அனைத்தையும் நாடி  தற்காலத்தில் இலங்கையின் கடற்தொழில் துறை எதிர்நோக்கும் இடர்கள்

தற்காலத்தில் இலங்கையின் கடற்தொழில் துறை எதிர்நோக்கும் இடர்கள்

2021 Jun 24

கொரோனா பெருந்தொற்றானது சமீப காலத்தில் அனைத்து துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம், தனிநபர் வருமானம், அந்நிய செலாவணி உட்பட அனைத்து விடயங்களும் மந்த நிலையடைந்துள்ளன. கல்வி, விவசாயம், சுற்றுலா என்பவற்றுடன் கடற்தொழில் சார் விடயங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மீன்பிடி தொழில் துறைகளும் சீரழிந்து போயுள்ள நிலையில், அது கடல்சார் துறைகளை நம்பி வாழும் பொதுமக்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

நம் நாட்டினை பொறுத்தவரையில், இது ஒரு தீவு நாடாக உள்ளமையினால் இங்கு நாட்டைச் சுற்றிய அனைத்து கரையோரப் பிரதேசங்களும் கடற்தொழிலை நம்பியே அமையப்பெற்றுள்ளன. எனவே இதனை வாழ்வாதாரமாகவும், ஜீவனோபாயமாக கொண்டு வாழ்கின்ற எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தொழில் வாய்ப்புகளும், அன்றாட வருமானமும் இழக்கப்பட்ட நிலையிலேதான் தற்கால மக்கள் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள். இலங்கைத் தீவானது தொன்றுதொட்டு கடல் வழியாக பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ரீதியாக நட்புறவினைப் பேணுகின்ற நாடாகும். இத்தகைய சூழலில், பெரும்பாலான வேளைகளில் இலங்கை நாட்டு வளங்கள் பிறநாட்டினரால் சூறையாடப்படுகின்றன.

இலங்கையானது பெருமளவில் கடற்தொழில்சார் துறையையும், தேயிலைத் தோட்டத்தையுமே தனது பொருளாதார சக்தியாகக் கொண்டுள்ளது. இப் பெறுந்தொற்றுக் காரணமாக எல்லாத் துறைகளும் தொழில் வாய்ப்புக்களை இழந்து, நாடே மிகவும் இக்கட்டானதொரு சூழ்நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அதுமட்டுமன்றி, கடலில் உக்கலடையாத பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற கழிவுகளை கொட்டுவதும், கடல்வாழ் உயிரினங்களின் உயிர்களை பறிக்கின்ற இரசாயனங்களை கடலில் சேர்ப்பதும், கடல்வாழ் உயிரினங்களின் நிலவுகையை இல்லாதொழிப்பதும், கடலில் எண்ணெய் கசிவினை ஏற்படுவதும் என கடல் வளங்கள் சேதமாக்கப்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்ட நிலையில், உள்ள வளங்களும் வேற்று நாட்டவரால் களவாட படுகின்றன. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளாலும் நம் நாட்டு மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

அண்மைக் காலத்தில் நாமறிந்த விடயம் கொழும்பை அண்டிய கடற்பரப்பில் சரக்குக் கப்பல் ஒன்று தீக்கிரையானதினால் அதிலுள்ள ஏற்றுமதிப் பொருட்கள் தீப்பற்றியதுடன், கடலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் அதனை சூழவுள்ள கடலுயிர்களும் இறந்து கரையொதுங்கின. இது நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பாரியதொரு பாதிப்பாகும். இவ்வாறு எண்ணிலடங்காத கடல் வளங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மனித செயற்பாடுகள் மனிதரால், தெரிந்தும் தெரியாமலும் மேற்கொள்ளப்பட்டபடியே தான் உள்ளன. இவ்வாறே கடலுக்கும், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து நிலை தொடருமாயின், நம் நாடு வெகுவிரைவிலேயே பாரிய நஷ்டம் அடைவதுடன், பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இதனால் கடற்தொழிலை தமது வாழ்வாதாரமாகவும், வருமானமீட்டும் தொழில் வாய்ப்பாகவும் கொண்டுள்ள மீனவ சமுதாயம் மேலும் ஏழ்மை அடையக்கூடும்.

