மனிதர்களை நாடி S. J. V. செல்வநாயகம்

S. J. V. செல்வநாயகம்

2021 Aug 7

பொதுவாக ‘வேலுப்பிள்ளை’ என்றாலே எமது சிந்தனைகள் வேறொரு நபர் நிமிர்த்தம் செல்வது சாதாரணம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் உண்மையாகவே குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட ‘தந்தை செல்வா’ எனத் தமிழ் – சிங்கள மக்கள் இரு தரப்பினரிடமும் நன்மதிப்பை வென்ற S. J. வேலுப்பிள்ளை செல்வநாயகம் தொடர்பான பார்வை இதோ.

இருள் படிந்த ஈழத்து வானில் உதய சூரியனாய் ஒளி வழங்கிய தந்தை செல்வா அவர்கள் மலேசியா நாட்டில் இல்போ என்ற நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட வேலுப்பிள்ளை தம்பதியினருக்குப் பிறந்தார். மூன்று புத்திரர்களையும் ஓர் தங்கையையும் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாக விளங்கிய செல்வநாயகம் அவர்கள், சிறுவயதிலேயே மலேசியா நாட்டில் விளங்கிய அரச குடும்ப சிறார்களுக்கும், செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த சிறார்களுக்கும் மட்டுமே கல்வி என்ற அடக்கு முறைக்குப் பலியானார். அதனைத் தொடர்ந்து 4 வயது பாலகனாக இலங்கை வந்த செல்வநாயகம் அவர்கள், ஆரம்பக் கல்வியை தெல்லிபலை அமெரிக்க மிஷனரி கல்லூரியிலும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலும் பயின்றார். உயர்தர கல்வி நிமித்தம் தென் இலங்கை நோக்கிப் பயணித்த இவர் கல்கிஸ்ஸ புனித பரிதோமாவின் கல்லூரியில் தனது இறுதி பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்தார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் 1918 ஆண்டு தனது விஞ்ஞான தொடர்பிலான பட்டப்படிப்பை முடித்த பின் கல்கிஸ்ஸை பரிதோமாவின் கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார். தனது சுகயீனமுற்றிருந்த சகோதரனைப் பார்க்கும் முகமாக விண்ணப்பிக்கப்பட்ட விடுமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் தன் உரிமை மீண்டும் பறிக்கப்பட்ட களைப்பில், தான் கடமையாற்றிய ஆசிரியர் தொழிலையே இராஜினாமா செய்து விட்டு சகோதரரைப் பார்க்கச் சென்றார். பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பிரதான விஞ்ஞான ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் பேசும் மக்களின் தன்நிகரிலா தலைவன் என்று போற்றப்பட்டாரோ அவ்வாறே நல்லாசிரியர் என்ற புகழுக்கும் சொந்தக்காரர் ஆனார். இவர் ஆசிரியராக உலா வந்த காலப்பகுதியில் வெஸ்லி கல்லூரி மாணவர்கள் இவரின் நடை, உடை, பாவனையைப் பின்பற்றியது மட்டுமல்லாது அவரைப்போலவே நடு உச்சியில் தலை வாரும் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்பது நெகிழ்வூட்டும் விடயமாகும்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கற்பித்தல் தொழிலிலிருந்த நிலையிலேயே சட்டக்கல்லூரிக்குள் நுழைந்து, சிவில் சட்ட வல்லுநராக 1924 ஆம் ஆண்டு வெளியேறினார். அத்துறையிலும் முதிர்ச்சி பெற்ற வல்லுநராக விளங்கிய அவருக்காக உச்சநீதிமன்றத்தில் கடமையாற்றும் பொறுப்பு இரு தடவைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் சிரேஷ்ட சட்டத்தரணியாக வலம் வந்த இவர், பிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோண் மற்றும் சுப்பைய்யா சரவணந்தா ஆகிய நபர்கள் இவரது இளையவராக பணிபுரிந்தவர்கள் என்பதோடு, முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தந்தையான எட்மண்ட் விக்ரமசிங்கவும் இவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் என்பதன் மூலம் அவரின் சட்ட மகிமை எந்த அளவு உச்சத்திலிருந்திருக்கும் என்பதை கணிக்கக் கூடியதாயிருக்கும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக வலம் வந்து ஈழத்துக் காந்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களுடன் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். வெறுமனே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மலையக மக்களையும், தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தவர்களையும் அவரது அரசியல் பாவையில் இணைத்துக்கொண்டு தனது தொண்டு அனைத்தையும் அவர்களோடு இணைந்து, அவர்களுக்காகவும் ஆற்றி வந்தார். ஆரம்பத்தில் கூட்டாட்சி மூலமாகவே இன அடக்குமுறைக்கு ஓர் தீர்வு காண முடியும் என வெகுவாக நம்பிய செல்வநாயகம் ஐயா, காலப்போக்கில் அவரது அரசியல் சகோதரனாகத் திகழ்ந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவி, தமிழ் மக்களின் உரிமைக்கு மாற்றீடாக எப்போதும் கருதமுடியாது என்று வலியுறுத்தி, அவருடன் இருந்து விலகி இலங்கையின் முதலாவது இனத்துவக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்தார். பல போராட்டங்கள் நிகழ்த்தியும் அதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் களைப்புற்ற செல்வநாயகம் அவர்கள், தனி நாடு என்ற கோட்பாட்டை வழிமொழிந்தார். ஆரம்ப காலத்தில் சமஷ்டி முறைமைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டதோடு அவரின் அரசியல் யூகங்கள் வீழ்வுறும் வண்ணமே இருந்தது. எனினும் 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனி சிங்கள சட்டத்தை எதிர்த்துப் பல சத்தியாகிரக போராட்டங்களை நடாத்தி, அன்றைய அதிபதியாக விளங்கிய பண்டாரநாயக்க அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை ஓரளவுக்கு வென்றெடுத்தார். அதன் பின்னர் ஈழத்துத் தமிழர் வரலாற்றில் தன்னிகரில்லாத தலைவராகவும், ஈழத்துப் பெரியார் எனவும் அனைவராலும் போற்றப்பட்டார்.

“தமிழ் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு கிறிஸ்தவர் தலைமை தாங்குவதா?” போன்ற இனவாத கேள்விகள், தான் பிரதிநிதித்துவப்படுத்திய இனத்திலேயே எழத் தொடங்கியதால் சற்று சோர்வுற்றாலும் தமிழ் மக்கள் அமைதியாகவும் தனது இடங்களில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஓர் சத்தியாகிரகியாக இறுதிவரை வாழ்ந்தார். அஹிம்சாவாதியான தந்தை செல்வாவின் வாழ்நாள் வெற்றியாக திகழும், செல்வா – பண்டா ஒப்பந்தமோ அல்லது செல்வா – டட்லி ஒப்பந்தங்கள் போன்ற ஒப்பந்தங்கள், அவருக்குப் பின் அமுல்படுத்தப்பட்டிருந்தால் கோடிக்கணக்கான பொருள் சேதங்களையோ, ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்களையோ அல்லது நாடு என்ற ரீதியில் 30 வருடம் பின் நோக்கி நகர்ந்ததைத் தவிர்த்து இருக்க முடியும் என்பதே பலரால் ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மையாகும். இவர் தனது 79 வயதில் ‘இனி கடவுள் தான் தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்றவேண்டும்’ என்று  கூறி இறைவனடி சேர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php