2021 May 30
தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான நகரம் யாழ்ப்பாணம் என அழைக்கப்பட்டதுடன் இலங்கைத் தீவின் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட நகரமாகவும் விளங்கியது. பல தசாப்தங்களாக யுத்தம், குடியேற்றம் உட்பட உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் இந்த நகரம் ஆக்கபூர்வமான கலாச்சாரம், விரும்பத்தக்க உணவு வகைகள் மற்றும் வரலாற்று தளங்களின் சின்னமாக விளங்குகிறது. இங்கே நாம், யாழ்ப்பாணம் பல ஆண்டுகளாக சந்தித்த மாற்றங்களையும், காலப்போக்கில் விடாமுயற்சியுடன் கட்டியெழுப்பப்பட்ட அதன் வளமான பாரம்பரியத்தையும் பார்க்கலாம்.
யாழ்ப்பாண இராச்சியம்
ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம் என்றும் அழைக்கப்படும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் விவாதிக்கப்படுகிறது, எனினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் 1215 ஆம் ஆண்டு மாகாவின் படையெடுப்போடு இந்த இராச்சியம் நிறுவப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர். ஆரியச்சக்கரவர்த்திகள் தமது அதிகாரத்தை பலப்படுத்தியதை அடுத்து வந்த மிகப்பெரிய வளர்ச்சி, நல்லூரை யாழ்ப்பாணத்தின் தலைநகராக நிறுவியதாகும். 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், சமூக மற்றும் அரசியலில் உச்சக்கட்ட முன்னேற்றங்கள் ஏற்படும் வரை இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையின் அறிகுறிகள் அடையாளம் காணப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் 150 ஆண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து, ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில், அவனது வளர்ப்பு மகனான சபுமால் இளவரசரின் படையெடுப்பினால், இந்த இராச்சியம் கோட்டை இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. எவ்வாறாயினும், 1467 ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியம் சிதைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியம், சிங்கையரியன் வம்சத்தை மீட்டெடுத்து, தன் சுதந்திரத்தை மீண்டும் பெற்றது.
அந்த நேரத்தில், தென்னிந்திய படையெடுப்பின் அச்சுறுத்தல் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், கோட்டை இராச்சியம் கடும் வீழ்ச்சியை கண்டதுடன், கண்டி இராச்சியமும் வெற்றி பெறுவதற்கான எந்த திட்டங்களையும் காட்டவில்லை. சுவாரஸ்யமாக, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இராச்சியங்களுக்கிடையேயான தொடர்பாடல்கள் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் உள்ளன. 1505 இல் போர்த்துக்கேயரின் படையெடுப்பால் தான் யாழ்ப்பாண இராச்சியம் அதன் புகழ்பெற்ற நாட்களின் முடிவைக் கண்டது.
இந்த சங்கிலியன் சிலை யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை யாழ்ப்பாண நகரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஜஃப்னா பட்டணம் மற்றும் அருகிலுள்ள தீவுகளின் பழங்கால வரைபடம் (செப்பு வேலைப்பாடு). 1658 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், யாழ்ப்பாண மாகாணமும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டையும் இலங்கையில் கடைசியாக போர்த்துக்கேயரின் வசமிருந்தன. இது 1672 இல் பி.எச். பால்டேயஸ் அச்சிட்டபட்டது.
காலனித்துவ சகாப்தம்
ஆரம்ப கட்டத்தில், போர்த்துக்கேயர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மசாலாப் பொருட்களான கறுவா மற்றும் மிளகு ஆகியவற்றைப் பெறுவதில் ஆர்வம் காட்டியதால், யாழ்ப்பாணத்தில் குறைந்தளவில் கவனம் செலுத்தினர். லாபகரமான சந்தைகளின் பிரதான இருப்பிடம், கோட்டை இராச்சியத்திற்குள் போர்த்துகேய எதிர்ப்பு குழுக்களின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வன்னியர் தலைவர்கள் மற்றும் போர்த்துக்கேயரின் நலன்களுக்கு மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரி நடவடிக்கைகளின் தலையீடு உள்ளிட்ட பல காரணங்களால், யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது. இராச்சியம் டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட கூடும் எனவும் அவர்கள் அஞ்சினர். ஆகையால், 1620 ஆம் ஆண்டில், அவர்கள் யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலியை கடற்படை மற்றும் தரைவழித் தாக்குதல் மூலமாகக் கைப்பற்றினர். சங்கிலி மன்னனின் சிலை இன்றும் Royal Palace இடிபாடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. பல புனித இந்து கோவில்கள் அழிக்கப்பட்டது உட்பட, உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏராளமான இழப்புக்கள் நிகழ்ந்தன. போர்த்துக்கேய மிஷனரி நடவடிக்கைகளின் செல்வாக்கின் கீழ் ஏற்பட்ட கிறிஸ்தவ மத மாற்றங்களின் அலை, அக்காலத்தில் பிராந்தியத்தில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் பிலிப் டி ஒலிவேராவின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டது. இவர் தலைநகரை நல்லூரிலிருந்து Jaffnapatao இற்கு மாற்றியதுடன், 1627 இல் அவர் இறக்கும் வரை கேப்டன்-மேஜராக பணியாற்றினார். கடற்கரை நகரமான குருநகருக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற யாழ்ப்பாண துறைமுகம் அல்லது கோட்டை அவரது காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் இது 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் டச்சுக்காரர்களால் மீண்டும் கட்டப்பட்டது.
