நாடி Review ‘பொட்டு’ – குறும்படம் – நாடி Review

‘பொட்டு’ – குறும்படம் – நாடி Review

2021 Jun 22

தன்னை தானே அலங்கரித்து ரசிப்பது பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரதும் இயல்பாக உள்ளது. என்னதான் நவீன வளர்ச்சி வான் தொட்ட போதும் கரு நிற மை அல்லது குங்குமம் தொட்டு பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடதக்க ஓர் விடயமாகும். இன்றைய சமூகத்தில் பெண்களது பொட்டு வைக்கும் வழக்கம் என்னென்ன மாதிரியான மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதனையும், அதனால் பெண்கள் எதிர்கொள்ளும் மன ரீதியான தாக்கங்கள் பற்றியும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுவதே ‘பொட்டு’ குறுந்திரைப்படத்தின் கருப்பொருளாக உள்ளது. இந்த குறுந்திரைப்படத்தின் தலைப்பினை வாசித்தவுடன் இது பெண்களது வாழ்வில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நன்நித்திலப் பொட்டு பற்றியது தான் என்பதனை தெளிவாக கணிக்க முடிகின்றது.

Thrii Production மற்றும் AGNA வழங்கிய, Navayuga Kugarajah நெறியாள்கை மற்றும் தயாரிப்பில் உருவான ‘பொட்டு’ குறுந்திரைப்படம் அண்மையில் YouTube தளத்தில் வெளியானது. இதில் Navayuga Kugarajah, Sharon, Pracy, Priya Daniel, Geethani, senavirathne, Manujitha Dimansa, Yasotha Rathakrishnan மற்றும் Julieana Johnphilip ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறுந் திரைப்படத்திற்கான ஔிப்பதிவினை MadHuni Hiranya Alahackone செய்துள்ளார். இந்த குறுந்திரைப்படத்திற்கான அனைத்து Editing வேலைப்பாடுகளையும் Joshuah Heby மேற்கொண்டுள்ளார். இந்த குறுந்திரைப்படத்தில் MC Raj இசையமைத்துள்ளார். இதில் Art directorஆக Goabi Ramanan Pவும் Sound production மற்றும் designகளை Nanda Nandhi Jayakody ஆகியோரும், Costume designerஆக Ama Wijesekaraவும், Make up artistஆக Madara Godageவும், Production Managerஆக Pavithra Madubashiniயும், First assistant directorஆக Ruwan Malith Peirisவும், Second assistant directorஆக Kirushanthi Gnanapragasamவும், Production co-ordinatorஆக Chathurangi Rasikala Pathirageவும், Assistant production co-ordinatorஆக Pathurjan Wijesekaraவும் பணியாற்றியுள்ளமையோடு இந்த குறுந்திரைப்படத்திற்கான மொழிபெயர்ப்பினை Nallathamby Krishnadas மேற்கொண்டுள்ளார்.

“யாருக்கும் நாங்கள் குறைந்தவர் இல்லை, எங்களிலும் குறைந்தவர் உலகத்தில் இல்லை” என்ற வி.எம்.குகராஜா என்பவரது வார்த்தைகளை மேற்கோளாக காட்டியபடி அமைதியான முறையில் குறுந்திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே, பார்வையாளர்களது மனதில் இயக்குனர் சமத்துவ ஔியினை ஏற்றுவதற்கான எண்ணெய் ஊற்றுகிறார். அப்படியே அமைதியான முறையில் ஓர் பெண் மங்கிய நிறத்திலான புடவை அணிந்து தன்னை தானே கண்ணாடி முன் நின்று ஆயத்தப்படுத்தும் காட்சியினை காட்டுகின்றனர். என்ன தான் பெண்கள் தன்னை தானே நேர்த்தியான முறையில் ஆயத்தப்படுத்திக் கொண்டாலும் இறுதியில் அனைத்திற்கும் அழகு சேர்ப்பது பொட்டு தானே. அதனால் இந்த குறுந்திரைப்படத்தில் தோன்றும் கதாநாயகியும் வழக்கம் போல் பொட்டு வைப்பதற்காக சிவப்பு நிற மை திறந்து அதில் பென்சிலின் ஒரு முனையால் எடுத்து நெற்றியில் வைக்க முற்படும் போது, அவள் ஓர் நொடி ஏதோ ஒன்றை தொலைத்தவள் போல் உறைந்து நிற்கிறாள். முன்பு அவள் வாழ்ந்த நிலையினை சிறு காட்சியாக காட்டுவதன் மூலம் எளிமையான முறையில் தெளிவுப்படுத்துகிறார்கள். கடந்த கால காட்சிகளில் இந்து சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களால் அனுஷ்டிக்கப்படும் கௌரி காப்பு விரதத்திற்கான காப்பு நூலினையும், தாலிச்சங்கிலியையும், அவள் வட்ட முகத்தில் தெளிய சிரிக்கும் சிவப்பு திலகம் தனையும் காட்டுவதோடு நிறுத்தி விடாது, கதாநாயகியின் மகள் தனக்கும் காலுக்கு மோதிரம் வேண்டும் என கால் மிஞ்சியை சுட்டிக் காட்டும் போது, அதற்கு ‘உனக்கென கணவன் ஒருவன் வர வேண்டுமென’ கூறுவதனூடாக கதாநாயகியின் கடந்த கால மொத்த அழகும் கலைந்து இந்த கோலம் அவள் புக காரணம் அவள் கணவனை இழந்தமையே என்பது எளிதில் பார்வையாளர்களுக்கு புரிந்துவிடுகிறது.

