2021 Aug 6
உங்களுடைய முன்னால் காதலருடனான அனைத்து வகையான பிணைப்பினையும் முற்றிலும் துண்டித்து விட வேண்டும்.
- இது முடிந்து விட்டது.
“இனி நண்பர்களாக இருப்போம்” என நீங்கள் உங்கள் முன்னால் காதலரிடம் கூறுவது உண்மையில் உங்களை நீங்களே மோசமான நிலைக்கு தள்ளுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு சமம் என்றே கூற வேண்டும். நீங்கள் உண்மையாகவே ஒருவரை காதலித்திருந்தால் நிச்சயமாக உங்களால் அவருடன் நண்பராக இருக்க முடியாது. ஏன் உங்கள் இருவருக்கும் இடையிலிருந்த காதல் என்ற உறவு முற்றாக முறிந்திருந்தாலும் கூட நண்பராக தொடர்வது கடினமான விடயம் தான்.
இவ்வாறான மோசமான முடிவினை முன்னால் காதலர்கள் எடுக்க காரணம் தமக்குள்ளிருக்கும் பிரிவின் வலிக்கு மெல்ல மருந்திடவும் ஒருவருக்கு ஒருவர் அவர்களது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்வதற்காகவும் தான்.
ஆனால், உண்மையில் நீங்கள் அந்த வலியிலிருந்து வெளியே வந்து முன்னோக்கிச் செல்ல விரும்பினால் அவர்களை சந்திப்பதை முற்றாக நிறுத்துங்கள். உங்களுடைய சமூக வலைத் தளங்களிலிருந்து அவர்களை நீக்கி ப்ளொக் செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் பொதுவாக இருக்கும் நட்பு வட்டாரத்திடம் உங்களுடைய முன்னால் காதலர் பற்றிய எந்தவொரு தகவலையும் பரிமாற வேண்டாம் என கூறுங்கள்.
சில சமயங்களில் உங்கள் முன்னால் காதலருடன் வேலைப் பார்ப்பது, படிப்பது மற்றும் வேறு சில ஒன்றாக செய்ய வேண்டிய வேலைகள் இருப்பின் அவர்களுடனான உறவை முற்றாக துண்டிப்பது சற்று கடினம் தான். இதற்கு சிறந்த ஓர் வழி என்னவென்றால் நீங்கள் எந்த ஒரு விடயத்திற்காகவும் அவர்களை தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அவர்களை புறக்கணியுங்கள். இவ்வாறு செய்வதன் நோக்கம் அவர்களை உங்கள் வாழ்விலிருந்து முழுதாக நீக்க வேண்டும் என்பது தான்.
2. நினைவுகளை அழியுங்கள்.
நீங்கள் இருவரும் காதலித்த போது பகிர்ந்துக் கொண்ட பரிசுகள், கார்ட்கள், கடிதங்கள், குறுஞ் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் அழித்து விடுங்கள்.
ஒரு வேளை நீங்கள் இருவரும் காதலித்தமைக்கான சாட்சிகள் பின்பு எப்போதாவது தேவைப்படும் என எண்ணினால் அவற்றை நீங்கள் அடிக்கடி நோட்டமிடாத எதாவது ஒரு இடத்திலோ, ஒன்லைன் எப்பிலோ அல்லது நண்பர்களிடம் கொடுத்தோ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அவற்றை பார்த்து பழைய நினைவுகளை நீங்கள் மீட்டிப் பார்க்காத படி உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.
3. காதல் காப்பாளர்களாக செயற்பட முனைபவர்களை தள்ளி வையுங்கள்.
உங்களது சில நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உங்கள் இருவரையும் வலியில் வாடி துடிக்கும் நிலையில் பார்க்க முடியாத காரணத்தினால் உங்களை சேர்த்து வைப்பதற்கான காப்பாளராக மாறி விடுவார்கள். உங்கள் இருவரிடமும் “தங்கச்சி! அவன் நல்ல பையன்மா” மற்றும் “மச்சான் உனக்கு என்ன பைத்தியமா?” போன்ற வசனங்களை பேச தொடங்குவார்கள்.
