அனைத்தையும் நாடி  இலங்கையில் தும்புக்கைத்தொழில்.

இலங்கையில் தும்புக்கைத்தொழில்.

2021 Aug 28

இன்றைய காலகட்டத்தில் தனிமனித வருமானம் குடும்ப வாழ்வாதாரம் போன்றன மாதாந்த பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வகையில் நடுத்தர மற்றும் சுய தொழில் முயற்சிகள் இலங்கை பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கொள்கை நோக்கங்களில் ஒரு முக்கியமான தந்திரோபாய அம்சமாக அடையாளங் காணப்பட்டிருக்கின்ற அதே வேளை இது பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வறுமைக்கான வலுவூட்டல் தொடர்பிலான மாற்றத்துக்கான ஒரு உந்துசக்தியாகவும் இருக்கின்றது.

இவ்வாறான சுய தொழில் முயற்சிகள் துறையானது பின்தங்கிய கிராமங்களை விருத்தி செய்யக்கூடியளவிலான பங்களிப்பினை வழங்கக்கூடிய ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது . இச்சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் முதலீடு செய்வதற்கும் , பின்தங்கிய மற்றும் விருத்தி அடைந்த நோக்கி பிரதேசங்களுக்கு இடையிலான இடைவெளியினைக் குறைப்பதற்கான தூண்டுதலாகவும் விளங்குகின்றமையால் இது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நல்ல அடித்தளமாகவும் விளங்குகின்றது. அந்த வகையில் உள்ளூர் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் மனிதனுடைய தேவையைகளை பூர்த்தி செய்வதற்கு மனித முயற்சியில் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சி கைத்தொழில் என்று கூறலாம். முன்னைய காலத்தில் விவசாயத்தை மையமாக கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று சுய கைத்தொழில் முயற்சிகளுக்கு கூடிய முக்கியத்தினை கொடுக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் முக்கியத்துவம் பெறுகின்ற உள்ளூர் கைத்தொழில்களாக தும்புக் கைத்தொழில், சீமெந்துக் கைத்தொழில், சீனிக் கைத்தொழில், ஆடைக் கைத்தொழில், இறப்பர் பிளாஸ்டிக் சார் கைத்தொழில், பாரம்பரிய கைப்பணி கைத்தொழில் என்பவற்றைக் குறிப்பிட முடியும். அதிலும் முக்கியமாக தும்புக் கைத்தொழில் செய்கையானது முக்கியமான ஒரு கைத்தொழிலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இருந்து உபகரணங்கள் இல்லாது கையினாலேயே தும்புசார் அனைத்து உற்பத்திகளையும் செய்து சந்தைப்படுத்தி வந்துள்ளனர். இப்போதும் இவ்வாறான பாரம்பரிய முறை நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும் பெருமளவில் உபகரணங்களின் உதவியின் மூலம் தும்புக் கைத்தொழிலை மேற்கொள்ளுமளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

தும்புக் கைத்தொழில் முயற்சிகளுக்கான முறையான பயிற்சி நிலையங்கள் மற்றும் முறையான பயிற்சி முறைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக தொழில்சார் அனுபவங்களையும் யுக்திகளையும் தலைமுறைகளிற்கிடையில் கடத்துவதாகவே பரவலாக காணப்படுகிறது. எனினும் இன்றளவில் தும்பு கைத்தொழிலிற்கான கேள்வி அதிகரித்து வருகின்ற வகையில் பலர் இதில் நாட்டம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தும்புத் தொழில் என்பது தென்னந் தும்பை பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி பல்வேறு யுக்திகளின் மூலம் ஆக்க பூர்வமானதாக மேற்கொள்ளப்படும் கைத்தொழில் ஆகும். தேங்காய் மட்டை அல்லது உரிமட்டைகளை பதப்படுத்துவதன் மூலம் தென்னந் தும்பைப் பெற்று அதில் இருந்து தும்பைப் பயன்படுத்தி பல பயன்பாடுகள் மிக்க முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்தல் வரையிலான செயற்பாடுகளை தும்புத் தொழில் என்பதற்குள் குறிப்பிட முடியும்.

