2022 Mar 17
இலங்கையைப் பொறுத்தவரையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைத்தாக்கங்கள் சர்வசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது. பல்வேறு மனித தாக்கங்களினால் யானைகள் உயிரிழப்பதும் யானைகளால் மனிதர்கள் பாதிப்படைவதும் இன்றைய ஊடகங்களில் நாளாந்தம் கேட்கின்ற, பார்க்கின்ற ஒரு செய்தியாக எம்மால் காண முடிகிறது. தென்னாசியாவிலேயே இவ்வாறு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் அதிகமாக முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் 300 இற்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இவற்றுள் 4 வீதமான யானைகள் ரயில் தண்டவாளங்களில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதிகமான யானைகள் மொனராகலை மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளன. அதனையடுத்து அம்பாந்தோட்டை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் முறையே அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளன. அத்துடன் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலில் வருடாந்தம் சுமார் நூறு பேர் வரை மரணிக்கிறார்கள்.
வெலிகந்த, ஹபரண, மன்னம்பிட்டிய, கெகிராவ, புலுகஸ்வேவ என 50 ற்கும் மேற்பட்ட இடங்கள் யானைகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. யானைகளைக் காப்பதற்கு அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கைகளும் துரிதப்படுத்துவதாகத் தெரியவில்லை. சிறிய யானைக்குட்டிகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளதோடு பல காட்டு யானைகள் உடல் உறுப்புக்களையும் இழந்துள்ளன. யானைகளின் இந்த அவல நிலைக்கு விமோசனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் என்பன வெறும் வாய்ப்பேச்சில் முடங்கியிருப்பது வெறும் ஏமாற்றத்தையே தருகிறது.
இலங்கை புகையிரத சேவைகள் நூற்றாண்டுகளைக் கடந்து அனுஷ்டிப்பதென்னமோ உண்மைதான். ஆனால் யானைகளைக் காக்கவென நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இன்னும் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றே. யானைகள் கடப்பதற்கான கடவைகளை அடையாளப்படுத்தவோ, புகையிரத ஓட்டுநர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவோ எந்த உத்தியும் இலங்கையில் இல்லை.
இலங்கை புகையிரத சேவைகளின் பொது முகாமையாளர் இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில்,
“விபத்துக்கள் நடக்கின்ற ரயில் தண்டவாளங்கள் வழக்கமாக யானைகள் கடக்கும் தாழ்வாரங்கள் அல்ல. எனவே அவ்விடத்தில் யானைகள் தொடர்பாக அறிவிக்க எந்த அறிவித்தல் பலகைகளும் காணப்படுவதில்லை. மேலும் ஒருபக்கம் யானைகளுடைய வேலி மறுபக்கம் கிராமங்கள் என்ற அமைப்பிலே பிரதேசங்கள் அமைந்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்”
என குறிப்பிட்டிருந்தார்.
யானைகள் இலங்கை அரசினால் முழுமையாகக் கைவிடப்பட்டு விட்டனவா? அப்படியென்றால் இன்னும் சில வருடங்கள் கடந்தால் இது யானைகள் இல்லாத நாடு என்றாகிவிடும். யானைகளுடைய பாதுகாப்பிற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக உள்ள நீர்நிலைகள், சுனைகள் என்பவற்றை மறித்து மனிததேவைகளுக்காக அணைகள், கால்வாய்கள், நீர், மின்சார ஆலைகள் என்பன கட்டப்பட்ட வரலாறுகளும் இருக்கவே செய்கின்றன. யானைகள் மீது சிறிதும் நலன் காட்டப்படாத இந்த சுயநலத் திட்டங்களைத் தடுப்பதற்கு அல்லது மாற்று வழிகளை பிரயோகிப்பதற்கு யாரும் முன்வராதது கவலைக்கிடமான ஒரு செய்தியே. யானைகளின் அடிப்படைத் தேவையான நீர்த்தேவையை நிறைவு செய்ய யானைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்த செயற்பாடுகளால் உருவானது. மேலும் கால்வாய்களில் யானைகள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்துக்குப் புறம்பாக அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி யானைகளின் வாழ்விடங்களில் சொகுசு விடுதிகள், அதிவேக பாதைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுவதால் யானைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. யானைகளின் இருப்பிடங்களில் அத்துமீறிப் புகுந்த மனிதன், மனிதர்களின் இருப்பிடங்களில் யானைகள் அட்டகாசம் செய்தது என்று தலைப்புச் செய்தி போடுவது வேடிக்கையான ஒன்றே தவிர வேறில்லை. அப்பாவிகளான யானைகள் மனிதர்களால் சமூக விரோதிகளாக்கப்படுகின்றனர்.