அவர்களது அறிவுரைகள் உங்களுக்கு சிறப்பானது இல்லை என தெரிந்தால் அவர்கள் சொல்வதை கேட்ப்பதை நிறுத்தி அவர்களிடம் “இதில் குறுக்கிட வேண்டாம்” என தெளிவாக கூறுங்கள். இப்போது அவர்களுக்கு அது தூக்கி வாறி போடுவது போலிருந்தாலும் நாளடைவில் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் தாமாக அறிவார்கள். ஒரு வேளை உங்கள் இருவருக்கும் பொதுவாக இருக்கும் நண்பர்களால் உங்களது உள ஆரோக்கியம் சிதைவுக்குள்ளாவதை நீங்கள் உணர்ந்தால் தயவு செய்து அவர்களுடனான உறவினை துண்டித்துக் கொள்ளுங்கள்.
4. தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சில நாட்களுக்கு,
- நீங்கள் இருவரும் விரும்பி சென்ற இடங்களிற்கு போவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் இருவரும் திரும்ப திரும்ப விரும்பி பார்த்த திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- நினைவுகளை மீட்டெடுக்கக் கூடிய பாடல்களை கேட்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். (உலகில் ஆயிரம் பாடல்கள் உண்டு அதனால் பழைய பாடல்களை முற்றாக அழித்து விடுங்கள். உங்களால் அந்த பழைய பாடல்களையே அழிக்க முடியவில்லை என்றால் எவ்வாறு உங்களது முன்னால் காதலை எவ்வாறு உங்கள் மனதிலிருந்து அழிப்பீர்கள்? ஒரு விடயம் ஞாபகத்தில் இருக்கட்டும் எப்போதுமே ஒன்றை இடம் மாற்றுவதற்கென புதிய சிறப்பான விடயங்கள் உலகில் உண்டு. நான் சொன்னது பாடலை…)
- உங்கள் முன்னால் காதலர் உபயோகித்த வாசணைத் திரவியங்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
5. உங்களது முன்னால் காதலரை நோட்டமிடாதீர்கள்.
நீங்கள் அவர்களை யாருக்கும் தெரியாமல் பின் தொடர்வதாகட்டும், உங்கள் நண்பர்கள் மூலம் அவர்களை பற்றிய தகவல்களை கேட்ப்பதாகட்டும், அவர்களது சமூக வலைத் தளங்களை நோட்டமிடுவதாகட்டும் அல்லது அவர்களது வட்ஸ் அப் செயலியின் கடைசியாக வந்து சென்ற நேரத்தினை தேடுவதாகட்டும் இதில் எதாவது ஒரு செயலை நீங்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் தயவு செய்து நிறுத்துங்கள். ஒரு வேளை நீங்கள் இவ்வாறான செயல்களுக்கு பழக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நேரமிது. அவர்களைப் பற்றி தேடுவதில் எந்த அளவிற்கு நீங்கள் அக்கறையற்றவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் முற்றாக வெளி வந்து விடுவீர்கள்.
6. உங்களது உணர்ச்சிகளை பகுப்பாய்வு செய்யுங்கள்.
அதிகமாக சிந்திக்கிறீர்களா? நீங்கள் சில நாட்கள், வாரங்கள் ஏன் இன்னும் சொல்லப் போனால் சில மாதங்கள் கூட குழப்பத்தில் இருக்க கூடும். அவ்வளவு சீக்கிரம் வெளி வர முடியாது தான் ஆனால் சரியான முயற்சிகளை செய்வதன் மூலம் கண்டிப்பாக அவற்றை கடந்து வர முடியும். இவ்வுலகில் ஆயிரம் கணக்கானவர்கள் இது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அதன் பின் அவற்றை அழகாக கடந்து வந்தவர்கள் தான். உங்களாலும் முடியும் ஆனால் முதலில் நன்றாக மனம் விட்டு அழுங்கள் அதன் பின் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் இன்னலை பகிருங்கள்.
உங்களுடைய உணர்ச்சிகளை அடக்கி வைக்காதீர்கள். அதனால் எதுவும் நடக்க போவதில்லை ஆனால் நன்றாக அழுவதன் மூலம் உங்களுடைய மனதிலுள்ள பாரத்தினை குறைத்துக் கொள்ள முடியும். அதற்கு பின் உங்களுடைய முன்னால் காதலர் உங்களுக்கு வேண்டுமா? இல்லை இதிலிருந்து வெளி வந்து முன்னோக்கிச் செல்லப் போகிறீர்களா? என்ற இரண்டில் ஒன்றை முடிவு செய்யுங்கள். அதன் பின் தான் உங்களை நீங்களே சரி செய்வதற்கான வேலைகளில் இறங்க முடியும்.
