அனைத்தையும் நாடி  Crypto Currency – தமிழ் விளக்கம்

Crypto Currency – தமிழ் விளக்கம்

2021 May 28

பொருளாதாரம்! தற்போது பாமர மக்கள் முதல் செல்வந்தர் வரை பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. நோய், யுத்தம், வறுமை போன்ற அனைத்துமே நேரடியாக பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே. இப் பொருளாதாரம், ‘பணம்’ என்ற பதத்திலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றது. பணத்தை மையாக வைத்துக் கொண்டே இவ்வுலகில் அனைத்துமே இயங்கிக்கொண்டிருக்கின்றது. சமூக அந்தஸ்து முதல், ஓர் மனிதனின் ஒழுக்கம் என, இப் பணமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. பெரும்பாலானோர் இச் செவ்வக வடிவ தாளை உழைப்பதற்காகவே தனது முழு ஆயுளையும் செலவழிக்கின்றனர் என்பதோடு, சில வேலைகளில் இப்பணமே பல மனிதர்களை காவு கொள்ளும் ஆயுதமாகவும் மாறுகிறது..

இப்படி இதுவரை உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பணம், முடிவுக்கு வரப்போகின்றதா? நாணயத் தாள்கள் அனைத்தும் எரிக்கப்படுமா? எமது பணம் அனைத்தும் Binary முறைக்கு மாற்றப்படுமா? சூதாட்டம் என்ற போர்வைக்குள் சாமான்ய மக்களாகிய நாம் வீழ்வோமா?

ஆரம்ப காலத்து மக்கள் ‘பொருளுக்குப் பொருள்’ என்ற பண்டமாற்று முறையிலேயே செயற்பட்டு வந்தனர். காலப்போக்கில் இவ் அனைத்திற்கும் ஓர் பொது ஊடகம் அவசியம் என்றடிப்படையில் ‘பணம்’ உத்வேகம் பெற்றது. இவ்வாறு கணிக்கும் மற்றுமோர் ஊடகமாக தற்காலத்தில் Crypto Currency அறிமுகம் பெறுகின்றது. ‘Crypto’ என்பது இரகசியமான அல்லது பாதுகாப்பான என்று பொருளைத்தரும். உதாரணமாக நாம் WhatsApp மற்றும் Viber இன் ஊடாக அனுப்பும் குறுந்தகவல்கள் அனைத்தும் இவ்வாறு ‘Cryptography’ மூலமாகவே பெறப்படுகின்றது. அதாவது நாம் அனுப்பும் ஓர் குறுந்தகவல் குழப்பமிக்க Binary எண்களைக் கொண்டு அனுப்பப்படும். அதே Binary எண் மறுபடியும் குறுந்தகவலாக மாற்றும் பொறிமுறை, செய்தியை பெறுபவரிடம் மாத்திரமே முடியுமாக இருக்கும். இடைநடுவே இதை எவராலும் பெற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு பாதுகாப்பான முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் ஊடகமாக Crypto Currency விளங்குகின்றது. பொதுவாக Crypto Currency அனைத்தும் Mining மூலமாகவே பெறப்படுகின்றது. Mining என்பது ‘அகழ்வு’ என்ற பொருளைத்தரும். பொதுவாக குறுந்தகவலைப் போன்று Crypto Currency அனைத்தும் குழப்பமிக்க கடினமான ஒர் கணித சூத்திரத்திற்கு பிற்பாடே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதை Blockchain முறை என்று கூறுவார்கள். இவ்வாறு mining செய்வது ஓர் இலகுவான விடயம் கிடையாது. ஆகவே இதனை கணடறிபவருக்கு ஓர் Crypto Currency இனாமாக வழங்கப்படும். இதை அனேகமானோர் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். கருத்துக்கணிப்புகளின் படி, 10 பேரில் ஒரு நபரே இதை புரிந்து கொள்வதாகவும் அதில் மூன்றில் ஒரு நபரே இதில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றனர் என்பதும் வியக்கத்தக்கது.

பொதுவாக அதிகமானோர் Crypto Currency மற்றும் BitCoin இரண்டையும் ஒன்று என கருதுகின்றனர். BitCoin என்பது Cryptocurrency களில் ஒரு வகை. உதாரணமாக நாணய தாள்களில் டொல்லர், பவுண்ட், யூரோ போன்று இதில் BitCoin, Ethereum, Dogecoin என பலவகைப்படும். Dogecoin என்பது இரு மென்பொருளியலாளர்களால், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட Meme களில் பேசும் பொருளாக விளங்கிய ஒரு நாயினை வைத்து வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டதாகும். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட Dogecoin இன் தற்போதைய மொத்த பெருமதி $50 பில்லியன்களாகும். சமூகவலைதளம் மூலமாக மாத்திரம் இவ்வாறானதொரு இலட்சியத்தினை அடைய முடியுமாக இருக்குமா என்ற கேள்விக்கு, இதுஒர் சிறந்த உதாரணமாகும்.

பொதுவாக இதில் முதலீடு செய்வது பலரினால் வரவேற்கத்தக்கதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக கொழும்பில் ‘நெலும் குலுன’ தாமரைக்கோபுரம் கட்டுவதற்கு செலவு செய்த பணத்தை BitCoin இல் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய பெறுமதி, எம் நாட்டினுடைய அனைத்து கடன்களையும் அடைக்கப்பட்டு, பின் மிகுதி பணமும் எஞ்சி இருக்கக்கூடும் என பல ஆய்வாளர்களினால் கூறப்படுகின்றது. அதே வேளை உலகின் மிகப் பெரிய பணக்காரரான ‘எலன் மஸ்க்’ அவர்கள் Tesla நிறுவனத்தின் Car களை BitCoin மூலம் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இதனால் ஒரு BitCoin இன் பெறுமதி $10,000 களில் இருந்து, $50,000 க்கு சென்றதுடன் காலப்போக்கில் அவர், BitCoin mining செய்வதற்கு அதிக மின்சக்தி செலவாகுவதாகக் கூறி பின் விலகிக்கொண்டார். இதனடிப்படையில் Bitcoin பெறுமதி $36,000 வரை குறைந்ததாக குறிப்பிடப்படுகின்றது. ஆகவே Crypto Currency மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கும் என்பதால் இதில் முதலீடு செய்வது ஓர் சூதாட்டமாகவே இப்போது கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php