Macro-கதைகள் அந்த இரவும் அவள் முகமும்.

அந்த இரவும் அவள் முகமும்.

2021 Aug 27

பேய்க்கதைகள் அல்லது அது போலான அமானுஷ்ய கதைகளை உண்மையாக அனுபவித்தவர்களின் வாயிலாக கேட்கும் போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும். சில சமயம் புத்தகமோ திரைப்படமோ கூட  அதுபோலான  ஒரு உணர்வை தந்துவிடமுடியாது. அப்படி கேட்டு திகிலடைந்த ஒர் உண்மைக்கதை இது. அந்த சம்பவம் நடந்த போது அகல்யாவிற்கு வயது 20. (நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.)

அந்த பல்கலைக்கழகத்தின் இரண்டு முகம்

எனக்கு பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் பயத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் உண்மையாக பயப்படுவேன். என் இதயம் அடித்துக்கொண்டு நெஞ்சை பிளந்து வெளியே வந்துவிடுமோ என நான் நினைத்த சந்தர்ப்பம் மிக குறைவு. இந்த சம்பவம் அப்படியான ஒன்று.

வருடம் 2006. பாடசாலை வாழ்க்கை முடிந்ததுமே எனக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது அது யாருக்கும் கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு. வேலைத்தளம் இருந்தது தலை நகர் கொழும்பில். நான் என் குடும்பத்தோடு வசித்தது கண்டியில். அது ஒரு பெரிய விடயம் இல்லைத்தான். ஆனால் ஒரு பெண் பிள்ளையை அப்படி தனியாக அனுப்ப முடியாது என வீட்டில் மறுப்பு தெரிவித்தார்கள். குடும்பத்திற்காக எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகம் சென்று என் மேற்படிப்பை தொடங்க பணிக்கப்பட்டேன். இரண்டு வருடங்கள் அங்கு சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்பதை அடியோடு வெறுத்தேன். அழுது அழுது வீங்கிய கண்களோடு என் முதல் நாள் காலேஜுக்கு வந்து சேர்ந்தேன். இந்த காலேஜ் வாழ்கை இல்லை என்றால் இப்போதுவரை அந்த மறக்க முடியாத இரவையும் அந்த திகில் உணர்வையும் மட்டுமே நான் இழந்திருப்பேன் என்று தோன்றுகிறது.

என்ன தான் எனக்கு பிடிக்காமல் நான் அந்த காலேஜை வந்தடைந்திருந்தாலும் அதன் ரம்மியமான தோற்றம் என் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. எங்கள் வீட்டில் இருந்து மூன்று மணி நேர தொலைவில் தான் அது இருந்தது. சுற்றிலும் இயற்கை காட்சிகளோடு ஒரு அழகிய வனத்துக்கு நடுவே அமைந்திருந்த மாளிகையை போல அந்த பல்கலைக்கழகம் காட்சி தந்தது. ஆனால் அங்கு பகலில் ரம்மியமாக காட்சியளித்த அனைத்தும் இரவில் பீதியை கிழப்பிவிடும் படி மாறிவிடும். சுற்றி இருக்கும் காட்டு மரங்கள் காற்றில் அசையும் சத்தம் ஒரு ஓலத்தை போல கேட்டுக்கொண்டே இருக்கும். நீண்ட பாழடைந்த காலேஜ் கட்டிடங்களும் இரவு நேரத்தில் அதில் ஒளிரும் மங்களான விளக்கொளியும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். கட்டிடங்களுக்கு நடுவே இருக்கும் பாசி படிந்த அந்த குளம். அந்த குளத்தை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் அதில் மீன்கள் இருந்தை விட பாம்புகள் இருந்தது தான் அதிகம். இப்படியாக அங்கு இரவு நேரம் நடமாடுவதை மட்டும் நான் முற்றிலுமாக வெறுத்தேன்.

இதில் பெண்கள் தங்கும் விடுதி தான் ”ஹைய் லைட்”. அந்த சுற்று வட்டாரத்தில் பெண்கள் விடுதி மட்டும் தன்னந்தனியாக இருக்கும். அந்த கட்டிடத்திற்கு பின்னால் இருப்பது வெறும் காடு மட்டுமே. அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் நடந்தால் இரவு உணவு வழங்கப்படும் அறை வரும். அதில் இருந்து இருபது நிமிடம் நடந்தால் கல்லூரி கட்டிடங்களை அடைய முடியும். ஆண்களின் விடுதி வேறு எங்கோ ஒரு திசையில் இருந்தது. சுருக்கமாக சத்தம் போட்டு கூப்பிட்டாலும் யார் காதிலும் விழாத தூரத்தில் நாங்கள் இருந்தோம்.

