அனைத்தையும் நாடி  நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

2022 Sep 1

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து கொண்ட பன்னாட்டு துடுப்பாட்ட குழுவினரால் வழங்கப்பட்டது. இதுவரையில் (2018) வரை நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இந்தியா 7 தடவைகளும், இலங்கை 5 தடவைகளும், பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியா இரண்டு தடவைகள் ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்கவில்லை. ஏனெனில் 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையினாலும் , 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடன் இருந்த அரசியல் பிரச்சினையை காரணம் காட்டியும் ஆகும். அதே போல் 1990ஆம் ஆண்டு நான்காவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது இதில் பாகிஸ்தான் அரசியல் காரணங்களுக்காக விலகிக் கொண்டது. கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற எட்டாவது ஆசிய கிண்ண தொடரில் முதன்முறையாக ஹொங்கொங் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இணைந்தன. 2004 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் ஆனது.

ஆரம்பத்தில் இருந்து 50 ஓவர்களாக நடைபெற்று வந்த ஆசிய கிண்ண தொடரானது 2016 ஆம் ஆண்டில் இருந்து 20 ஓவர்கள் போட்டிகளாக மாற்றம் கண்டது. எனினும் இடையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது ஆசியக் கிண்ணத் தொடர் 50 ஓவர்கள் ஆகவே நடைபெற்றது. (2019) நடைபெறவிருந்த ஐசிசி உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி தொடராக இது அமையவே இவ்வாறு மாற்றப்பட்டது.

12வது ஆசிய கிண்ணத்திலே ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கிண்ண தொடரில் கால் பதித்தது. 1984 தொடக்கம் 2018 வரை 14 ஆசிய கிண்ண தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் 15ஆவது ஆசிய கிண்ணம் இலங்கையில் நடைபெற உத்தேசிக்கப்பட்டது.எனினும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொள்கிறது. கடந்த சனிக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்ட ஆசிய தொடர் எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கிண்ண தொடரே இவ்வாறு இந்த வருடம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங் கொங் அணியும் இந்த முறை இணைந்துள்ளது.

இதுவரையில்..

கடந்த 27ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இது 15ஆவது ஆசிய கிண்ணத்தின் முதலாவது போட்டியாக நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின இப் போட்டி டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. 147 என்ற வெற்றி இலக்கை இந்தியாவுக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த போதும் போராடியே இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 இற்கு தெரிவாகியது. தொடரின் நான்காவது போட்டியாக இந்தியா மற்றும் ஹொங் கொங் அணிகள் மோதின இப் போட்டி டுபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இந்தியா அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தொடரின் 5 ஆவது போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது. டுபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப் போட்டி இரண்டு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாகும். ஏற்கனவே இரண்டு அணிகளும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்றுக்கு குழு B இல் இரண்டாவது தெரிவாகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மைதானத்தில் தர்க்கம் புரிந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இது இவ்வாறிருக்க இலங்கை கிரிக்கெட் அணியில் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என தான் நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் காலேத் மஹ்மூத் தெரிவித்துள்ளார் .

ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும்போது பங்களாதேஷ் அணியில் உலகத் தரமிக்க பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் மாத்திரமே இருக்கிறார்கள் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக கூறிய கருத்துக்கு பயிற்சியாளர் மஹ்மூத் இலங்கை அணியில் உலகத் தரம்மிக்க பந்து வீச்சாளர்கள் எவருமில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,

தசுன் சானக்க ஏன் இப்படியான ஒரு விடயத்தை கூறினார் என்பது எனக்கு தெரியாது, பங்களாதேஷில் ஷகிப் மற்றும் முஸ்தபிசுரை தாண்டி வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை என அவர் தெரிவி்த்தார். உண்மையை கூறினால் இலங்கையில் தான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நொக்கவுட் குழு நிலை போட்டி இன்று (01) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் சேர்ந்து குழு B இல் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். எனவே இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அப்ரா அன்சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php