அனைத்தையும் நாடி  பொதுப் போக்குவரத்துகளில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்

பொதுப் போக்குவரத்துகளில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்

2022 Mar 14

சமூக ஊடகங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, ஆண், பெண் தொடர்பான பால் நிலை சமத்துவம் தொடர்பில் அதிகளவான கருத்துக்களை வாய் கிழிய பேசிக்கொள்வோம்.

ஆனால் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது மட்டும் இந்த வியாக்கியாணங்கள் எடுபடுவதில்லை. காரணம் பெண்கள் பொது பிரயாணங்களின் போது, நாளாந்தம் ஏற்படும் கசப்பான அனுபவங்களையே எதிர்கொள்கின்றனர்.

இன்றைய வானளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இந்த காலத்தில் ஆண், பெண் என இருவரும் வருமானமீட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதேபோல வேலைக்குச் செல்லும் பெண்களும் அதிகளவில் காணப்படுகின்றனர். பொருளாதாரக் கொள்கைகளும் ஆண்கள் போலவே பெண்களுக்கும் வருமானமீட்ட வேண்டிய தேவைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

விடியற்காலை ஐந்து மணி தொடக்கம் ஒன்பது மணி வரை தலைநகர் வீதிகளில் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்லும் மக்கள் திரளில் சரிக்குச் சரிபாதி பெண்கள் என்பதை அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இன்று அதிகளவான பெண்கள் பொதுப் போக்குவரத்தையே மேற்கொள்கின்றனர். இலங்கை போன்ற சிறிய நாடுகளில் பெண்களுக்கு என்று விசேட பேருந்து சேவைகளோ அல்லது தனிப்பட்ட பஸ் சேவைகளோ இல்லை.

பஸ், ரயில் போன்ற சேவைகளில் அதிகளவாக பெண்கள் தங்களது போக்குவரத்தை முன்னெடுத்து வருகின்றது. அதற்கமைய பாலியல் சுரண்டல்களை, போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கண்டும் காணமல் கடந்து போகின்றார்கள்.

பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக நாம் எழுதினாலும் இன்று வரை அதற்கு தீர்வின்றி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதேபோலத்தான் இன்றைய படித்த சமூகத்தினருக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகளால் இவ்வாறான பிரச்சினைகள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
எனினும் வயது போன, நடுத்தர வயதுடைய ஆண்களாலே இவ்வாறான பாலியல் சுரண்டல்களுக்கு பெண்கள் இலக்காகப்படுகின்றார்கள் என்ற பொதுவான் கருத்துண்டு.

அதற்கமைய வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும் போது பாலியல் ரீதியான வன்முறைகளை நிறையவே எதிர்கொள்கிறேன் என தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் சட்டக்கல்லூரி மாணவியான நிவேதிதா கனகசபை.

“நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாக சென்று வருகின்றேன். இதனால் நான் அடிக்கடி பாதுகாப்பின்மையை உணர்ந்துள்ளேன். பெரும்பாலான ஆண்களுக்குப் பேருந்துகளில் எப்படி அமர்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பெண்களை தீண்டுகிறோம் அல்லது துன்புறுத்துகிறோம் என்ற எந்த உணர்வும் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடிகளை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்” என கூறுகின்றார்.

இதனடையே “என்னுடைய பெரும்பாலான ரயில் பயணங்கள் மோசமான அனுபவங்களையே எனக்கு கொடுத்துள்ளன” என பல்கலைக்கழக மாணவியான பிரஷா பாலக்கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்விக்காக இரவு நேரங்களிலேயே கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இந்த நேரத்தில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். “பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார்.

பயணங்களின் போது, பல சந்தர்ப்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டும் காணாமலும் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். பேருந்து நடத்துனர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒரு சில நடத்துனர்களே சமூக அக்கறையுடன் செயற்படுகிறார்கள்.

முதுகெலும்புள்ள நபர்கள் தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும். சில பேருந்து நடத்துனர்களும் இவ்வாறான வன்முறைகளை மேற்கொள்வதாகப் பெண்ணொருவரும் குறிப்பிடுகிறார்.

பாடசாலை மாணவியாக இருந்த காலத்தில் தினமும் பாடசாலைக்குச் செல்லும் போது தான் இதுபோன்ற வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களை எப்படி கையாள்;வது என்று தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜயவீர (47) பேருந்து நடத்துனர்

8 வருடங்களுக்கு மேலாக பஸ் நடத்துனராக கடைமையாற்றுகின்றேன். பஸ் பயணங்களின் போது பெண்கள் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதை நான் பார்த்துள்ளேன்.