எங்களுக்கான அறை எண்கள் கொடுக்கப்பட்டு அவரவர் அறைகளுக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு இரண்டு மாடி கட்டிடம். பிரதான அறைக்கதவை திறந்தால் நீண்ட கொரிடோர் இருக்கும் அதன் இருபக்கமும் அறைகள், எந்த அறைக்கும் கதவில்லை. ஒரு அறையில் நான்கு கட்டில்கள் அதாவது நால்வர் இருக்கலாம். மேல் மாடியும் இதே அமைப்பில் தான் இருக்கும்.

அவள் பெயர் அனுராதா

வகுப்புகள் ஆரம்பித்தன புது நண்பர்கள் புது சூழல். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்திற்கு பழக்கப்பட்டவர்களாகிகொண்டிருந்தோம். அப்போது தான் அவளது பெயர் எங்கள் மத்தியில் அடிபட ஆரம்பித்தது. பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு ஏதே சொல்லப்படாத கதை இருக்கலாம் என அனுமானித்துவிட முடியும். குள்ளமாக எழும்பும் தோலுமாக  நீண்ட தாடையும் குழிவிழுந்த கண்களுமாக காட்சியளிப்பாள். மிக அமைதியானவள் யாரிடமும் பெரிதும் பேசாமல் தனித்தே இருப்பாள். படிப்பு, படிப்பு முடிந்தால் அறை. அவ்வளவு தான் அவள்.

அந்த பெண்கள் விடுதியில் மேல் மாடத்தில் தான் எனது அறை இருந்தது. எனக்கு இரண்டு அறைகள் தள்ளி அனுராதாவின் அறை. முதலில் கீழ் அறையில் இருப்பவர்கள் தான் அதை அவதானித்து சொன்னார்கள். அனுராதாவுக்கு இரவில் அடிக்கடி கழிப்பறை செல்லும் பழக்கம் இருந்தது. குறைந்தது பத்து தடவையாவது சென்று வருவாள். அந்த அறைகளின் வரிசையில் கழிப்பறை தான் கடைசி அறை. அனுராதாவின் அறையே தொடக்கத்தில் இருக்கும். இரவில் அவள் அந்த நீண்ட கொரிடேரில் ஒரு பக்கம் இருந்து மற்ற பக்கம் செல்லும் போது அந்த காலடி சத்தம் கீழ் தளத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றாக கேட்கும். பீதி அடைந்த அவர்கள் விடிந்ததும் இதை பற்றி மேல் மாடியில் இருக்கும் மற்ற பெண்களிடம் கேட்டபோது அவர்களும் அது அனுராதா தான், அவள் தான் அப்படி போய் வருகிறாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தினர். நான் முன்பே சொன்னது போல எங்கள் அறைகளுக்கு கதவில்லை. ஆகவே அவள் ஒவ்வோரு அறையாக கடந்து கழிவறை செல்வது மற்றைய அறையினருக்கும் நன்றாக தெரியும். அதற்கு பிறகு தான் நானும் அதை கவனித்தேன். அவள் செய்வது சற்று விசித்திரமாக தான் இருந்தது. பகலில் வகுப்பறையில் பேசிக்கொள்கையில் அது ஜாலியாக இருந்தாலும் இரவு சில சமயம் அவள் அப்படி உலாவருவதை பார்க்கையில் கொஞ்சம் பீதியாக தான் இருந்தது.

அந்த இரவு

அனுவின் அந்த செயல்பாட்டை சிலர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை ஒரு சிலருக்கு அது மட்டும் தான் பேச்சாக இருந்தது. அதற்குள் அவளை பற்றி சில கட்டுக்கதைகள் கல்லூரியில் உலாவ ஆரம்பித்தது. அவள் கழிப்பறைக்கு சென்று தனியாக பேசுவதாகவும் அவளது அறையில் அவள் சில விசித்திரமான மாலை மணிகளை வைத்துக்கொண்டு பூஜைகளில் ஈடுபடுவதாகவும் பச்சை இறைச்சி உண்ணுவதாகவும் செய்திகள் வந்தது. அது வெறும் கட்டுக்கதைகள் தான். எனக்கும் அது மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை, சிரிப்பு தான் வந்தது. லூசுத்தனமாக இவர்கள் கட்டிவிடும் பொய்கள் அவை. ஆனால் அந்த கட்டுக்கதைகள் எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு ஒரு கதை அன்றிரவு நடந்தேறியது.