தேங்காய்களில் இருந்து அதன் மட்டைகள் அகற்றப்படுதல், மட்டைகளில் தும்பை வேறுபடுத்தி அவற்றை பதப்படுத்தி அத்தும்பை பயன்படுத்தி, தும்புத்தடி, கயிறு மற்றும் கால்மிதி ஆகிய பொருட்களின் உற்பத்திகளை செய்து அதனை விற்பனை செய்யும் செயற்பாடுகள் போன்றன தும்பு தொழிலின் செயற்பாடுகளாய் அமைகிறது. தேங்காய்கள் விற்பனை செய்யப்படும் நோக்கோடு தென்னம் தோட்டங்களில் தேங்காய்கள் பெறப்பட்டு சந்தைக்கு கொண்டு செல்லப்படும். சந்தையில் தேங்காய்களில் உள்ள மட்டைகள், அலவாங்கு போன்ற ஆயுதத்தைக் கொண்டு தேங்காயில் இருந்து அகற்றப்படும். இச்செயற்பாடு “தேங்காய் உரித்தல்” என கூறப்படும். பின்னர் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். தேங்காயில் இருந்து அகற்றப்படும் உரிமட்டைகள் பிறிதாக சேகரிக்கப்படும்.
உரிமட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்னர் அதனை தும்புத் தொழில் மேற்கொள்பவர்களின் பிரயோகத்திற்காக தொழில்முனைவோரால் கொள்வனவு செய்யப்பட்டு அவற்றை உவர்ப்புத் தன்மை கொண்ட நீர் நிலைகளுக்கு அருகாமையில் கொண்டு சேகரிக்கப்படும். மட்டைகளை வாங்கிய தொழில் முனைவோர் நீர் நிலைகளின் கரைகளில் தேங்காய் மட்டைகளை புதைத்து விடுவார்கள். புதைக்கப்பட்ட மட்டைகள் நீர் நிலைகளின் கரைகளில் 6 மாதம் முதல் 1 வரும் வரை ஈரப்பதன் உள்ள நிலத்தின் அடியில் ஊறவிடப்படும். குறித்த மட்டைகள் 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை குறிப்பிட்ட பதத்தை அடைந்ததன் பின்னர். உரிமட்டைகளை மீண்டும் தோண்டி எடுத்து அவற்றை ஒவ்வொரு மட்டைகளாக பிரித்து எடுப்பார்கள்.

எல்லா மட்டைகளிலும் உள்ள தோலையும் தும்பையும் கையால் பிரித்து எடுப்பார்கள். தும்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தோல் வீடுகளில் பூ மரங்கள் வளர்க்கும் போது பசளைகளாக பயன்படுத்தல் போன்ற தேவைகளிற்காக விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் தும்பில் ஊறிக் கணப்படும் நீரை புளிந்து வெளியேற்றியபின் தும்பை மரக்கட்டை அல்லது சீமெந்து கொங்கிறீற்றுக் கட்டி ஒன்றில் வைத்து இரும்பு பொல் ஒன்றால் தட்டி அடித்து பதப்படுத்துவார்கள். இதனை அவர்கள் மட்டை தட்டல் என அழைப்பார்கள். இந்த செயற்பாடு சில இடங்களில் இயந்திரங்களைக் கொண்டும் செய்யப்படுகின்றது.

மட்டை தட்டிப் பதப்படுத்தி பெறப்படும் தும்பை உலரவிட்டு அடுத்த கட்ட உற்பத்திக்கான ஆயத்த தும்பாக மாற்றி அவற்றை சேகரித்து எடுப்பார்கள். இவ்வாறே தும்பு உற்பத்தி செய்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இயற்கை உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்தும் நிலையில் தாவர மூலப்பொருளான தும்பு மற்றும் தும்பிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் மீதான கேள்வியும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தும்பானது தடித்த, நீளமான, தூய்மையான இழைகளைக் கொண்டிருப்பதாக உலக தும்புச் சந்தையில் கருதப்படுகிறது. இத்தும்பானது பெருமளவு மரபார்ந்த தும்புக் கைத்தொழில் நுட்பங்களைப் பின்பற்றியே உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்று கயிற்றிற்கான கேள்வி அதிகரித்து வருவது நாம் அறிந்த விடயமே. அந்த வகையில் தும்பு உற்பத்திப் பொருட்களில் முதன்மையாக விளங்குவது தும்பிலிருந்து திரிக்கப்பட்ட பலவகையான கயிறுகளேயாகும். இலங்கையின் தும்புத் தொழிற்துறையானது ஏறத்தாழ 35,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 75-90% பெண்களாகவே உள்ளவர். கைத்தொழில் துறையில் பெண்களின் ஈடுபாடு இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு குளம், மடு,வாவி, குட்டை போன்ற நீர் நிலைகள் தும்புத் தொழிலின் முக்கிய செயற்பாடுகளான மட்டை புதைத்தல், தட்டல் போன்றவற்றுக்குத் தேவையான இயற்கைச் சூழலமைவையும் கொண்டுள்ளமை சிறப்பான விடயமே. கிராமிய சிறு குடிசைக் கைத்தொழில் திணைக்களத்தின் மூலம் கயிற்று திரிக்கும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. நெல் அறுவடை இயந்திரத்தின் அறிமுகத்திற்கு முன்னதான காலப்பகுதியில் நெல் அறுவடைக்குப் பயன்பட்ட கயிறுகளான உப்பட்டிக் கயிறு, வரிச்சிக் கயிறு, தேடாக்கயிறு போன்றன தும்பிலிருந்து தயாரித்து விற்பனை செய்யப்படுகிறன.