உங்களுக்குள் உள்ள உணர்ச்சியினை வகைப்படுத்தி கண்டறியுங்கள் – காதலில் ஏற்பட்ட பிரிவினால் உருவான கொந்தளிப்பா? உங்களுடைய எதிர்காலம் பற்றிய பயமா? அல்லது உங்களுக்கு ஏற்பட்ட துரோகத்தினால் துளிர் விட்ட கோபமா? இவற்றுள் எது என்பதை முதலில் பிரித்து கண்டறியுங்கள். அப்போது தான் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளிவர முடியும்.
7. மாற்றங்கள்! மாற்றங்கள்! மாற்றங்கள்!
உங்களுடைய தற்போதைய நிலையினை மறு மதிப்பீடு செய்துப் பாருங்கள். உங்களுடைய காதல் உறவு முறிந்துப் போனமை ஏதோ உங்கள் முழு உலகமுமே முடிந்து விட்டது போன்றிருக்கும் ஆனால் அது உண்மையல்லவே. உங்களது வாழ்வின் மற்றைய விடயங்களை மேம்படுத்துவதன் ஊடாக உங்களால் இந்நிலையை மாற்றிக் கொள்ள முடியும்.
மனம் – எல்லாம் போய் விட்டது என கூறினாலும் அனைத்துமே மனதில் இருக்கும். உங்களது பலவீனம் என்ன என்பதனை கண்டறியுங்கள். உங்களுக்கு முடிவெடுப்பது பயத்தினை உண்டாக்குகிறதா? நீங்கள் நம்பிக்கையற்றவராக உள்ளீர்களா? அப்படியென்றால் நல்ல புத்தகங்களை வாசியுங்கள், ஊக்கமளிக்க கூடிய காணொளிகளை பாருங்கள் மற்றும் இதே சூழ்நிலைகளை கடந்து வந்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களை பலப்படுத்திய காரணிகளை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.
உடல் – இது உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கான நேரம். நல்ல ஆரோக்கியமான உணவு கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுங்கள், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கான சில பயிற்சிகளில் ஈடுபடுங்கள். உங்களது புறத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் காதலின் முறிவால் உங்களுக்குள் குறைந்துப் போன தன்நம்பிக்கையினை அதிகரிக்கும். உங்களது முன்னால் காதலரை பற்றி வீட்டினுள்ளிருந்து சிந்திப்பதை விடுத்து வெளியே சென்று இப்போது பரபரப்பாக பேசப்படும் ஸ்டைல்கள் பற்றி தேடுங்கள்.
சமூகம் – நீங்கள் நினைப்பதை விட உலகில் பார்ப்பதற்கு எவ்வளவோ உண்டு. புதிய மக்களை சந்தியுங்கள். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்களன. உங்களது சிறிய உலகத்தை விட்டு வெளியே வந்து புதிய விடயங்களை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடந்து வந்த அந்த ரணங்கள் மீண்டும் புதிய நபர்களை நம்ப முடியாத ஓர் மனநிலைக்கு உங்களை தள்ளக் கூடும் ஆனாலும் உங்களது முன்னால் காதலரைக் கொண்டு அனைவரையும் ஒட்டு மொத்தமாக கணிப்பது என்பது தவறான விடயம். நம்பிக்கை என்ற ஒன்று இல்லாமல் மற்றவர்களுடன் இணைவது என்பது கடினம்.
8. உள பயிற்சி.