அன்று எங்களுக்கு மரபணு சார்ந்த நோய்கள் பற்றி செமினார் நடந்தது. மிக நீண்ட அலுப்பூட்டும் அந்த செமினாரை முடித்துவிட்டு இரவு உணவு உண்டுவிட்டு எல்லோரும் எங்கள் விடுதிக்கு வந்து அயர்ந்து தூங்கிப்போனோம். நேரம் எப்படியும் நள்ளிரவை தாண்டியிருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த எனக்கு ஏதோ அலறல் சத்தம் கேட்டது, அதை தொடர்ந்து பலமாக என்னை எனது “ரூம் மேட்” கலா அடித்து எழுப்பினால். பீதியில் அவள் கண்கள் பிதுக்கியிருந்தது. “அனு..அனு..” என வார்த்தைகளை இழுத்துக்கொண்டாள். பதறி போய் எழுந்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொரிடேரில் மற்றைய அறை பெண்கள் அலறியபடி கத்திக்கொண்டு ஓடுவதை பார்க்க பயம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. ஏதாவது பாம்பு புகுந்திருக்கும் என்று தான் முதலில் எண்ணினேன். எழுந்து வெளியே வந்து பார்த்தால் பின்னங்கால் பிடரியடிக்க எல்லோரும் படி வழியாக கீழ் தளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள், அப்போது என்னை கடந்து ஓடிய பக்கத்து அறையின் சிங்கள பெண் உலறியபடி அனுராதாவுக்கு பேய் பிடித்திருக்கிறது, எங்கள கொல்ல பாக்கிறாள் என்று சென்னது என் காதில் விழுந்தது. அனுராதா என்ன செய்தால் யாருக்கு என்ன ஆனது என்று ஒன்றும் தெரியாது ஆனால் விபரீதமான ஒன்று நடந்துவிட்டதை நன்றாக உணரமுடிந்தது அவ்வளவு தான் அடுத்தகணம் நானும் என்னை அறியாமல் ஓட ஆரம்பித்தேன். எனக்கு பின்னால் இரண்டு பெண்கள். நாங்கள் தான் அந்த வரிசையில் கடைசியாக ஓடி வந்தோம். எங்கள் அறைகளில் ஒளிர்ந்த அந்த மங்கலான மஞ்சள் விளக்கில் ஒன்றும் உருப்படியாக தெரியவில்லை. படியை அடைய ஒருசில அடி தூரங்களே இருந்த வேலையில் அறைக்குள் இருந்து எனக்கு முன் அனுராதா வெளிப்பட்டாள். அவ்வளவு தான் மூச்சு நின்றதை போல் உணர்தேன். நல்ல வேளையாக அவள் என்னை பார்க்கவில்லை மாறாக கீழ் இறங்கும் படியையே அசையாது பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் நின்ற பாணியே பீதியை கிளப்பியது. ஏதோ ஒன்றுக்கு அவள் கட்டுப்பட்டதை போல அவள் நின்றாள். அடுத்த நொடி செய்வதறியாது பின்னால் இருந்த நான் எனக்கு லாவகமாக இருந்த அறைகளுக்குள் பாய்ந்து கட்டிலுக்கு கீழே ஒழிந்து கொண்டேன். சற்றைக்கெல்லாம் அந்த இடம் வெறிச்சோடியது. கீழ் தளத்தில் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இங்கிருந்து ஓடி சென்ற பெண்கள் கீழே உள்ள அறைகளுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்புயிருக்க கூடும். தரையோடு தரையாக படுத்திருந்த எனக்கு கீழ் தளத்தில் இருந்து வரும் சத்தத்தை நன்றாக கேட்க முடிந்தது. ஆனால் மேல் தளத்திலே சத்தமே இல்லை. இங்கு தன்னந்தனியாக மாட்டிக்கொண்டு இருப்பது நான் மட்டுமே. என் முதுகு தண்டு ஜில்லிட்டதை என்னால் உணர முடிந்தது. கீழ் தளத்தின் சத்தம் அடங்க ஆரம்பித்தது அப்படியென்றால் அவர்கள் விடுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இப்போது அனுராதா நடமாடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. என் வாயை கைகளால் பொத்திக்கொண்டு சுருங்கிப்போய் அந்த கட்டிலுக்கு அடியில் பதுக்கியிருந்தேன். நான் பதுங்கி இருந்த அறை இருட்டாக தான் இருந்தது, என் மூளை தெழிற்படுவது நின்றுபோய் இருக்க பயத்தின் வாசனையை மட்டுமே என்னால் அப்போது உணர முடிந்தது. என் வாழ்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கனவிலும் நினைத்திறாதவள் நான். இப்போது வசந்தி அங்கும் இங்கும் நடக்கிறாள். கொரிடோரின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு அவள் நடந்து செல்லும் சத்தம் மட்டும் நன்றாக கேட்டது. நான் மூச்சு காட்டவில்லை. தப்பித்து வெளியே ஓடுவதை அப்போது நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அது உசிதமான செயலும் அல்ல. யாராவது உதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்த்தேன். எல்லா மத கடவுளின் பெயரும் என் வாய் உச்சரித்தது. அனுராதா நான் ஒளிந்திருக்கும் அந்த அறையை கடந்து செல்லும் போதெல்லாம் சத்தம் வழுக்கும். என் இதயம் வெடித்துவிடும் அளவு துடிக்கும். அந்த நிமிடம் என்னை வலுக்கட்டாயமாக இங்கே படிக்க செய்த என் பெற்றோரை நினைத்து கடிந்துக்கொண்டேன். ஒரு நிமிடம் அல்ல, பத்து நிமிடம் அல்ல அப்படியே மூச்சை பிடித்துக்கொண்டு 20 நிமிடங்கள் அந்த கட்டிலினடியில் இருந்தேன். ஒவ்வொரு நொடியும் யுகமாகவே கழிந்தது. வியர்வையில் என் உடல் குளிர்ந்தது. அனுராதா உலாத்துவதை நிறுத்தவில்லை. எனக்குள் நாளைய நாளை பற்றிய நம்பிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

