அனைத்தையும் நாடி  ஆன்லைன் வகுப்பில் செய்யக்கூடியவை / கூடாதவை

ஆன்லைன் வகுப்பில் செய்யக்கூடியவை / கூடாதவை

2021 Sep 8

கொரோனா வைரஸ் இவ் உலகையே இயங்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. எனினும் இக் கொடிய நோயினால் அரங்கேறிய நல்ல விடயங்களில் ஒன்று தான் இந்த வீட்டில் இருந்தவரான வேலை. அதாவது Work From Home, மற்றையது இணைய வழிக் கல்வி முறைமை. என்னதான் Google Forms இல் தவணைப் பரீட்சை நடந்தாலும், படிக்கிறவன் எப்படியும் Pass ஆகிடுவான், படிக்காதவன் இப்படியாவது Pass ஆகட்டும் என்று கூறிக்கொண்டு பலர் இக் கல்வி முறைமையை வழிமொழிகின்றனர். எனினும் பாரிய பின்விளைவு இதனால் எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என்ற அச்சம் எவரிடமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது . அது ஒரு புறம் இருக்க, இவ் இணையக்கல்வி முறைமையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு நாம் செய்யக் கூடிய மற்றும் செய்யக்கூடாத சில விடயங்கள் தொடர்பான ஓர் பார்வை இதோ….

வகுப்பிற்கு முன்னரான முன் ஆயத்தம்

பாடசாலைக்கு Late ஆ போய் பார்த்து இருப்பீர்கள். ஆனால் Zoom Class க்கு கூட late ஆகி வந்து ஆசிரியர்களுக்கு shock கொடுக்கும் வழக்கம் நாள் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே இதற்காவது உரிய நேரத்தில் Join ஆகி தங்களது நேரம் தவறாமையை ஆசிரியர்களுக்குக் காண்பிப்பது அவசியமாகும். மேலும் தங்களது Phone, Laptop மற்றும் Tab களை Full Charge இல் வைத்து பாடங்களுக்குச் செல்வது சால சிறந்தது. காலையில் நேரத்துடன் எழும்புவது சிறிது கடினமான விடயமாக மாறி விட்டதால் எம்முடைய Default Alarm Clock ஆன தாய் தந்தையர்களிடம் உரிய நேரத்தில் எழுப்புவதற்கு உபதேசித்து உறங்கச் செல்லல் வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்தல்

அதிகமான பாடங்கள் காலை வேலைகளில் நடப்பதால் ஒலி மாசு ஏற்ப்படுவதற்கான சாத்தியம் அதிகம். பாண் விற்கும் Tune வண்டி முதல் குப்பை சேகரிக்க வரும் நபர் வரை அனைவரும் இதற்குப் பங்காளியாக ஆகிவிடுவார்கள். ஆகவே பொறுப்பு மிக்க மாணவர்களாக Mute இல் வைத்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துதல் மிகச் சிறந்தது. மேலும் அநேகமான ஆசிரியர்கள் இத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் வித்துவான்களாக இல்லாதிருப்பதால் தொழில்நுட்ப வேண்டுகோள்கள் தேவைப்படின் செய்து கொடுத்தல் அவசியமாகும்.

மோசமான தொடர்புகள்

நீங்கள் நினைக்கும் தொடர்பு இது கிடையாது 😉 வலையமைப்பு சிக்கலினால் ஏற்படும் மோசமான தொடர்புகளை இது குறிக்கும். ஆகவே அதற்கு ஸ்திரமான தீர்வு எவரினாலும் இதுவரை வழங்க முடியாதுள்ளதால் பொறுமையே பெருமை என்று நினைத்துக்கொண்டு அமைதி காக்கவும். பெயர் குறிப்பிட முடியாத குறிப்பிட்டதொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் எனின் நீங்கள், உங்களை அவர்கள் அதிகம் சோதிப்பார்கள். ஆகவே கடுப்பேற்றும் சந்தர்ப்பங்களில் 10 முதல் 1 வரை எண்களை பின் புறமாக எண்ணி கோபத்தை அடக்கிக் கொள்ளவும்.

