அனைத்தையும் நாடி  கடனட்டையின் நன்மை தீமை

கடனட்டையின் நன்மை தீமை

2021 Sep 1

நாடு என்ற ரீதியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை முகம் கொடுத்த வண்ணம் இருக்கும் இத்தருணத்தில் அதிகமான கடன் அட்டை விளம்பரங்களை நாள் தோறும் பார்த்த வண்ணம் உள்ளோம். சுமார் 14 மில்லியன் வயது வந்தோர் சனத்தொகை கொண்ட எம் நாட்டில், 2020 செப்டெம்பர் மாதம் வரை 1.8 மில்லியன் கடனட்டை பாவணையாளர்கள் உள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இது தொடர்பான விழிப்பூட்டலோ போதுமான அளவு விபரங்களோ மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே தருணத்தில் கடன் அட்டை என்பது ஒரு சூது, எமக்குத் தெரியாமலேயே எமது பணத்தைக் கடன் அட்டை என்ற போர்வைக்குள் சூறையாடுகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகளும் நாள் தோறும் வலுப்பெற்றுவருகின்றது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இவ் வகையான காரணிகளை விளக்கும் முகமாக இப் பதிவு அமையப்பெறும் என்பதோடு கடன் அட்டை தொடர்பான புரிதலை உங்கள் மத்தியில் அதிகரிக்கும் என நம்புகிறோம். மேலும் இப் பதிவானது கடன் அட்டையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுஅமையப்பெறவில்லை என்பதையும் தெரியத்தருகிறோம்.

பொதுவாக Credit Card இற்கும் Debit Card இற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. எவ்வாறு எமது கணக்குகளில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தை Debit Card அல்லது ATM Card என்று கூறப்படும் அட்டையைப் பயன்படுத்தி பொருள் கொள்வனவையோ அல்லது ATM இயந்திரம் மூலம் பணம் பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்துகின்றோமோ அவ்வாறே இக் கடன் அட்டைகளும் பயன்படும். எனினும் இக் கடனை அட்டையை உபயோகிப்பதற்கு எமது சொந்தப் பணம் கணக்குகளில் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. வங்கியினால் எமது மாத சம்பளம், வணிக வருவாய், முன்னைய கடன்கள் ஒழுங்காகச் செலுத்தப்பட்டுள்ளதா போன்ற தரவுகள் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் Credit Limit / கடன் வரம்பு வரையறுக்கப்படும். அவ் Credit Limit க்குள் எமது வணிக பரிவர்த்தனைகளை, அட்டைகளை மாத்திரம் உபயோகித்துச் செய்து கொள்ள முடியும். எனினும் Cash Limit என்பது ATM இயந்திரம் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் உச்சக்கட்ட எல்லையாகும். இவை சராசரியாக Credit Limit இல் இருந்து 20% ஒதுக்கீடாகும். எனினும் Credit Card இல் இருந்து பணம் பெரும் போது குறிப்பிட்ட சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாக அறவிடப்படும்.

கடன் அட்டையின் பொதுவான பயன்களாக உணவகங்கள், ஹோட்டல்களில் கிடைக்கும் சலுகைகளுக்கு அப்பால் 0% தவணை முறை திட்டம் என்பது மக்களிடையே பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு நாம் 180,000 ரூபாய்க்கு வணிக பரிவர்த்தனை ஒன்றைச் செய்து அதனை 12 மாதம் 0% தவணைக்கட்டணத்திற்கு மாற்றும் பட்சத்தில் மேலதிக கட்டணம் எதுவும் இன்றி 15,000 ரூபாய் மாதம் படி 12 மாதங்களில் செலுத்த முடியும். எனினும் அதிகமான இலத்திரணியல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவர்கள் வங்கிற்குச் செலுத்தவேண்டிய 2.5% – 3% பரிவர்த்தனை கட்டணத்தை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அங்காடி சந்தைகள் (Super Market) மற்றும் ஜவுளிக்கடைகள் (Clothing Shop) என்பன மேலதிக கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதில்லை என்பது வரவேற்கத்தக்கது. மேலும் அநேகமான வங்கிகள், 10,000 ரூபா அல்லது அதற்குமேலதிகமாக செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் மாதாந்த தவணைக்கட்டணத்தில் செலுத்தும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். எனினும் மாதாந்த சலுகை கோரப்படும் காலத்திற்கு அமைய Handling Fee அதாவது கையாளுதல் கட்டணம் அறவிடப்படும்.