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை வெற்றிகரமான முறையில் நடுநிலை படுத்துவதற்காக ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய பிரதான உபாயமாக அமைவது மின்சார வேலி அமைப்பதாகும். மின்சார வேலியொன்று நிர்மாணிக்கப்படும் இடம், மின்சார வேலியின் தரம் மற்றும் நிர்வாகம் செய்தல் போன்றன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமைவாக அமைக்கப்பட வேண்டும். அதற்கு புறம்பாக இந்த செயற்பாடு இடம்பெறுமாயின் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான கட்டளைகள் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
காட்டு யானைகள் ஏராளமாகக் காணப்படும் பாதுகாப்பு ஒதுக்காக கருதப்படாத பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். அவ்வாறான குடியேற்றவாசிகளுக்காக மிகவும் பொருத்தமான பிரதேசங்களில் உகந்த இடவசதியினை வழங்குவதற்கான சாத்திய தன்மையை ஆராய்ந்து அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் மாற்றுத் திட்டங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் பரவலாக காணப்படும் இடங்களில் பிரதேச மற்றும் மாவட்ட குழுக்களை அமைத்து குழுக்களின் உற்பத்தித் திறனை விருத்தி செய்வதற்காக தேசிய மட்டத்திலான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். பிரதேச குழுவொன்று ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட வேண்டும். மாவட்ட குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் தேசிய மட்டத்திலான குழு வருடத்தில் ஒரு தடவையும் ஒன்று கூட வேண்டும். இந்தக் குழு சகல செயற்பாடுகள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக் கொள்ளல், ஒன்றுகூடல் தொடர்பான செயற்பாடுகள், வனஜீவராசிகள் திணைக்களத்தின் வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடலுக்கு அமைவாக நடைபெற வேண்டும்.
இலங்கையில் வடமத்திய மாகாணம், யால, ஹபரண போன்ற காடுகளில் அதிகமாக யானைகள் வாழ்கின்றன. இது தவிர பின்னவல யானை சரணாலயத்தில் யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் காடுகளில் காட்டு ராஜா யானைதான். ஆசிய யானை வர்க்கத்தைச் சேர்ந்த இலங்கை யானைகளின் சராசரி ஆயுட்காலம் 60 – 70 வருடங்கள் ஆகும். ஆண் யானைகள் 10 – 12 வயதிற்குள் பருவமடைந்ததன் பின்னர் தனியாகப் பிரிந்து சென்று வாழக் கற்றுக்கொள்கின்றன.
தந்தமற்ற ஆண் யானைகள் ‘மக்னா’ என அழைக்கப்படும். மழை பெய்வதை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் யானைகளுக்கு உண்டு. யானைகள் வாழ்கின்ற காட்டில் ஏனைய உயிரினங்களும் பயன்பெறுகின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? யானைகள் உணவுக்காக பெரிய மரங்களை உடைத்து ஏனைய உயிரினங்களுக்கு பாதை சமைக்கின்றன. வளைவு, நெழிவு கொண்டு பெரிய மலைகளில் யானைகள் நடப்பதன் ஊடாக ஏனைய சிறு விலங்குகள் இலகுவாக அப்பாதைகளை சமைக்க வழி செய்யப்படுகின்றது. மேலும் தண்ணீர் குடிப்பதற்காக வேண்டி நீர் ஊற்றுக்களை தோண்டும்போது ஏனைய உயிரினங்களும் நீரைக் குடித்துப் பயன்பெறுகின்றன.
இலங்கையில் 1900 ஆம் ஆண்டு சுமார் 10000 யானைகள் காணப்பட்டன. ஆனால் இன்று 4500 – 5000 யானைகளே மீதமுள்ளன. வருடாந்தம் 80 – 110 யானைகள் பிறப்பதுடன் 250 – 300 யானைகள் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. யானைகள் தாவர இனப்பெருக்கத்துக்கு வழிசமைக்கின்றன. ஏனைய உயிரினங்களின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய யானைகள் உதவுவதால் யானைகள் இல்லை என்றால் ஏனைய உயிரினங்களும் இல்லை என்ற நிலை உருவாகி விடும். இதனால்தான் “வனத்தை உருவாக்குவது யானைகள்” என ருட்யார்டு கிப்லிங் என்ற அறிஞர் குறிப்பிட்டார்.