அப்போது தான் அந்த சம்பவம் நடந்தேறியது. நான் பதுங்கிருந்த அறைக்கதவின் வாசலில் அனுராதாவின் கால்கள் தெரிந்தது. என் கதை முடிந்ததாக எண்ணினேன். அந்த இடத்திலேயே வெகு நேரமாக நின்றுக்கொண்டு இருந்தாள். அவள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாள் என்று எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் அவளது கண்ணங்கரிய கால்கள் மட்டுமே. மெல்ல அடியெடுத்து கட்டிலின் அருகில் வந்தாள். மூச்சு நின்று விடுவதை போல இருந்தது. என்னை அவள் வாசம் பிடித்திவிட்டாள் என்று எண்ணினேன். எந்த கணமும் அவள் என்னை குனிந்து பார்க்க கூடும். அப்படிப்பார்த்தால் என்ன செய்வது யோசிக்காமல் அவளை தாக்கவேண்டும். கைகளையும் கால்களையும் விறைப்பாக வைத்திருந்தேன். அவள் கட்டிலின் மேல் அமர்ந்தாள். அவளின் கனம் மொத்தில் தெரிந்தது. அவளுக்கு நேர் கீழே நான் மூச்சைப்பிடித்துக்கொண்டு இருந்தேன். அப்படியே எழுந்து ஓடிவிடுவமா, அல்லது தானாக வெளியே வந்து அவளை தாக்கலாமா என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்க சிறிதும் எதிர்ப்பார்க்காத நேரம் அவள் அமர்ந்தபடியே தலைக்கீழாக என்னைப்பார்த்தாள். என் முகத்துக்கு நேர் எதிரே அவளது தலை. அவள் கண்கள் பிதுக்கிங்ப்போய் இருந்தது. முடி அலங்கோலமாய் இருந்தது. வழக்கத்தைவிட அவள் முகம் பிரகாசமாக இருந்தது வாயில் வாயில் ஒரு புன்னகையோடு என்னைத் தலைக்கீழாக பார்த்துக்கொண்டிருந்தாள். நான் உறைந்து போனேன். பிரேதம் போல் உணர்ந்தேன்.