கடல் வாழ் உயிரினங்கள் அழிவடைந்து போனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, கரையோர மீனினங்கள் முதல் ஆழ்கடல் உயிரினங்கள் வரை சிறிது சிறிதாக அழிவடைந்து, நாளடைவில் இல்லாமலேயே போகும் வாய்ப்புள்ளது. இவ்வாறாக கடல் உயிரினங்கள் அழிவடைய பெரியளவு பங்களிப்புச் செய்வது மனித செயற்பாடுகளேயாகும். இவை சிறிது சிறிதாக ஆரம்பித்து இன்று பாரிய கடற்சவாலாக மாறியுள்ளமையை அறிந்து கொள்ள வேண்டும். அவையாவன,

  • பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற உக்கலடையாத கழிவுகள் கடலில் சேருதல்.
  • திண்மக் கழிவுகள் கடலில் சேர்தல்.
  • இரசாயன கழிவுகள் நச்சுப் பதார்த்தங்கள் கடலில் சேருதல்.
  • கப்பல் போக்குவரத்தினால் கடலில் சிந்தப்படும் எண்ணெய் கழிவுகள்.
  • அத்துமீறிய மீன்பிடி தொழில்.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாகவே கடல் வளங்கள் அழிவடைந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியில் பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பினால், சிறிய அளவில் கடற் தொழிலை நம்பி வாழும் மீனவ சமுதாய மக்கள் தமக்கான தொழில் வாய்ப்பினை இழப்பதுடன், வருமானமின்றித் தத்தளிக்கும் நிலையும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறன பிரச்சினைகளைப் பற்றி வடமாகாணத்தில் தொழில் செய்யும் சில கடற்தொழிலாளர்களுடன்  உரையாடியபோது,

“இந்திய தொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து தொழில் செய்வதனால் நமது வளங்களை அதிகளவு அவர்கள் சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள். அதனால் எமக்கு  வருகின்ற வருமானம் சரியான குறைவாக இருக்கின்றது. அதோடு சில நேரங்களில் எமது படகுகளை தாக்கி விட்டு செல்கின்றனர். இதனால் எமது  படகுகள் பாரிய சேதத்திற்கு உள்ளாகின்றன. அரசாங்க தரப்பிற்கு கூறினால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை நிவாரணங்களும் கொடுப்பதும் இல்லை.”

“அத்துடன் அண்மைக் காலங்களாக கடலில் பழைய, பழுதடைந்த பஸ் வண்டிகள் இறக்குவதினால் நமது வலைகள் அதில் விழுந்து அறுகின்றன. சில நேரங்களில் வலைகள் காணாமலும் போகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் எமக்கு மேலதிகமாக அநாவசிய செலவுகள் ஏற்பட்டு, எங்களுக்கு மிக நட்டத்தில் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது.”

“அரசாங்கத்தில்  இருந்து எந்தவித நிவாரணங்கள், கொடுப்பனவுகள், உதவிகள் எங்களுக்கு கிடைப்பதும் இல்லை, அரசு இது தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும்.”

இவ்வாறான பிரச்சனைகளை நம் நாட்டு அரசாங்கமும், அத் துறைசார் பிரமுகர்களும் கவனத்திற்கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பதற்கான நடவடிக்கை முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், நாளடைவில் பாரிய துறைசார் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகலாம். இவ்வாறு கடல் வளங்கள் அழிவடைவதால் அதனை சார்ந்த ஏனைய தொழில் வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக படகு உற்பத்தி தொழில், கருவாடு உற்பத்தி தொழில், கடல் உணவு பதப்படுத்துதல், கடல் உணவு ஏற்றுமதி ஆகிய கடலை அண்டிய ஏனைய தொழில் துறைகளும் பாதிக்கப்படுவதால், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குடும்பங்கள் தொழிலை இழந்து தவிக்க நேரிடும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்படக் கூடும். எனவே கடல் வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். கடலை நம்பிய குடும்பங்களின் வாழ்வை நோக்காகக் கொண்டு, கடல் வாழ் உயிரினங்களின்அழிவை கட்டுப்படுத்தி அவற்றை பாதுகாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php