2022 Aug 31
“செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்” என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம்.
மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது கறுப்புப்பணம் சினிமா வில்லன்கள் கறுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்பது பல திரைப்படங்களில் எழுதப்படாத விதி. நன்கு சிவந்த, மெல்லிய “உயரமான அழகான மணமகள் தேவை” என்ற வாசகத்துடனேயே இன்று அநேகமான மணப்பெண் தேவை விளம்பரங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.
“எனக்கு நல்ல கலரான பொண்ணாப் பாருங்க” பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால் பல மாப்பிள்ளைகளின் பிரதான கோரிக்கையும் இதுதான். ஆளுமை, கல்வி குடும்பப் பிண்ணனி, உத்தியோகம் என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ அம்சங்கள் இருக்க சிவப்பு நிறத்தில் மட்டும் ஏனிந்த மோகம் ?!
காலங்காலமாக உழைக்கும் வர்க்கம் என்பதனாலும் தற்ப வெப்ப சூழலினாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கறுப்பு நிறமே. சிலர் மாநிறத்தில் இருந்தாலும் பெரும்பாண்மை கருப்புநிறமே. உண்மை இவ்வாறிருக்க வயிட்னிங் க்ரீம் முதல் பேசியல்வரை முகத்தை வெண்மையாக்கும் முயற்சிக்காக நாம் செலவழிக்கும் தொகை இன்று பன்மடங்கு எனலாம் .
சில நிமிடங்களுக்கு ஒருமுறை தொலைக்காட்சியில் காட்டப்படும் வெண் தோல் விளம்பரங்களால் கருப்பான பெண் மீதும் ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன என்றால் அது மிகையில்லை. ஓர் சமூகத்தினது நிறத்திற்கு எதிரான நிறவெறியை நுகர்வோராகிய நாமும் ஊடகங்களும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே மறுக்கவியலா உண்மை.
அழகு என்பது வரையறைக்கு உற்படுத்த முடியாதது என்பதனை உலகமயமாதல் இன்று தலைகீழாக்கியுள்ளது. மனிதனுக்கு மனிதன் அவனது வேறுபட்ட வாழ்க்கைச் சூழலை ஒட்டியும் பலவிதமான காரணத்தினாலும் அழகு பற்றி வெவ்வேறு விதமான பார்வையினை அவன் கொண்டிருந்தான். ஆனால் சந்தைத்தளம் இதை இன்று புரட்டிப்போட்டிருக்கின்றது .
அழகு என்பதற்கு உலக அழகுராணிப் போட்டிகள் வழங்கும் தகுதிகளாக சிவந்த மேனி, மெல்லிய இடை, கூர் மூக்கு, 5.6 அடிகளுக்கு மேற்ப்பட்ட உயரம் போன்றவையே அழகின் வரையறையாகிப்போனது. அண்மைய காலங்களில் சில கறுப்பின அழகிகளின் தேர்வுக்கான மறைமுக காரணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை ஆபிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் சந்தைப்படுத்தும் நோக்கம் என்பது யாவரும் அறிந்ததே அண்மைய தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் எல்லோருமே சிவந்தவர்கள் அநேகமாக தமிழ்நாட்டைத் தாண்டிய அண்டை மாநிலத்தவர்கள்.
தமிழ்ப்பெண்களின் நிறம் தகுதி குறைவானவொன்றாக நினைக்கப்ப்படும்போது தமிழே அறிந்திராதவர்கள் எல்லோரும் தங்கள் நிறத்தினாலேயே கதாநாயகி ஆகிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், ”செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், வெள்ளையா இருக்கவன் வெகுளி போன்ற பஞ்ச் வசனங்கள்மூலம் ஒருவகையான பாசிச மனப்பாங்கு மக்கள் மனதில் உருவாக இந்த சினிமாவும் அடிகோலுகின்றது.
சமுதாயத்தில் இயல்பாகவே உடல் தோற்றத்திற்கு மிகுந்த மதிப்பளிக்கப்படுகின்றது. ஓர் குழந்தை பிறந்தவுடனேயே ஆணா? பெண்ணா? என்று கேட்ட மறுநிமிடமே குழந்தை கறுப்பா? சிவப்பா? என்ற அடுத்த கேள்வி எழுவதுதான் யதார்த்தம் . ஒருவர் கருப்பாகவோ, வெளுப்பாகவோ, அல்லது மாநிறமாகவோ இருப்பது மனித சருமம் பெற்ற இயற்கை.
