2021 Nov 28
கண்ணால் காணும் உலகை விட கற்பனையால் உருவாகும் உலகு பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகை நம் மனக்கண் முன் தோன்றவைத்து புதியதொரு உணர்வை ஏற்படுத்தும் சக்தி நிச்சயம் புத்தகங்களுக்கு தான் உள்ளது. புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்கு இணையானது. தூசி தட்டி பூட்டி வைத்து பாதுகாக்கப்படுவதல்ல புத்தகம். பிரட்டிப் பாரத்து படித்து முடித்து பொக்கிஷம் என்று உணரசெய்வது தான் புத்தகம்.
மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமானது புத்தகங்கள்.
நேற்று, இன்று, நாளையென முக்காலமும் அறியச்செய்வது ஜோதிடமா? இல்லவே இல்லை. அவை புத்தகங்கள் தான். மனிதனின் வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களாகவும் நிகழ்காலத்தை பற்றி கூறும் நூல்களாகவும், எதிர்காலத்தை வளமாக்கும் ஆயுதமாகவும் திகழ்பவை இந்த புத்தகங்கள் தான். ‘அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும் மற்றும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது.
வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெற்றுக்கொள்ளும் உரிமை, தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற பல கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும்.
துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள் என்கிறார் மார்ட்டின் லூதர்கிங். ஒரு நாட்டை கட்டியெழுப்பவோ சமூதாய சீர்கேடுகளை கட்டுப்படுத்தவோ புதிய கண்டுபிடிப்புகளை விளக்கவும் வலியுறுத்தவும் புத்தகங்கள் அவசியமாகிறது. எழுத்துப்புரட்சி நாட்டையும் இவ் உலகத்தையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது. அத்தகைய புத்தகங்களை சேமித்து வைக்கும் களஞ்சியமாக திகழ்பவை நூலகங்கள். நாம் நூலகங்களை பயன்படுத்தவேண்டும். எத்தனையோ பல இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் நம் எதிர்காலத்தையே மாற்றபோகும் புத்தகங்களின் இருப்பிடமான நூலகத்திற்கு செல்ல மறக்கிறோம். நூலகங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிகொள்வது சாலச்சிறந்தது.
ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதற்கும், நாம் புது புது விடயங்களைக் கண்டறிவற்கும் நூல்கள் உதவும். ஆகவே நாம் சிறுவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தும் நல்ல புத்தகங்களை கற்றும் சமூகத்தில் சாதனையாளராக மாறுவோம்..!
தலை குனிந்து என்னைப் பார்..
தலைநிமிர்ந்து உன்னை வாழ வைக்கிறேன்..
இப்படிக்கு,
-புத்தகம்-