ஏற்கனவே மனரீதியாக காயப்பட்டு கிடக்கும் கணவனை இழந்த பெண்களை சமூகமும் சுற்றத்தாரும் நடத்தும் விதம் பார்ப்பவர் மனதில் “இப்படியும் மனிதர்களா?” என்ற எரிச்சல் எழச் செய்கிறது. நன்றாக பேசி சிரிக்கும் அயலவர்கள் சட்டென மனமுடைய பேசி ஒதுக்கும் அந்தக் காட்சி, சமூகத்தின் இந்த நியதியினை உடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை உருவாக்குகிறது. கதாநாயகியின் கடந்த கால காட்சியில் தன்னிடம் பரதம் பயிலும் பிள்ளைகளுக்கு சந்தோஷமாக ஆசிர்வாதம் செய்திருப்பாள். ஆனால் நிகழ்காலத்தில் யாரோ ஓர் குழந்தை ஓடி வந்து தன் காலில் விழும் போது ஆசிர்வாதம் செய்ய தயங்கி சுற்றி எவரும் பார்க்கிறார்களா என்ற அவளது ஐயம் பார்ப்பவர் மனதில் பரிதாபத்தினை துளிர்விடச் செய்கிறது. அவள் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கிய பிள்ளையின் தாய் காதாநாயகியிடம் தன் மகளுக்கு பரதத்தில் இருக்கும் ஆர்வத்தை கூறி தன் மகளுக்கும் கற்றுக் கொடுக்கும் படி கேட்பார். அந்த பெண் ஓர் சிங்கள பெண். அவள் கூறும் வசனங்களுக்கான மொழிப் பெயர்ப்பு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேப் போல் தமிழ் வசனங்களையும் சிங்களத்தில் மொழி பெயர்த்திருந்தால் நம் சிங்கள சகோதரர்களையும் இந்த குறுந்திரைப்படம் பெருமளவில் சென்றடைந்திருக்கும்.

சரி நாம் கதைக்கு திரும்புவோம். அதன் பின் பாடசாலையில் பொட்டு வைப்பதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களை ஆசிரியர் விளக்கும் போது கதாநாயகியின் மகள் தன் ஆசிரியரை பார்த்து கேட்கும் கேள்வியானது சமூகத்திலுள்ள அனைவரையும் பார்த்து கேட்கும் கேள்வியாகவே தோன்றுகிறது. அதே போல் தன் தாய் பொட்டு வைப்பதை நிறுத்தியமைக்கான காரணத்தை வினவுகையில் கற்று தேர்ந்த ஆசிரியரே கணவன் இல்லாமையினை காரணமாக சுட்டிக் காட்டுவது கற்றுத் தேர்ந்தோரிடமும் இந்த வழக்கம் செலுத்தியிருக்கும் தாக்கத்தினை ஒருவிதத்தில் Subtleஆக, ஆனால் இன்னும் ஆழமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. அடுத்த காட்சியில் கணவன் வந்த பின் தான் இவை உனக்கு என தாய் கூறியவற்றை துர்க்கா அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் காட்சியானது “கணவன் வந்தால் தான் பெண்களுக்கு இவை உரித்தாகுமா? கணவன் இருந்தாலும் இல்லாவிடினும் எமக்கு பிடித்தவற்றை, எமக்கு சந்தோஷம் தரக் கூடிய பொருட்களை அணியலாம்” என்ற கருத்தினை ஆழமாக தெளிவுப்படுத்துவதாக உள்ளது. கதாநாயகியின் தோழியின் தொலைபேசி அழைப்பு, அவளுக்குள் உருவாக்கும் காயத்தினை அளந்திட முடியாது.