மூன்று மாத முற்றுகையைத் தொடர்ந்து, போர்த்துக்கேயர்கள் 1658 இல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியிடம் யாழ்ப்பாணக் கோட்டையை இழந்தனர். 140 ஆண்டுகால டச்சு காலனித்துவ ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் இருந்ததுடன், இதன்போது வர்த்தகத்திற்கான குறிப்பிடத்தக்க மையமாக மாறியது. வரலாற்றுக் கணக்குகளின்படி, டச்சுக்காரர்கள் போர்த்துக்கேயர்களை விட சகிப்புத்தன்மை உள்ளவர்களாக கருதப்பட்டனர். இந்து கோவில்கள் மற்றும் சொத்துக்களின் பெரும்பகுதி புனரமைக்கப்பட்டு, பூர்வீக மத நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையின் பெரிய அளவிலான புதுப்பிப்பைத் தவிர, பிரஸ்பைடிரியன் தேவாலயங்கள் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் இப்பகுதியில் வளர்ச்சியடைந்தன.
1795 முதல் ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் மேலும் முன்னேற்றமடைந்தது. இக்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் கல்வி மட்டம் திடீரென விருத்தி அடைய துவங்கியது. அந்த நேரத்தில் பல கிறிஸ்தவ மிஷனரிகளால் கட்டப்பட்ட பள்ளிகள் நிறுவப்பட்டதே இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். கொழும்பு, கண்டி மற்றும் தீவின் பிற பகுதிகளுடன் இப்பகுதியை இணைக்கும் புதிய சாலைகள் மற்றும் புகையிரத தண்டவாளங்கள் கட்டுவது உள்ளிட்ட செழிப்பு மற்றும் வளர்ச்சியின் உயர்வு நிலைகளை ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் கண்டது.
சுதந்திரத்திற்குப் பின்னர்
1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இனவாதத்தால் நிகழ்ந்த முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குள் யாழ்ப்பாணம் சிக்குண்டது. ஒரு காலத்தில் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்கிய யாழ்ப்பாணம், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொந்தளிப்பான போர் மண்டலமாக மாறியது. மோதல் காரணமாக, யாழ்ப்பாண மக்களில் கணிசமான பகுதியினர் வெளிநாடுகளுக்கு அல்லது தீவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். 1981 ஆம் ஆண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. இது பல குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் ஆவணங்களையும் கொண்டிருந்ததோடு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்கியது. இது நாட்டின் வரலாற்றில் என்றும் மறவாப் பேரழிவாக கருதப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கைகளைத் தொடர்ந்து ஒரு குறுகிய கால சமாதான உறவு காணப்பட்ட போதிலும், மீண்டும் 2006 இல் ஏற்பட்ட பதட்டநிலை , 2009 இல் போர் முடியும் வரை தொடர்ந்தது.
இன்று, முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் காயங்கள் நகரத்தின் கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் வெடித்த கான்கிரீட்டைத் தாண்டி செல்கின்றன. யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையான மக்களிடையே அதன் வடுக்கள் நீடிக்கின்றன. எவ்வாறாயினும், நகரம் அதன் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் மீளனைத்துக்கொண்டுள்ளதுடன் அதன் சமூக உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. போருக்குப் பிந்தைய புனரமைப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது, கடந்த காலத்தின் காயங்களை குணப்படுத்தும் முயற்சிகளே பலரின் எதிர்பார்ப்பாகும்.
