2022 Sep 15
பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது. இது என்னவோ உண்மைதான் ஆனால் திருமணம் போன்ற முக்கிய வைபவங்களுக்கு அழகுநிலையங்களுக்கு சென்று மேக்கப் செய்துகொள்வது பெண்களின் ஒரு பழக்கம். இது இல்லாமல் சாதாரணமாக வெளியில் செல்லும்போது சிம்பிளாக க்ரீமை பூசி,கண்மை தீட்டி ஒரு பொட்டுவைத்து கொஞ்சம் வழக்கம் போல லைட்டாக லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு சென்றாலும் பார்ப்பவர் கண்ணுக்கு நாம் மேக்கப் செய்தது போலத்தான் தெரியும். நாம் சிம்பிளாக தயாராகி இருந்தாலும் நம்முடைய முக லுக்கை எடுப்பாக காட்டுவது லிப்ஸ்டிக் தான். சாதாரணமாக லிப்ஸ்டிக் மட்டும் போட்டாலே நாம் மேக்கப் செய்துவிட்டு வந்து இருக்கின்றோம் என்று பலரும் நையாண்டி பேசுவார். ஆக மேக்கப்பில் மிக முக்கியமானதொன்று லிப்ஸ்டிக் என்பது பெண்களுக்கே நன்றாக தெரியும்.
என்னதான் நன்றாக மேக்கப் செய்தாலும் உதடுகள் பார்ப்பதற்கு கருமையாக அல்லது வரண்டதாக அல்லது சிதைவுகளாக காணப்பட்டால் அந்த மேக்கப்பிற்கே மதிப்பு இல்லாமல் போய்விடும். இதற்காகத்தான் மேக்கப் செய்தால் லிப்ஸ்டிக் போடுவது கட்டாயமாகிவிட்டது. மேக்கப் போடாமலேயே சிலருடைய எளிமையான முகத்தையும் எடுப்பாக காட்டுவது லிப்ஸ்டிக்ஸ் தான். அதிலும் லிப்ஸ்டிக் போடுவதற்கே பெண்கள் சிரமப்படுகிறார்கள். போட்ட லிப்ஸ்டிக் குறுகிய நேரத்திலே அழிந்துபோவது லிப்ஸ்டிக்கை எப்படி பூசுவது என்று தெரியாமல் இருப்பது. என்ன லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது என்ன லிப்ஸ்டிக் நமக்கு மேட்ச் ஆகும் என்று பல பிரச்சினைகள் அவர்களுக்கு.இது போன்ற அனைத்திற்கும் தீர்வாகவே நவீனமயமான இக் காலத்தில் சந்தையில் பல பிரத்தியேக லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவை பற்றி அறிந்து கொள்வோம்.
மேட் ஃபினிஷ் (Matt Finish)
தற்காலத்தில் பெண்கள் பெரும்பாலும் விரும்புவது மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகளைத் தான். இதை பூசிக்கொண்டால் எளிமையாக இருப்பதோடு உதடுகளும் அழகான நிறத்தையும் தோற்றத்தையும் பெறும். சாதாரணமாக மேக்கப் செய்தது போன்று லுக்கைத் தரும். பளபளப்பான மற்றும் ஹெவியான லிப்ஸ்டிக்குகளை விரும்பாத பெண்களுக்க இது ஏற்றது. மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகள் பெரும்பாலும் அடர் நிறங்களிலேயே கிடைக்கப்பெறும். இவை நீண்டநேரம் அழியாமலும் இருக்கும். உதடுகளில் சிறிதளவு லிப் பாமை தடவிவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு மேட் லிப்ஸ்டிக் போடுவதனால் உதடுகள் வரண்டு போகாமல் பாதுகாக்கலாம். லிப் பாமும் இணைந்ததான சில மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்குகளும் சந்தையில் கிடைக்கப்படுகின்றன.க்ரேயோன்ஸ் (Crayons)
ஈஸியாகவும், நேர்த்தியாகவும் போடக்கூடிய லிப்ஸ்டிக் வகைகள் க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக் வகைகள் தான். இவை பெரும்பாலும் பென்சில் வடிவிலேயே அமைந்திருக்கும். மிகவும் தனித்துவமான நிறங்களாகளைக் கொண்டவையே சந்தையில் விற்கப்படுகின்றன. பளிச் நிறத்தையும், அடர் நிறத்தையும் விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.ஒரு தடவை பூசினாலே போதும் உதடுகளை மிகவும் அழகாகக் காட்டுவதோடு அழியாமலிருக்கும். க்ரேயோன் லிப்ஸ்டிக்குகள் மேட்ஃபினிஷ்,க்ரீம்,லிப் லைனர் போன்ற பல ரகங்களில் கிடைக்கப்பெறுகின்றன. க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக்குகளை பென்சிலை பயன்படுத்தி வர்ணம் தீட்டுவது போல உதடுகளுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும். இதன் மற்றுமொரு நன்மையென்னவென்றால் எவ்வித நிறமங்குதல்களும் இன்றி இதனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.பீல்ஓஃப் (Peel Off)
லிப்ஸ்டிக்கை உதடுகளில் சரியாக பூசத் தெரியாதவர்களுக்கு பீல்ஓஃப் லிப்ஸ்டிக்குகள் சரியான தெரிவாகும். இப்போது டிரென்டாக அனைவரும் தெரிவு செய்யும் ஒரு லிப்ஸ்டிக்குகளாக இவை திகழ்கின்றன. இது ஜெல் போன்று காணப்படும் தேவையான அளவு அதனை எடுத்து பூசிக்கொள்ளலாம். இதில் மற்றுமொரு விஷேடம் என்னவென்றால் இதனை பூசி சிறிது நேரம் காயவிட்ட பின்பு இலகுவாக உதட்டிலிருந்து உரித்தெடுக்கமுடியும்.இவ்வாறு பிரித்தெடுத்தால் அதன் வர்ணம் உதட்டில் ஒட்டியிருப்பதை காணலாம். இது உதட்டிலிருந்து தனித்துத் தெரியாமல் உதட்டின் நிறத்தை ஒத்ததாக காணப்படும். அதாவது இயற்கையாகவே உள்ள உதட்டின் நிறமாக காட்சியளிக்கும். இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நீண்டநேரத்திற்கு அழியாமல் அப்படியே இருக்கும்.க்ளொஸி (Glossy)
க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் பொதுவாக பளீச் போன்ற பளபளப்பைத் தரும். இந்த வகை லிப்ஸ்டிக்கிலுள்ள லுமினஸ் ஃபெக்டர் உதடுகளை மினுமினுப்புடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். இந்த க்ளொஸி லிப்ஸ்டிக்குகளை போட்டுக்கொள்வதால் மெல்லிய உதடுகள் சற்று பெரியதாகவும் எடுப்பாகவும் தெரியும். இவை திரவ வடிவிலும் ஸ்டிக் வடிவிலும் கிடைக்கின்றன. இதன் நெகிழ்வுதன்மை சற்று அதிகம் என்பதால் உணவு உண்ணும்போது அல்லது நீண்ட நேரம் சென்றால் அழிந்துவிடும். 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பயன்படுத்தும் தேவை ஏற்படும். இருப்பினும் சில க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் 24 மணிநேரம் நிலைத்துநிற்கும் தன்மை கொண்டவை. இவை சற்று விலை அதிகம். வரண்ட உதடுகளைக் கொண்டவர்களுக்கு க்ளொஸி லிப்ஸ்டிக்குகள் பொருத்தமான தீர்வாகும்.