பொட்டு என்ற விடயம் துர்க்காவில் செலுத்திய தாக்கம் அவள் தன் பொம்மைக்கு பொட்டிட்டு அழகு பார்ப்பதில் உணரக் கூடியதாக உள்ளது. இறுதியாக கணவன் இல்லாத பெண்ணொருத்தி கோவிலில் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்திப்பதை காணும் துர்க்கா, அவர் கணவன் இல்லாத போதும் பொட்டு வைப்பதற்கான காரணத்தினை வினவ, அந்தப் பெண் ‘நாம் செய்யும் செயலில் சந்தோஷம் இருக்க வேண்டும், பிறருக்கு தீங்கு செய்யாது வாழ்ந்தாலே போதும்’ என கூறுமிடத்தில் படத்தின் கருப்பொருள், வசனமாக உயிர்பெறுகின்றது. அந்தப் பெண்ணின் அறிவுரை துர்க்காவிடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் பின் அவள் என்ன செய்கிறாள், கதாநாயகியின் நெற்றியினை பொட்டு அலங்கரிக்கிறதா? இல்லையா? என்ற வினாக்களின் விடையாக இக் குறுந்திரைப்படத்தின் முடிவு அமைகிறது.

ஓர் பெண்ணின் சந்தோஷமும் தன்னை அலங்கரிக்கும் உரிமையும் அவளிடம் இல்லாது, இன்னொரு நபரைச் சார்ந்திருக்கும் பரிதாப நிலையினை உணர்த்துவதாகவே இந்த குறுந்திரைப்படத்தை பார்க்கிறேன். காட்சிகள் அழகாக எளிமையாக எடுக்கப்பட்டுள்ளன. வசனங்கள் சிறிதாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமானவையாக இருக்கின்றன. படத்தில் எல்லை மீறிய யதார்த்தம் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. தொழில்நுட்பரீதியில் ஒளி, ஒலி, படத்தொகுப்பு, இசை என அனைத்தும் கச்சிதமாக கதையின் பாதையில் வந்து விழுந்திருக்கின்றன. படத்தில் கணமான பாத்திரப்படைப்பும், அத்தகைய கதாப்பாத்திரங்களை தோள்களில் சுமந்து வரும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ‘அப்ளாஸ்’.. கதாநாயகி Navayugaவின் கண்களின் மெல்லிய அசைவுகளில் கதை நகர்கிறது. ஆசிரியராக வரும் Yasotha Rathakrishnan கொள்ளை அழகு.

அனைவரும் வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறுந்திரைப்படம் தான் பொட்டு, ஏனெனில் இந்த திரைப்பட முடிவில் உங்களில் நீங்கள் சமத்துவ மாற்றமொன்றை காண்பீர்கள்.

ஒவ்வொரு தனி உயிருக்குள்ளும் ஏற்படும் ஆசைகள், விருப்பங்களின் தேர்வுகள் வெவ்வேறுவிதமானவை. அப்படி ஒவ்வொரு தனி உயிரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம். ஆசைகளும் எண்ணங்களும் அளவில்லாமல் கொட்டிக் கிடக்கும் இந்த அண்டவெளியில், எது சரி? எது தவறு? என்பது உறுதியாகக் கூறமுடியாது. அப்படியிருக்கையில், இந்த சமூகத்தில் வாழ்க்கையை வாழ்வதற்கான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் யாருக்காக யார் விதித்தது? எது எப்படியாயினும் நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றுதான். அதை எப்படி தத்தமது விருப்பங்களுக்கேற்ப வாழப்போகிறோம் என்பது தான் அதிலிருக்கும் சுவாரசியம்.
அப்படிப்பார்க்கையில் இந்த ‘பொட்டு’ குறும்படம், சிறகுகளை அகல விரித்து வானில் எதிர்காற்றில் பறக்க முயலும் ஒரு பெருஞ்சமூகத்தின் கூக்குரல் போல தொனிக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

‘பொட்டு’ – விடுதலைச்சிறகு
நாடி Verdict – 82/100

Short Film Link  –  https://youtu.be/Gh_i_CyLOsI

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php