வரலாறு மற்றும் பாரம்பரியம்
பின்வரும் வரலாற்று தளங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரம் என்பவற்றுடன் அழகாக பின்னிப்பிணைந்துள்ளது. அவை யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தினை விவரிக்க உதவுகின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோயில்
அன்பு, போர் மற்றும் அழகின் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் பல ஆண்டுகளாக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. முதலில் 948 A.D இல் கட்டப்பட்ட கோவில், புவனேகபாகு மற்றும் இளவரசர் சபுமால் உட்பட பலரால் புனரமைக்கப்பட்டபோது அதன் மகிமையை உணர்த்தியது. கோயிலால் பெயர் பெற்ற நகரமான நல்லூர், அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் தற்காப்பு கோட்டை காரணமாக மன்னர்களின் ஆட்சியின் போது தலைநகராக செயல்பட்டது.
இந்த கோயிலின் கட்டடக்கலை மரபு தங்கத்தால் சூழப்பட்ட நான்கு கோபுரங்கள், வெளிப்புற முற்றம், தீர்த்தக் கேணி, புண்ணியத்தலம் மற்றும் பிற குறிப்பிடத்தக்க கூறுகள் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. பண்டைய நாட்களில், வெளி வட்டங்கள் வணிக விஷயங்களுக்காகவும் அங்கு வசித்த பொது மக்களுக்காகவும் கொடுக்கப்பட்ட அதேவேளை உள் வட்டங்கள் பிரபுக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கை எதிர்கொண்டு, தங்கத்தால் சூழப்பட்ட ஐந்து மாடி கோபுரத்தைக் கொண்டுள்ளது. தற்போது, உள் வட்டம் விநாயகர், வைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சன்னிதிகளைக் கொண்டுள்ளது. புனித குளம் மற்றும் தண்டாயுதபாணி சன்னதி தெற்குப் பிரிவில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாண பொது நூலகம்
1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பது நவீன வரலாற்றில் மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் 97,000 தொகுதிகளை உள்ளடக்கிய மதிப்புமிக்க பொருட்கள் இருந்தன. அவற்றில் தீயினால் அழிக்கப்பட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஈடுசெய்ய முடியாத பண்டைய நூல்கள் ஆகியவை உள்ளடங்கும். நலன் விரும்பிகளின் தாராளமான நன்கொடைகளுடன், நூலகம் 2001 ஆம் ஆண்டளவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. இது போர் நிறுத்தத்தின் பிறகு புதுப்பிக்கப்பட்ட முதல் பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும்.
இந்த வரலாற்று தளம் அதன் ஒளிரும் வெள்ளை பூச்சு மற்றும் கிளாசிக்கல் கோடுகளுடன் உயரமாக நிற்கிறது. இது நகரத்தின் மீள் கட்டியெழுப்பப்பட்ட தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் சான்றாகும். இந்த கட்டிடம் நவ-முகலாய வடிவமைப்புக்கு சான்றாக உள்ளதுடன் இலங்கை மற்றும் பரந்த பகுதி முழுவதும் கட்டடக்கலையின் ஒரு அற்புதமாகவே கருதப்படுகிறது.
யாழ்ப்பாணக் கோட்டை
முன்னொரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய டச்சு கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை 1680 ஆம் ஆண்டில் பிலிப் டி ஒலிவேராவால் கட்டப்பட்டது. கிளாசிக் Vaubenesque நட்சத்திர வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தற்காப்பு முக்கோணங்கள் 1792 இன் பின்னர் சேர்க்கப்பட்டன. அத்தகைய கருத்து 15 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் பிரபலமாக இருந்தது. இது இலங்கையில் கட்டப்பட்ட இரண்டாவது பெரிய டச்சு கோட்டையாகும் என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது அதன் கடலோரப் பகுதியில் சிலவும், ஒரு சில நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும், கோட்டையின் சுரங்கங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. டச்சு கட்டிடக்கலை அறிகுறிகள் குறுகிய பரப்பளவு சுவர்கள் வழியாகவும், அலங்கரிக்கப்பட்ட குறுக்கு நெடுக்காக அமைக்கப்பட்ட கைப்பிடிச் சுவர்கள் மூலமும் வெளிப்படுகிறது. இது டச்சுக்காரர்களின் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான பாதையாக இருந்ததாக அறியப்படுகிறது.