எனினும் பெண்கள் இது தொடர்பான பிரச்சினைகளை என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்வதற்கு தயங்குகின்றார்கள். உடனடியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதை நான் பார்த்துள்ளேன். அதுமட்டுமல்லாது தற்போது, இளைஞர்களை விட நடுத்தர வயது ஆண்களாலேயே தான் அதிகம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆண்கள் தமக்குப் பரீட்சயம் அற்ற பெண்களிடமே தமது தாகாத செயல்களை அரங்கேற்றுவதாகவும் இது தொடர்பாக நான் பலமுறை சில ஆண்களிடம் எச்சரித்துள்ளாகவும் அவர் தன்னுடைய அனுபவத்தை கூறினார்.

“அதுமட்டுமில்லாமல் பாடசாலைக் காலங்களில் மாணவிகளே அதிகம் பஸ்ஸில் ஏறுகின்றார்கள். அப்படியிருக்கையில், சன நெரிசல்களின் போதும் இது போன்ற பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனினும் இதை அவர்கள் கண்டும் காணதது போலத்தான் கடந்து செல்கின்றார்கள்” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பொதுப் போக்குவரத்தில் அதிகமாக பஸ் மற்றும் புகையிரதங்களே காணப்படுகின்றன. அதில் பயணிக்கும் 90 சதவீதமானவர்கள் பெண்களும், சிறுமிகளுமே.

குறிப்பாக அவர்களே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சொற்ப அளவானோர் மாத்திரமே பொலிஸாரிடம் உதவி வேண்டுகின்றார்கள்.

அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் 15-35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் இந்த பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.
இந்த சமூகப் பிரச்சினைக்கான தீர்வுகாண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாகும்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைப் பிரச்சினையை பரந்த மட்டத்தில் எதிர்கொள்வதற்கு சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்புக்கான தரவுகளை நாம் நாடளாவிய ரீதியில் சேகரிக்க வேண்டும். போக்குவரத்தில் பாலியல் ரீதியான சீண்டல்கள் பரவலாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்றாகும்.

ஒவ்வொருவரும் அசௌகரியமில்லாமல் பொதுச்சேவைகளை உபயோக்கும் உரித்துள்ளவர்கள். பொதுப்போக்குவரத்தில் பாலியல் சீண்டல்கள் முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல மட்டங்களில் இருந்தும் ஒத்துழைப்புத் தேவை பரவலாகவும் காலம் காலமாகவும் பெண்கள் பொதுபோக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல வேலைத்திட்டங்களும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் இது வரையிலான முன்னேற்றமான தீர்வுகள் இடம்பெறவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும்.

அதேபோல வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண்கள், நாளாந்தம் பொதுப் போக்குவரத்துக்களில் தொழிலுக்குச் செல்கின்ற பெண்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் போன்றோரிடம் கேட்கும் போது, தம்முடன் பிரயாணம் செய்யும் பெண்களை மதிக்கத் தெரியாத சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோம். பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு அவசியம்.

இவ்வாறான பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டணை வழங்க அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன், பொதுப்போக்குவரத்துச் சேவைகளைப் பெண்களுக்குப் எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது எப்படி என்பது தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டியது அவசியம்.

இந்த உலகத்தில் உள்ளவர்களின் துன்பங்களிற்குக் காரணம் வன்முறையாளர்கள் மாத்திரமல்ல வன்முறைகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சில பேர்களும்தான். பெண்கள் அன்றாட பயணங்களின் போதும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் போதும், மேற்படிப்பிற்காக கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்குப் பயணிக்கும் போதும் இவ்வாறான சவால்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் பெண்களின் பயணங்களை நரகமாக்கிக் கொண்டிருப்பதுடன் அவற்றை மட்டுப்படுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளைத் தாண்டி, பெண்கள் பேரூந்து, முச்சக்கரவண்டி, மோட்டார் வண்டிகள், என ஆண்களுக்கு மட்டுமே என உரித்தான பல வாகனங்களை புறந்தள்ளி ஓட்ட பழகிக்கொண்டுள்ளார்கள். கால மாற்றத்தின் போது, பெண்களை தங்களது இயல்பாக வெளியே பல சவால்களை எதிர்நோக்கவேண்டி உந்திக்கொண்டு இருக்கிறது.

அச்சவால்களை எதிர்கொண்டு வாழ்கையை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நவீன மற்றும் முற்போக்கான பெண்கள் எத்தனிக்கும் இவ்வேளையில், போக்குவரத்து என்கின்ற தடைகள் பெண்களுக்கு சுமையாக இருப்பது நல்லதல்ல.

அதேபால தற்காலத்தில் பெண்களின் போக்குவரத்து விதிகள் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கும் அதேவேளை எதிர்கால சந்தியினருக்கும் பொது போக்குவரத்தில் ஏற்படக்கூடிய பாலியல் சுரண்டல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதையும் அவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்பதும் தற்காலிக மகிழ்ச்சியாகும்.

தர்ஷிகா செல்வசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php