யானைகள் ரயிலுக்கு மோதுண்டு நாளுக்கு நாள் இறப்பதைக் கண்டாவது இலங்கை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைப்புகள் விழித்தெழுமா என்பது எடுத்து நோக்க வேண்டிய விடயம்.
யானைகள் அழிவுக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசு யானைகளின் மறுவாழ்வுக்காகவும் இன விருத்திக்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விலங்கு ஆர்வலர்களுடைய அவாவாகும். அந்த வகையில் யானைகளை காப்பதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் பெயரளவிலான அமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
யானைகளுடைய வழித்தடங்கள் மற்றும் வாழ்விடங்கள் துண்டாடப்படுவதினா லேயே யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் சேட்டை செய்கின்றன. ஆகவே யானைகளுடைய வழித்தடங்களை மீட்டெடுத்து அதனுடைய வாழ்விடங்களை திருப்பிக் கொடுத்து மீள்காடாக்கல் செயற்றிட்டத்தினால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இனிமையான உறவை ஏற்படுத்தலாம். இலங்கையில் 155 ற்கும் மேற்பட்ட யானைகள் மனித செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே யானைகள் சர்க்கஸ், மெஜிக் விளையாட்டு என துன்புறுத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
யானைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றுதான் குடிநீர்ப் பிரச்சினை. யானைகள் தண்ணீர் குடிப்பதற்கென காடுகளில் இருந்த ஆறுகள் மறிக்கப்பட்டு அணைக்கட்டுகள், கால்வாய்கள், கட்டப்பட்டிருப்பது யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழைவதற்கு ஏதுவான காரணியாகும். எனவே யானைகளுடைய குடிநீர் பிரச்சினைக்கு ஆறுகளை மீள எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில் தண்டவாளங்கள் மற்றும் அதிவேக பாதைகள் என்பன யானைகளுடைய வழித்தடங்களை மறித்து அமைக்கப்பட்டிருக்கும் உண்மை இன்று அம்பலமாகி உள்ளது. ரயில் தண்டவாளங்களில் யானைகள் சிக்குண்டு உயிரிழக்கும் சம்பவம் நம் காதுகளுக்கு எட்டாமல் இருக்க, ரயில் போக்குவரத்துக்கு மாற்றுவழிப் பாதைகளை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
யானைகள் விபத்துக்குள்ளாகும் விதமாகக் காணப்படும் குழிகள், கால்வாய்கள் என்பன மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாகவே யானைக்குட்டிகள் மற்றும் தாய் யானைகள் குழிகளில் விழுந்து சிக்குண்ட செய்திகளை நாம் கேட்டிருக்கிறோம். எனவே காடுகளில் உள்ள குழிகள் நீங்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தந்தத்திற்காக யானைகள் சில விஷமிகளால் கடத்தப்படுதல் மற்றும் சுடப்படும் நடவடிக்கைகள் நடந்தேறுவது இன்று வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதை அவதானிக்க முடிகிறது. யானைகளை தந்தத்திற்காக கொலைசெய்யத் துணியும் கயவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும்.
யானைகளின் பாதுகாப்பு மற்றும் யானைகளுடைய இன விருத்தி என்பவற்றை கவனத்தில் கொண்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைப்புகள் என்பன மேற்சொன்ன விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமேயானால் யானைகளைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால் இன்னும் நூறு வருடங்களில், இலங்கை யானைகள் இல்லாத நாடு என பிரகடனம் செய்யப்பட வேண்டி வரலாம்.
கடந்த நூறு வருடங்களில் 5000 யானைகள் அழிந்திருப்பது சாதாரண விடயம் அல்ல. அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யானைகள் உட்பட சென்ற வருடத்தில் 311 யானைகள் உயிரிழந்திருப்பது, யானைகளின் பாதுகாப்பு விடயத்தில் உடனடித் தீர்வு எடுக்க வேண்டியதன் கட்டாயத்தை நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே யானைகளின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் விழிப்படைய வேண்டிய கட்டாயம் இருப்பது காலத்தின் தேவையாகும்.
அஹ்ஸன் அப்தர்