உள்நாட்டுப் போரினால் மோசமாக சேதமடைந்த இடத்தை புனரமைக்கும் முயற்சியில், டச்சு அரசாங்கம் தொல்பொருள் ரீதியாக கோட்டையை புதுப்பிக்க முன்வந்தது. இருப்பினும், இந்த திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பல புதையல்கள், பண்டைய நாணயங்கள் மற்றும் இடைக்கால மட்பாண்டங்கள் போன்றவை, இந்த தளம் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆனையிறவு
ஆனையிறவு யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் எனவும் அழைக்கப்படுகிறது. இது யாழ்ப்பாண தீபகற்பத்தின் சாவகச்சேரியை தீவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய வழியாக அமைகிறது. இங்கு, உள்நாட்டுப் போரின் காரணமாக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 – 80,000 மெட்ரிக் டொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ஆனையிறவு உப்புத் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்கத்தின் புனரமைப்பு, கசிவு பாதைகள் அமைத்தல் மற்றும் கடல் நீர் உள்ளெடுத்தல் ஆகியவற்றுடன் போருக்குப் பிந்தைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் ஒரு கோட்டையை கட்டிய போது ஆனையிறவு ஒரு இராணுவ தளமாக மாறியது. இந்த கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக்காரர்களால் காவலில் வைக்கப்பட்டது. இது உள்நாட்டுப் போரின் போது இலங்கை இராணுவத்திற்கான ஒரு முக்கிய இராணுவ தளமாகவும் இருந்தது மற்றும் 1991, 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் போரின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் மூலோபாய இருப்பிடத்தை கையகப்படுத்த முயன்ற நேரங்களில், LTTE விடுதலைப் புலிகள் கைப்பற்ற முயன்ற முக்கிய இடமாகவும் இருந்தது. இன்று, இது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் இரண்டு முக்கிய போர் நினைவுச் சின்னங்களை கொண்டிருக்கிறது.
சங்கிலித் தோப்பு நுழைவாயில் மற்றும் மந்திரி மனை
பூதத்தம்பி வளைவு அல்லது சங்கிலித் தோப்பு என அழைக்கப்படும் இது பருத்தித்துறை சாலையின் கீழே உள்ள ஒரு வரலாற்று தளமாகவும் பாண்டியா ராயல் பேலஸின் (Pandiya Royal Palace) அசல் நுழைவாயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. தற்போது சீரற்ற வானிலை காரணமாக சிதைவடைந்த போதிலும், 1519 ஆம் ஆண்டு முதல் சங்கிலி மன்னருக்காக செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சிக்கலான செதுக்குதல் இன்னும் காணப்படுகிறது. இதேபோல், போர்த்துக்கேயர் படையெடுப்பு காரணமாக யாழ்ப்பாண இராச்சியம் சிதைவதற்கு முன்னர், சங்கிலி மன்னரின் அமைச்சர்களில் ஒருவரின் வீடு என்று நம்பப்படும் மற்றொரு தொல்பொருள் ரீதியாக பாதுகாக்கப்பட்ட தளமாக மந்திரி மனை விளங்குகிறது. இது டச்சு காலத்தில் கட்டப்பட்டதா அல்லது போர்த்துக்கேயரின் காலத்தில் கட்டப்படாதா என இதன் தோற்றம் பற்றிய விபரம் வரலாற்று ஆசிரியர்களிடையே இன்னும் விவாதிக்கப்படுகிறது.
இந்த வரலாற்று அடையாளங்கள் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியே. உள்நாட்டுப் போரின் போது பல பாதிப்புகளுக்கு ஆளான போதிலும், இந்த தளங்களில் பெரும்பாலானவை நீண்ட காலமாக நீடித்து, ஒரு சகாப்தத்தின் சிறப்பை பிரதிபலிக்கின்றன.
நீடித்திருக்கும் மரபு
இன்றுவரை தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உறைவிடமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது. இந்த அற்புதமான நகரத்தின் வளமான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்காலத்தில் புதுப்பிக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகள் கவனம் செலுத்துவதால், இத்தகைய மரபுகள் மீண்டும் வாழ்க்கைக்குள் மென்மேலும் பண்பட்டு வருகின்றன. அதன் சமீபத்திய வரலாற்றைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணத்தின் மக்களும் இடங்களும் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துடிப்பான உற்சாகத்தை கொண்டிருக்கின்றன. நகரத்தின் ஆட்சி மற்றும் காலனித்துவ மரபு முதல் கலை மற்றும் பழக்கவழக்கங்கள் வரை, எங்கள் அதிசயம் மிக்க யாழ்ப்பாணத்தை சுற்றி காதலிக்க வேண்டிய நிறைய அம்சங்கள் இருக்கின்றன.