ஐரோப்பியர் வெளுப்பாகவும், ஆபிரிக்கர் கறுப்பாகவும், ஆசியர்கள் மாநிறம் கொண்டவர்களாகவும் இருப்பதே இயல்பு . ஆனாலும் நாம் ஏன் சிவந்தவர்களை இப்படி பிரம்மித்துப் பார்க்கிறோம்? சிவப்பழகுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதை அடைவதற்கு இத்தனைப் பிரயத்தனப்படுகிறோம்? நம் நிறத்தையே நமக்குப் பிடிக்காமல் போனது எப்படி?
அமாவாசையில் பொறந்தவனே, கறுப்பி, கருவாச்சி என்றெல்லாம் கேலியும் கிண்டலும் செய்யும் அளவிற்கு எங்கள் நிறம் தாழ்ந்து போனதெப்படி? இந்த மனோலீலையின் சமூக வரலாற்றுக் காரணிகள்தான் என்ன? நம் கடவுள்களாகிய சிவன் முதல் கிருஷ்ணர்வரை கருப்பானவர்களாகவே புராணங்கள் சித்தரிக்கின்றன மகாபாரத நாயகி திரௌபதிகூட கருமை நிறத்தவளே.
இன்றுவரை அழகுக்கு உதாரணமாக கூறப்படும் கிளியோபாட்ரா கறுப்புப் பெண்ணே! அப்போதெல்லாம் குறையாகத் தெரிந்திராத இந்த நிறம் இப்போது மட்டும் எப்படி இரண்டாம்பட்சமானது ?
தமிழர்களை தமிழர்களே ஆண்டபோது நம் கடவுள்கள் முதல் அரசர்கள்வரை எல்லோருமே கறுப்பாக இருந்ததனால் கறுப்பு நிறம் மதிப்பான நிலையில் இருந்தது. அதன் பின் ஆரியர்கள்வருகையோடு தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டு தொடர்ந்துவந்த முகம்மதியர்கள் அவர்கள் பின்வந்த ஐரோப்பிய காலணித்துவம் என்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெள்ளைத்தோல் மனிதர்களின் ஆளுகை மேலோங்கியது.
இவ்வாறு ஆட்சி அதிகாரமும், ஆன்மிக அதிகாரமும், (பிராமணர்கள், பாதிரியார்கள், இஸ்லாமிய ஞானிகள் ) சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே சிவந்த நிறம் என்பது அதிகாரத்தின் நிறமாக உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக மேட்டுக்குடியின் நிறமாக அழகு நிறைந்ததாக காட்டப்பட்டது.
கறுப்பு நிறமுடையவர்கள் அழகற்றவர்களாகவும், அவலட்சணமானவர்களாகவும் அதிகாரத்திற்க்குத் தகுதியற்ற அடிமைகளாகவும், இழிவின் சின்னமாகவும் கருத்தப்பட்டனர். கறுப்பர்கள் தாங்களே தங்களைப்பற்றி மட்டமாக நினைத்துக்கொள்ள ஆரம்பிக்க வெண்மையின்மீது அவர்களுக்கு ஓர் பயம் ஏற்பட்டது என்றால் மிகையில்லை. வெண்மையாக இருப்பவன் நேர்மையானவன், புத்திசாலி அழகானவன் என்கிற எண்ணத்தினை வெண்மையாக இருப்பவர்கள் தீர்மானிக்க அதனை கறுப்பர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் .
இவ்வாறே பெருவாரியான மக்கள் கூட்டத்தின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்து திசை மாற்றம் பெற்றது எனலாம். சருமத்தின் அழகை உண்மையிலேயே நிறம் தீர்மாணிக்கிறதா? முகம் மற்றும் மேனி நிறத்தை வெளுப்பாக்குவதாக கூறிக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் லாபம் கொழிப்பது சிவந்த தேகத்தில் நம்போன்றவர்களுக்கு இருக்கும் அக்கறையினையே எடுத்துக்காட்டுகின்றது.
இந்தத் தாழ்வு மனப்பான்மை நம்மிடம்இருக்கும்வரையில் எதை எப்படி வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் என்ற வியாபார தந்திரத்தை தொடர்ந்தும் பயன்படுத்திக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள்.
எழுத்து – ப்ரியா ராமநாதன்