கவிதைகள் உலகை நாடி சிவனொளிபாதமலை – Adam’s Peak

சிவனொளிபாதமலை – Adam’s Peak

2021 May 14

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும் , இந்துக்கள் சிவனொளிபாத மலை என்றும், கிறிஸ்தவர்கள் அட்மஸ்பீக் என்றும், முஸ்லிம்கள் பாவாத மலை என்றும் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரமானதாகும். இந்த மலையுச்சியில் காணப்படுகின்ற 1.8 மீட்டர் அளவான பாறை, பௌத்தர்களால் கௌதம புத்தரின் காலடிச் சுவடாகவும், இந்துக்களால் சிவனின் காலடிச் சுவடாகவும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரையில் ஆதாமின் காலடிச் சுவடெனவும் கருதப்பட்டு வருகின்றது.

இந்த மலையிலிருந்து பார்த்தால் கொழும்பு மற்றும் பேருவளை கலங்கரை விளக்கங்களைக் காண முடியும். சிவனொளிபாதமலையின் 2021க்கான யாத்திரை காலம் 2020 மார்கழியில் ஆரம்பிக்கப்பட்டது. பருவகாலம் ஆரம்பித்துவிட்டால் யாத்திரிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து இங்கு வருவார்கள். பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவிலே படி ஏறத்துவங்கினால், ஏறி முடிக்கும் போது ஏறத்தாழ காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும். மேலும் இந்த மலை பல ஆறுகளின் நதிமூலம். இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையில் தான்.

மத நம்பிக்கைகள்

இலங்கையில் வாழுகின்ற நான்கு மத்ததவர்களும் பொதுவாக வழிபடுகின்ற தலமாக இந்த சிவனொளிபாதமலை இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாதடித்தளம் தொடர்பாக பல்வேறுபட்ட மத நம்பிக்கைகள் காணப்பட்டாலும், இலங்கையிலுள்ள யாத்திரிகள் இறை தரிசனத்தை எதிர்பார்த்து அங்கே செல்கின்றனர்.

பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் “ஸ்ரீ பாத” என்றும், இந்து மதத்தினரைப் பொறுத்தவரையில் இந்த பாதடித்தளம் சிவபெருமானின் பாதம் எனவும் கருதி இதனை “சிவனொளிபாதமலை ” என்றும் அழைக்கின்றனர்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் படி, உலகின் முதல் மனிதனாகிய ஆதம் ஐ சுவர்க்கத்திலிருந்து உலகத்திற்கு அனுப்பிய போது, உலகத்தில் முதலாவதாக கால் பதித்தது இங்கு தானென்று நம்பகின்றனர். எனவே கிறிஸ்தவர்கள் இதனை “அடம்ஸ்பீக்” என்றும் முஸ்லிம்கள் “பாவாதமலை” என்றும் அழைக்கின்றனர்.

இப்படி அனைவராலும் அரும்பெரும் புனிதத்தலமாக போற்றப்படும் சிவனொளிபாத மலையானது, இந்த நான்கு மதங்களின் ஒற்றுமைச் சின்னமாக திகழ்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php