் சூழ்நிலையிலும் தெளிவான சிந்தனையுடன் எமது வாழ்க்கையை நடாத்திச் செல்வோம்.

‘வாழ்க்கை வாழ்வதற்கே’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php