அப்போது தான் தெய்வாதீனமாக வார்டனும் இரண்டு ஆடாவர்களும் சில பெண்களும் மேலேறி வந்தார்கள். அறைக்குள் புகுந்த அனுராதாவை பிடித்தார்கள். அவள் அவர்களை எதுவும் செய்யவில்லை மாறாக அவர்களோடு கீழிறங்கி சென்றுவிட்டாள். குத்துயிரும் குலையுயிருமாக வெளியேறி வந்தேன். என்னால் கட்டுப்படுத்தமுடியாமல் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. சரி என்ன தான் நடந்தது என்பதை கேட்டால், அனுராதா நடு இரவில் அவளது அறையில் படுத்திருந்த பெண் ஒருத்தியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவளை காப்பாற்ற வந்த மற்றவர்களை தாக்க முற்பட்டதாகவும் கூறினார்கள். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர, என் போன உயிரும் திரும்பி வந்தது.

மீண்டும் அனு

மார்கழி மாதம் ஆரம்பமானது. குளிர் பற்களை அதிரவைத்தது. அந்த சம்பவத்திற்கு பின்பு நாங்கள் மீண்டும் அனுராதாவை பார்க்க இரண்டு மாதங்களாயின. அந்த இரண்டு மாதமும் கல்லூரி முழுவதும் இது தான் பேச்சு. அதிலும் குறிப்பாக அந்த மேல் மாடியில் தனியாக சிக்கிய என்னிடம் கதை கேட்காதவர்கள் யாரும் இல்லை. நாட்கள் சென்றது அனுராதா பற்றி எந்த தகவலும் இல்லை அவளது செயல்களுக்கு அர்த்தமும் தெரியாமலேயே இருந்தது.

திடீர்ரென ஒரு நாள் எங்கள் பேராசிரியர். அனுராதா சிகிச்சை முடிவடைந்து மறுபடி வரப்போவதாகவும் மாணவர்கள் யாரும் அவளிடம் அன்றைய நாளை பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொண்டார். இது அவளது வாழ்கை பிரச்சனை யாரும் அவளிடம் பிரிவு காட்டாது இயல்பாக பழகும் படி கூறினார். ஆனால் அனுராதா மறுபடி கல்லூரிக்கு வந்த அன்று யாராலும் அவ்வளவு சகஜமாக பழக முடியவில்லை. எனக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது. பொதுவாக யாரைவாது அப்படி தனிமைப்படுத்தப்படுவதை நான் விரும்புவதில்லை. நானே முன்வந்து அவளிடம் பேச்சு கொடுத்தேன். அனுராதாவிடம் ஒரு நல்ல மாற்றத்தை இனம் காண முடிந்தது. உள ரீதியாக அவள் மாற்றமடைந்திருக்கிறாள் என்பதை அவளது பேச்சில் அறிந்து கொண்டேன். அவளுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்பட்டது அவளுக்கு என்ன பிரச்சனை என்பது யாருக்கும் தெரியாது அவளிடம் கேட்கவும் முடியாது. ஏன் என்றால் அன்று நடந்தது பற்றி அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்கள் அவளிடம் தயக்கம் காட்ட நானே முன் வந்து அவளிடம் சிரித்து பேசினேன்.

மீதமிருந்த ஒரு வருடமும் அனுராதாவால் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவள் எல்லோரையும் போலவே இருந்தாள், திரிந்தாள். குறிப்பாக இரவு நேரம் அவள் அறை விட்டு வெளியேறுவதே இல்லை. நன்றாக படித்தாள். எங்கள் கல்லூரியில் சிறந்த மதிப்பெண்களுடன் பாஸ் ஆகியவர்களில் அவளும் ஒருத்தி. அன்றைய இரவு அவள் அப்படி நடந்து கொண்டது ஏன் அவளை அப்படி நடத்தியது எது என்று எனக்கு தெரியாது. ஆனால் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அவளது தலையும், அந்த முகத்தையும் நான் எப்போதும் மறக்கப்போவதில்லை.

 

எழுத்து – மஹின் சுப்ரமணியம்.

1 COMMENT

  1. உண்மைகள் எழுத்தாகும் போது வரிகள் வசீகரிக்கின்றன
    .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php