அனைத்தையும் நாடி  இலங்கையில் COVID கால திருமணங்கள்

இலங்கையில் COVID கால திருமணங்கள்

2021 Jun 26

கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள் ஏராளம்.

முன்பெல்லாம் ஆடம்பரத்திலும் அதிக செலவிலும் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து திருவிழாக்களை போல் திருமணங்கள் இடம்பெற்று வந்தன. பல மைல் தூரங்களில் இருந்து வந்த குடும்பங்கள் எல்லாம் ஓரிடத்தில் சந்திக்க கூடியதாக இருந்தது. ஆயினும் தற்காலத்தில் அச்சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு,  அதிகளவான அலப்பறைகள், ஆரவாரங்கள் ஏதுமின்றி, மண்டப செலவு, உணவுச் செலவு, புகைப்படச் செலவு போன்ற இலட்சங்களில் இடம்பெறும் செலவுகளேதுமின்றி எளிமையான முறையில், இலகுவான அமைப்பில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுடன் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றது. இதுவும் ஓர் சிறந்த முறை தான். நவ நாகரீகம் உச்சத்தில் காணப்படும் காலத்தில் இதுவுமோர் ஆச்சர்யமான திருப்புமுனையே. 

இருந்தாலும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களை மன உளைச்சலில் இருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு சிறந்த முறையே COVID கால திருமணங்கள் ஆகும். இவ்வாறான வைபவங்களை முன்னெடுப்பதால் COVID நீரோட்டத்தில் நீச்சலடித்து நீந்துவதற்கான சந்தர்ப்பமாக அமையும். திடீரென COVID இல் இருந்து பாதுகாப்பு பெற்று வாழப் பழக முடியாது, அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து, 

  • சமூக இடைவெளி
  • கைகளைக் அடிக்கடி சோப் போட்டு கழுவுதல், கைக்குட்டை பயன்படுத்தல்
  • முறையாக மாஸ்க் அணிதல் 
  • முழுமையாக மூடிய ஆடை அணிதல்
  • இருமல், தும்மல் வந்தால் வாயை மூடிக்கொள்ளல்
  • சுகாதாரமான வாழ்க்கை முறை  

போன்ற COVID கால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து திருமணங்களை நடத்தும் போதே சமூகத்தை பயிற்றுவிக்க முடிகிறது.

அதேபோல் COVID கால திருமணங்களில் அதிகளவான தொற்றுக்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைப்பதனால், வரவேற்பு கைகுலுக்கல்கள் , பயன்படுத்தும் பாத்திரங்கள் போன்றவற்றால் அறியாவண்ணம் ஒருவரிலிருந்து ஒருவருக்கு இலகுவாய் தொற்று ஏற்படுகிறது. அதேபோன்று பல இளைஞர் யுவதிகளது ஆசைகள் நிராசையாகின்றன. உடன்பிறந்த உடன்பிறப்புகளை கூட இணைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை, இக்காலகட்டத்தில் பல குடும்பங்களால் முகம் கொடுக்க நேரிடுகிறது. திருமணத்துக்கு சில முக்கியஸ்தர்களை அழைக்கவில்லை எனவும் சில வாய்த் தர்க்கங்கள் zoomஇன் மூலம் இடம்பெற்று வருகிறது. அண்மைக்காலத்தில் உச்ச நிலையை தொட்ட திருமண வியாபாரங்களும் (மேட்ரிமோனி வெப்சைட் தொடக்கம் திருமணத்திற்கு அடுத்த நாள் மதிய உணவு வரை பொறுப்பெடுக்கும் வெப்சைட்கள்) பெருவாரியான பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ளது. சிலவேளைகளில், COVID கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களால் பின்பற்றப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் COVID திருமணங்களின் பால் முன்வைக்கப்படுகின்றது.

இவை தவிர தூர தேசத்தில் இருப்பவர்களுக்கிடையிலான Skype, WhatsApp, IMO காணொளிகளும் திருமணங்களில் முக்கிய இடம் பெறுகின்றன. இது தவிர பல்வேறு வடிவமைப்புகளில் மீட்டிங் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட்களை உள்ளடக்கிய வித்தியாசமான அழைப்பிதழ்களும் வலம் வருகின்றது. மேலும் COVID கால திருமணங்களில் மோசடிகளும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இது தவிர இக்கால திருமண நிகழ்வுகளில் பொதி செய்யப்பட்ட உணவுப் பொதிகளும் செனிடைசர்களும் மாஸ்க்களும் ஞாபகார்த்த சின்னங்களாக வழங்கப்படுகின்றன.

எது எப்படி இருப்பினும் இக்காலத்தில் திருமணங்கள்  சுகாதார அமைச்சின் COVID கால அறிவுறுத்தல்களுடன் இடம்பெற வேண்டும். அத்தோடு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு, முடிந்த அளவில் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் நாடு சுமூகமான நிலையை நோக்கி பயணிக்கும், அத்தோடு அனைத்தும் இனிதே இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php