நாடி Review கலியாணக் கரகம் – பாடல் – நாடி Review

கலியாணக் கரகம் – பாடல் – நாடி Review

2021 Jun 28

திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றாக இணைய, சமூக அந்தஸ்தினை பெற ஒரு அடையாளமாக அமைகிறது. இந்த திருமணம் நடைபெற சாதி, மதம் அந்தஸ்து சீதனம் என  பல்வேறு விடயங்கள் தடைகளாக அமைகின்றன. எனினும் காலத்துக் காலம் எத்தனையோ விடயங்கள் மாறினாலும்  திருமனத்தின் போது வழங்கப்படும் சீதன சம்பிரதாயங்கள் இன்னும் மாறவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

இன்றைய காலத்து சமுதாயம், நம் முன்னோர்கள் பின்பற்றிய எத்தனையோ விடயங்களை பின்பற்ற தயங்குகிறது. எனினும் முன்னோர்கள் பின்பற்றி, நம்மால் மறக்கப்பட வேண்டிய விடயங்களை தலையாய கடமையாக பின்பற்றுகிறது. அதில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் குடுபத்தினரால் மணமகனுக்கு செலுத்தக் கூடிய வாழ் நாள் வரி தான் இந்த சீதனம்.

ஒரு குடுபத்தில் ஒரு ஆண் மூத்தவனாக பிறந்து விட்டால், தனது சகோதரிக்குரிய திருமண வாழ்வினை அமைத்து தருவது அவனுக்கு கடமையாக விதிக்கப்படுகிறது. கடமையினை நிறைவேற்ற அவன் எவ்வாறு பாடுபடுகின்றான் என்ற கவலைக்குரிய யதார்த்தத்தை, சமுதாயத்திற்கு எளிய முறையிலும் மிகவும் நகைச்சுவையான முறையிலும் சொல்கிறது, YouTube தளத்தில் வெளியான இந்த ‘கலியாணக்கரகம்’ பாடல்.

ஜோனா வின் இசையில், உமாகரன் ராசய்யா மற்றும் மதன் சி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். அதேவேளையில், ஹரிதேவா மற்றும் மதன் சி ஆகியோர் இந்த பாடலினை பாடியுள்ளனர்.

மேலும் எ. கே. கமலின் ஔிப்பதிவில், மதிசுதா பாடலினை இயக்கி நடித்துள்ளார்.
பாடலினை பொறுத்தவரையில், ஆரம்பம் சரியாக அமையவில்லையோ என்ற எண்ணம் தோன்றினாலும், ‘கரகம் இது கல்யாணக்கரகம்’ என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருந்து பாடலில் energy பிறக்கின்றது. சரணத்தில் சில வரிகள் கேட்கும் போது, வேண்டுமென்று புகுத்தபட்டு, அவை பாடலின் மெட்டுடன் ஒன்றென கலக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், யாழ் வட்டார வழக்கில் பாடல் அமைந்தது பாடலைக் கேட்பதற்கு தூண்டுகிறது.

கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும், பாடலி்ன் இதயமாக இணைந்து இயங்கியுள்ளது. முக்கியமாக கதாபாத்திர தெரிவுக்காக இயக்குனரை பாராட்டியாக வேண்டும். காட்சியமைப்புகளை பொறுத்தவரையில், குறிப்பாக ஆரம்பத்தில் அண்ணனும் தங்கையும் பகிடி விடும் காட்சிகள், சாதாரணமாக வீடுகளில் நடைபெறுவதை போல் மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படி பல எளிமையான இயல்பான மற்றும் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள், பாடலுக்கு வலுவூட்டுகின்றன.

ஔிப்பதிவை பொறுத்தவரையில், இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அது பாடலின் தரத்தினை மெருகூட்ட கை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

குறிப்பாக ஒரு சமூகம், யதார்த்தத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எளிதாக வரிகளில் எழுதிட முடியாது. எனினும் சீதனம் எனும் பிடியில் சிக்கித் தவிக்கும் எமது பெண்களின் நிலையையும், அதேவேளையில் அவர்களது குடும்பம் எதிர்நோக்கும் அவமானங்களையும், நகைச்சுவையான வரிகள் மற்றும் காட்சிகளினூடாக மக்கள் மனதில் பதிய வைத்து, பார்பவர்களை சிந்திக்க வைப்பதென்பது மிகவும் கடினமான ஒரு விடயம்!  மதிசுதா பாடலின் இயக்குனர் மற்றும் கதாநாயகனாக, படக்குழுவோடு இணைந்து அச் சவாலினை எதிர்கொண்டு அதில் வெற்றியடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.

கலியாணக்கரகம் – சம நிலையில்
Nadi Verdict – 63 / 100
Video Link  – https://youtu.be/FuSKJZkgya8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php