கடன் அட்டை பெறுவதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் 49 – 51 நாள் வட்டி இல்லாக் கடன். இதுதொடர்பான விழிப்பூட்டல் மக்களிடையே மிகக் குறைவாகக் காணப்படுவதோடு, இக் கோட்பாட்டை முழுமையாக விளங்காத பட்சத்தில் தான் செலவினத்துக்கு அதிகமான கட்டணங்களையும் வட்டியையும் வங்கிக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்திற்கு உள்வாங்கப்படுகிறது. மேலும் வங்கி முகாமையானோர்கள் இது தொடர்பான தெளிவான விபரங்களைத் தெரிவிப்பதற்கு முன்வருவது மிகக் குறைவு என்பதால் இது தொடர்பான புரிதலை நாம்பெற வேண்டும் என்பது மிக அவசியமாகும். பொதுவாக Statement Cycle அதாவது 30 நாள் காலப்பகுதிக்குள் நிகழ்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும் 30வது நாள் இறுதியில் Statement வாயிலாக வெளியிடப்படும். அவ் Statement வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 19 – 21 நாள் இறுதிக்குள் செலவு செய்த பணத்தை நீங்கள் முழுமையாகச் செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் தான் Late Payment Fee என்ற நிலையான கட்டணத்தையும் வட்டியையும் கட்ட உங்களுக்கு நேரிடும். மேலும் உங்களது 19ம் அல்லது 21ம் நாள் முடிவையே Due Date என்று சொல்வார்கள். எனினும் அந்த குறிப்பிட்ட 30 நாள் காலப்பகுதிக்குள் நீங்கள் நிகழ்த்திய மொத்த தொகையைக்கட்ட முடியாத பட்சத்தில் அதில் 2.5% Minimum Balance இனை மாத்திரமாவது கட்டுவதன் மூலம் Late Payment Fee இல் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ளலாம். எம்மில் அதிகமானோர் விடும் பெரும் தவறு இந்த Minimum Due இனை மாத்திரம் கட்டுவது என்பதுதான். ஆகவே நிர்ப்பந்திக்கப்பட்ட திகதியில், அக் குறிப்பிட்ட காலப்பகுதியில் நிழத்திய முழுத்தொகையையும் செலுத்தும் பட்சத்தில் மேலதிக பணம் வங்கிக்குச் செலுத்தும் சூழ்நிலையில் இருந்து எம்மை முழுமையாகக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதைத் தெரியத்தருகிறேன். வங்கியில் நேரடியாக பெரும் கடனை விட, திகதி தவறும் பட்சத்தில் நாம் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி ஏற்றத்தால் இரண்டு மூன்று மடங்கு அதிகளவான கடன் சுமைக்குள் தள்ளப்படுகிறோம். ஆகவே முழுத்தொகையை உரிய காலப்பகுதியில் கட்டுவதன் மூலம் கடன் அட்டை மூலம் முழுப் பயனையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதைத் தெரியத்தருகிறோம்.

மேலும் இக் காலப்பகுதிகளில் சில வங்கிகள் வருடாந்த கட்டணத்தை ஆயுட்காலம் வரை முழுமையாக நிவர்த்தி செய்ததுள்ளதுடன் அதிகளவிலான Cash Back சலுகைகளையும் அறிமுகம் செய்து உள்ளது. மேலும் கடன் அட்டை அவசர நிலைமைகளில் நிதி ரீதியாக பெரியதோர் பக்க பலனாக இருக்கும் என்பதால் கடன் அட்டை பெறுவது சிறந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. அதே தருணத்தில் வருமானத்திற்கு அமைய தங்களது பணத்தையும் கடன் அட்டையையும் முகாமித்து கொள்ளுதல் அவசியமாகும். தவறும் பட்சத்தில் பெரியதோர் நிதிநெருக்கடிக்குள் உள்வாங்கப்படுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here