தும்பளையானது இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள பருத்தித்துறைக்கு அண்மையில் ஒரு கிராமம் ஆகும். தும்பளை என்னும் பெயர் “தும்பு + அளை” என்பதிலிருந்து மருவி வந்திருக்க வேண்டும் எனும் கருத்துமுண்டு. அளை என்பது வாய்க்கால் அல்லது ஓடையைக் குறிக்கும் சொல்லாகும். பண்டைய காலத்தில் தும்புக் கைத்தொழிலே இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேங்காய் மட்டைகளிலிருந்து தும்பைப் பெறுவதற்கு அவற்றை நீரில் சில காலம் ஊற வைக்க வேண்டும். இதற்காக சிறு ஓடைகளை வெட்டி, நீர் பாய்ச்சி அதனுள் மட்டைகளைப் புதைத்து வைப்பது வழக்கமாகும்.

அது மட்டுமல்லாது மருதமுனையிலுள்ள பிரான்ஸ் சிற்றி என்னும் பிரதேசத்தில் சிறியளவிலான தும்புத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு தும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அத்தோடு இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஒரு முக்கிய துறைமுக, கப்பல் கட்டும் நகராக இருந்தமையால் இங்கே தும்பு மற்றும் கயிறு திரிக்கும் கைத்தொழில் ஒரு முக்கிய கைத்தொழிலாக பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கச்சாய் தும்பு உற்பத்தி நிலையம், அல்லாரை தும்பு கைத்தொழில் உற்பத்தி நிலையம் கொழும்புத்துறை, பளை, முல்லைத்தீவு, வடமேல் மாகாணம், விருதோடை, கொகோ லங்கா தும்புக் கைத்தொழில் அமைப்பு, புத்தளம் போன்ற இடங்களிலும் தும்பு கைத்தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அங்குள்ள அநேகமான மக்களின் ஜீவநோபாய தொழிலாக தும்புக் கைத்தொழில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமே.

நாம் தினமும் எத்தனையோ விதமான பொருட்களை நுகர்கின்றோம் . அதில் பல வெளிநாடுகளில் இருந்து எமது பிரதேசத்திற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகின்றன . ஆனால் அப்பொருட்களை விட மிகவும் சிறந்த பொருட்கள் எம் தேசத்து முயற்சியாளர்களால் உருவாக்கப்படுகின்றன . உலகளாவிய ரீதியில் முண்ணனி வகிக்கும் வெளிநாட்டு வெற்றியாளர்களையும் , முயற்சியாளர்களையும் ஆச்சரியத்தோடு பாராட்டுகின்றோம் . ஆனால் கடுமையான அனுபவங்களை வெற்றிக்குரிய படியாகக் கொண்டு முன்னேறிய எத்தனையோ முயற்சியாளர்கள் எம் பிரதேசத்தில் உள்ளனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இவர்கள் திறமைசாலிகளாகவும் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் இருந்து விலகாதவர்களாகவும் , எமது தேசத்தின் வளங்களைக் கொண்டு நாம் நுகரும் பொருட்கள் உற்பத்தி செய்து சமூக நன்மை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவர்களது முயற்சியானது நாம் அனைவராலும் பாராட்ட வேண்டியது அவசியமே.தும்புக் கைத்தொழிலுக்கென்று எமது சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப அவை அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அக் கைத்தொழிலில் ஈடுபட்டுவருபவர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படும்போது ஏனையவர்களுக்கும் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் ஆர்வமும் ஏற்படும் அதன்போது தும்புக் கைத்தொழிலும் விருத்தியடையும். எமது நாட்டில் பல தொழில் பயிற்சி நிலையங்களில் பல வகையான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுவரும் வேளையில் எமது கிராமத்தில் எமது வீட்டிலிரு ந்தவாறே செய்யக்கூடிய ஒரு தொழிலான தும்புக்கைத்தொழிலை பயிற்சி நெறியில் சேர்த்துக்கொண்டால் பாரிய ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.மேலும் சந்தைப்படுத்தல் முயற்சிகளில் கூடிய கவனம் எடுப்பதன் மூலம் இதற்கான கேள்வியை அதிகரித்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இலத்திரனியல் மயமான முறையில் இதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் அதீத மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது . சிறுவர் முதல் முதியோர் வரையிலும் , தனி மனிதன் முதல் பாரிய நிறுவனங்கள் வரையிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பாவனை வியாபித்துள்ளது.சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை தமது வியாபார நடவடிக்கைகளை பன்னாட்டு நாடுகளிலும் விருத்தி செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் பல விற்பனை வாய்ப்புக்களையும் வளங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here