எதிர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதை நிறுத்துங்கள். நிகழ்ந்த கசப்பான அந்த தருணத்தை எண்ணி ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுள் மூழ்குவதை தவிருங்கள். இவை உங்களை மேலும் மேலும் துன்ப சக்கரத்தில் சுழல விடும். உங்களது மனமும் எதிர்மறையான எண்ணங்களில் மூழ்குவதை சௌகரியமாக உணரத் தொடங்கும் அதனால் அவற்றை விரட்டி அடியுங்கள். உங்களுடைய மனதினை நேர்மறையான எண்ணங்கள் துளிர் விடும் இடமாக மாற்றுவதற்கான பயிற்சிகளை அளியுங்கள். சில சமயம் இது பெறும் சவாலாக மாறலாம் எனவே அவற்றை சிறப்பான முறையில் சொல்லித் தரக்கூடியவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
இன்றும் கவுன்சிலிங் மற்றும் தெரபி போன்ற சொற்களுக்கு இலங்கையர்கள் அஞ்சுகிறார்கள். பிறர் என்ன நினைப்பார்களோ என்ற அச்சத்தினால் ஏன் உங்களை நீங்களே சிதைத்துக் கொள்ளப் போகிறீர்கள். உள ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டறியாது இருப்பது தான் தவறே தவிர கண்டறிவது அல்லவே. எது எவ்வாறாக இருப்பினும் அது உங்கள் தனிப்பட்ட முடிவு.
ஆசியாவில் வாழும் ஆண்கள் “இது மிகவும் கடினமாக உள்ளது” மற்றும் ஒரு பெண்ணின் நினைவுகளிலிருந்து வெளி வருவதற்காக சிகிச்சையினை பெற்று வருவது என்பதை பிறர் அறியும் பட்சத்தில் கேலியாக சிரிக்க தொடங்குகின்றனர். அவர்களது கையில் மதுபானம் கொடுத்து குடித்து மறக்குமாரு அறிவுரை வழங்கப்படுகிறது. பிறர் சிரிப்பார்கள் கேலி பேசுவார்கள் என்பதற்காக எல்லாம் உங்களுக்கு சரியானவற்றை செய்வதை நிறுத்தாதீர்கள். உங்களுக்கு இது சரியான முடிவு என தெரிந்தால் அதனை நோக்கிச் செல்லுங்கள். இங்கு எவருமே “ஐயோ பாவம்” என பரிதாப மழை பொழிவதை தாண்டி எதுவும் செய்யப் போவதில்லை. அதனால் அந்த பரிதாப நிலையிலிருந்து உங்களை நீங்களே வெளியே கொண்டு வாருங்கள்.
9. ஒன்றை விட்டு இன்னொன்றிற்கு தாவ வேண்டாம்.
ஒரு உறவு முறிந்தவுடன் இன்னொரு உறவுக்குள் தாவ வேண்டாம். உங்களது காயங்கள் ஆறுவதற்கு நேரம் தேவை. உங்களை நீங்களே பராமறித்து மெருகூட்டுவதற்கான நேரம் தேவை. உடனே இன்னொரு உறவுக்குள் தாவிக் குதிப்பது நிரந்தர தீர்வாகாது. அத்தோடு அந்த உறவு தற்காலிக வெற்றிட நிரப்புதலாகவே இருக்குமே தவிர நிலையானதாக இருக்காது. இது மேலும் உங்களை வேதனைப்படுத்தி வருத்தும் எனவே புதிதாக இன்னொரு உறவுக்குள் போகும் முன் பழைய காயங்களிலிருந்து முழுதாக வெளியே வாருங்கள்.
10. புதிய முன்னுரிமைகள்.
உங்களுடைய நேரத்தினை புதிய பொழுது போக்கு, செயல்கள் மற்றும் உங்களுடைய பேஷனிற்காக ஒதுக்குங்கள். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக நேரத்தினை செலவிடுங்கள். உங்களை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் முன்னோக்கி நகர்த்திச் செல்லுங்கள். சுயமாக எதாவது செய்யுங்கள். உங்களது வழக்கம் மற்றும் விதிகளை தகர்த்தெறியுங்கள். இது உங்களது வாழ்வை முன்பிருந்ததை விட சுவாரஸ்யமானதாக மாற்றும். நீங்களும் உங்களது வாழ்வு எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.
வாழ்க்கை அழகானது! நீங்கள் எப்போது மீண்டும் சந்தோஷமான மனநிலைக்கு திரும்புவீர்கள் என என்னால் குறிப்பிட்டு கூற முடியாது. சில நாட்களாகலாம், சில வாரங்களாகலாம், சில மாதங்களாகலாம், சில வருடங்களாகலாம் ஏன் அதற்கு மேலும் ஆகலாம் ஆனால் நீங்கள் விரைவில் சந்தோஷமான மனநிலைக்கு திரும்பி விடுவீர்கள்.