சிறந்த சுற்றுச் சூழலை உருவாக்கிக்கொள்ளல்

கல்வி பயில்வதற்குக் கல்வி கற்கும் சூழல் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. ஆகவே நாம் அதற்கு உகந்த சூழலைத் தேர்வு செய்வதில் எந்த ஒரு பார பட்சத்தையும் பார்க்கக் கூடாது. அரை நித்திரையுடன் கட்டிலில் இருந்தவாறான கல்வி ஒரு போதும் பயனுள்ளதாக மாறப்போவதில்லை. முடியுமானவரை உரங்கள் பிரதேசத்திலிருந்து விலகிச் சென்று அமைதியாகப் பாடத்தில் மாத்திரம் கவனம் செலுத்தும் முகமாகவும், வெளி தகராறுகள் இல்லாத இடமொன்றைத் தெரிவு செய்து செல்லல் அவசியமாகும்.

உரிய நேரத்தில் செய்து முடித்தல்

என்ன தான் போதியளவு நேரம் முன்னராகவே வரையறுக்கப்பட்டாலும் கடைசி நிமிடத்தில் முடிப்பதில் நாம் கில்லாடிகள். இறுதி தருணம் வரை இழுத்தடிப்பதால் பதற்றத்திற்கும் அதிகமான தவறுகளை நீங்கள் நிகழ்த்திடவும் இது வித்திடும். ஆகவே முடியுமானவரை உரிய நேரத்திற்கு முன்னராகவே செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். அதே தருணத்தில் காலம் தாமதித்து விட்டு, அடித்தது அழிந்து போய்விட்டது, அயல் வீட்டுக்காரருக்கு கொரோனா என்று வெகுளி கதை கதைக்காமல் உண்மையை ஏற்றுக்கொள்ளுதல் சிறந்தது.

கைப்பேசி பாவனையைக் குறைத்துக்கொள்ளல்

இணைய வழிக்கல்வியின் புற்றுநோய் என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் தான் நேர் முக வகுப்புகள் Physical முறையில் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் விழிப்புணர்வு மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் தங்களது கவனத்தைச் சிதறடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அனைவரும் தான் செய்வது சரியா தவறா என்று சுய விசாரணை செய்து எம் நலம் கருதி இவற்றிலிருந்து முடியுமான வரை விலகி பாடங்களில் கவனம் செலுத்தல் மிக அவசியமாகும்.

கருத்துறைக்க அஞ்சாதே ! !

நேர் முக வகுப்புகள் போலவே கேள்வி கேட்பதற்கோ, உங்களுடைய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கோ பின் வாங்க வேண்டாம். கொரோனாவினால் சுமார் 1.5 வருடங்கள் இந்த முறைமைக்குப் பழகிவிட்டோம். தொழில்நுட்பம் எவ்வளவு வெகுவாக வளர்ந்தாலும் நேர்முக வகுப்பிற்கு ஒரு போதும் நிகர் ஆகாது. ஆகவே முடியுமான வரை நேர் முக வகுப்புகள் போலவே சூழலை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் முற்று முழுதாக எங்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதால் இவற்றை விடச் சிறந்த Tips இருப்பின் அதனை நாங்களும் அறிவதற்கு ஆவலாக உள்ளோம். ஆகவே கீழேயுள்ள Comments section மூலம் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுங்கள். இணையக் கல்வி முறைமை என்பது சற்று சலிப்புத்தட்டும் விடயாமாக இருந்தாலும் தங்களுடைய அறிவை விருத்தி செய்வதில் எவ்வித பார பட்சமும் பார்த்தல் கூடாது. ஆகவே முடியுமானவரை உங்கள் அறிவை கூட்டிக்கொள்வதுடன் கொரோனாவிற்கு எதிரான பயணத்தில் சமூகப் பொறுப்பு மிக்க குடிமகனாக வாழக் கற்றுக்கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php