2021 Jun 3
அக்காவின் மூன்றரை வயதுக் குழந்தை, சாய்மானக் கதிரையின் மீது ஏறி விளையாட முயற்சித்துக் கொண்டிருந்தாள். பின்னாலிருந்து சட்டெனப் போய் தூக்கிக் கொண்டு மெல்லக் கதை கொடுத்தபடி யன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். அவளும், நல்ல ஒய்யாரமாக என் இடைகளில் உட்கார்ந்து யன்னலுக்கு வெளியால் விடுப்புப் பார்த்தபடி இருந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்த சிட்டுக்குருவியொன்று, தெருவிலிருந்த டெலிஃபோன் போஸ்ட்டிலிருந்து, அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு கனெக்சன் போகும் மெல்லிய வயரில் வந்து உட்கார்ந்து கொண்டது. “கீச்சென்ற” தன் மழலைக் குரலில் ‘BIRD’ என்றாள். உடனே நான் புத்திசாலித்தனமாக ‘ இது சிட்டுக்குருவி..குருவி.. குருவி சொல்லுங்கோ’ என்றேன்.. மறுபடியும் ‘BIRD’ என்றாள். அவளுக்கு சொல்லத் தெரியவில்லையோ என்னவோ, முறைத்துப் பார்த்தாள் என் மூஞ்சியை.. ‘வேறென்ன BIRD தெரியும் உங்களுக்கு?’ எனக்கேட்டேன்.. மறுபடியும் ‘BIRD’ என்றாள். ‘ ஓ அம்மா, வேற BIRD சொல்லுங்கோ..’ என்று கேட்க, இன்னும் பெலமாக ‘BIRD’ என்றாள் பல்லைக்கடித்துக் கொண்டு…
நான் நன்கு பரீட்சியமான பறவை தானே என்று, ‘உனக்கு காக்கா தெரியுமல்லா.. காக்கா ? ‘ என்று கேட்டேன். அவளுக்கு விளங்கவில்லை போல, கொஞ்ச நேரம் பெரும் வியப்பாகப் பார்த்தாள். ஆனால் வாய் திறந்தாளில்லை. மனம் விடாமல் தொடர்ந்து ‘கா..கா..’ வென்று கத்தியெல்லாம் பார்த்தேன். தன் முழுப்பெலத்தோடு, ஓங்கிக் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு இறங்கித் தன் தாயிடம் ஓடிவிட்டாள்.
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார் புரட்சிக்கவி பாரதி. இத்தனை நூற்றாண்டுகளைக் கண்டு விட்ட போதிலும், எத்தனையோ யுத்தங்களைக் கடந்து விட்ட போதிலும் மனித மனங்களில் சாதிவெறி, மதவெறி, தீண்டாமை என்பன இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பூமியில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் பிறப்பாலும், மனிதர் என்ற இனத்தாலும் ஒன்றாக உள்ள போதிலும் சாதி, மத பேதங்கள் ஏன் உருவாக்கப்பட்டது? அதனால் யார் பயனடைகின்றனர்? யார் பாதிக்கப்படுகின்றனர்?
“சாதி மனிதனை சாக்கடையாக்கும், மதம் மனிதனை மிருகமாக்கும்“, எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனித சமூகம் தீண்டாமையில் கட்டுண்டு கிடக்கத்தான் போகிறது என்று அன்றே தந்தை பெரியார் கூறினார்.
பணம் படைத்த சாதிக்காரர்கள் ஒருசிலர் தமது சாதியை முன்னிறுத்தி ஊருக்கு நற்காரியங்களை செய்தும், ஊருக்குள் பெரும்பதவி வகித்தும், ஊர் காரியங்களில் செல்வாக்குச் செலுத்தியும், பிற சமூகங்களை தீண்டத்தகாதவர்களாக சித்தரித்தும், அடக்குமுறைகளை செய்வதை கேள்விப்படுகிறோம். அறிஞர் டாக்டர் அம்பேத்கர் கூறியது போல “ஒரு நல்ல மனிதன் தயாரிக்கும் வெடிகுண்டு என்ன வெடிக்காமலா இருக்கும்? அல்லது விஷப்புகை தான் கொல்லாமல் இருக்குமா? சாதி உணர்வுகளில் நிரம்பிய ஒருவன், எத்தகைய நல்லவனாய்ப் போற்றப் பட்டாலும், அவனுக்குள் முளை விட்ட சாதி என்ற விஷச்செடியே அவனை ஒருநாள் அழித்துவிடும் என்பதே உண்மை.
சாதி எனும் கொடிய தீ நம் நாட்டில் மட்டுமல்லாது பிற தேசங்களிலும் தலை விரித்தாடியது நாமறிந்ததே. இந்தியாவில் தலித் மக்கள் சாதி ரீதியான அதிகமான ஒடுக்குமுறைகளையும் வன்கொடுமைகளையும் அனுபவிக்கின்றார்கள். அமெரிக்காவில் அண்மையில் கூட கறுப்பினத்தர்கள் வெள்ளையர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இப்படி சாதாரண வீதித்தெருக்கள் துவங்கி, உலகளவில் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை சரி நிகரற்று, சமத்துவம் என்பதை பேச்சளவில் உச்சரித்துக் கொண்டு மட்டுமே வாழும் நிலை இன்று வரை காணப்படுகிறது. நீறுபூத்த நெருப்பாக சாதிய வேறுபாடுகள் அனைத்துத் தளங்களிலும் நோக்கப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்ற பெயருடன், குறித்த சமூகத்தினரின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டே வருகின்றன. இத்தகைய வேறுபாடுகள் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமன்றி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது.
“செய்யும் தொழிலே தெய்வம்” என்பார்கள். நடைமுறையில் தொழிலைக்கொண்டும், இருக்கும் இடத்தைக்கொண்டும் ஒருவருடைய சாதியை இனங்கண்டு அவரை இழிவாக எண்ணும் போக்கு கட்டாயம் மாற்றமடைய வேண்டும். கடமை செய்பவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கக் கூட வக்கற்ற, முதலாளித்துவ சிந்தனாவாதிகள் நிறைந்த சமுகம், தமது இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்திய ஒரு போக்கற்ற சிந்தனையாகவே சாதிகளும், மதங்களும், ஏனைய தீண்டாமைகளும் அடக்குமுறைகளும் இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்திலிருந்தே சாதியக் கட்டமைப்புகள் கட்டுடைக்கப் படாமலே இன்றுவரை இருக்கின்றது. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் நகர சபையினால் வெள்ளாளர்களை அடக்கம் செய்ய தனி மயானமும் , ஏனைய சாதி மக்களை அடக்கம் செய்ய தனி மயானமும் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இது எவ்வளவு கொடுமையான விடயம். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
இந்தச் சமூகத்தில் பிறப்புச்சான்று தொடக்கம், பள்ளிகள், கல்விநிலையங்கள், வேலையிடங்கள், வீடு, குடும்பம், திருமணம், பொது நிகழ்வுகள், சமூக மேடைகள், வைபவங்கள், கோயில் குளங்கள், கடைகள், விருந்து நிலையங்கள், பொதுப் போக்குவரத்து,பொதுச் சேவை அமைப்புகள், வைத்தியசாலைகள், இறப்பு, ஈமைக்கிரியை என, அடிப்படை அரசியல் அதிகாரங்கள் வரை, தொடர்ந்து ஒரு மனிதனை இத்தகைய பாகுபாடுகளும், அதிகார அடக்குமுறைகளும் நம்மையறியாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
தற்காலத்தில் சமூக வலைதளங்களிலும், ஏனைய சமூக ஊடகங்களிலும் கவனித்துப் பார்த்தால், இன, மத, மொழி, பிரதேசவாத, வர்க்க ரீதியான மற்றும் வெவ்வேறு விதமான பாகுபாடுகளின்பால், இன்றைய இளைஞர்கள் பரவலாக ஈர்க்கப்படுகின்றார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதனால் எதிர்வருங்காலங்களில் சமூகத்தின்பால் சமூகம் பெரும் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி, மனிதரை மனிதர் அழித்துக் கொள்ளும் அவல நிலைக்கு மாத்திரமே தள்ளப்படுகிறோமே தவிர, எதுவித நன்மையும் யதார்த்தத்தில் நிகழப்போவதில்லை.
அப்பழுக்கற்ற உண்மை என்னவென்றால், இவை அனைத்தும் மனித சமூகத்தின் கூட்டுப்பலத்தை உடைத்தெறியும் அதிகார யுக்தியே தவிர, அவற்றை நாம் முன்னிறுத்தி, அடையாளப்படுத்தி, அதில் பெருமிதம் கொள்ள முயல்வது என்பது அடிமுட்டாள்தனத்தின் உச்சமாகவே இருக்கும்!
சிந்திப்போம்.
முதல் மாற்றத்தை, நம்மில் ஏற்படுத்துவோம்.