2022 Sep 17
டுபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஆரம்பத்தில் சரிந்த இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை ஆறாவது தடவையாக கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட பாகிஸ்தான் அணி வாரியம் என்பன மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந் நிலையில் இந்த தோல்வி குறித்து அணித்தலைவர் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது போட்டியில் ஆரம்ப 8 ஓவர்களிலும் வலுவான நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. இந்த ஆதிக்கத்தினை ராஜபக்ஷ,வனிந்து ஹசரங்க மற்றும் சமிக்க கருணாரட்ன அவர்களுடனான இணைப்பாட்டம் இல்லாமல் செய்துவிட்டன. இலங்கை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ராஜபக்சவின் இணைப்பாட்டங்கள் நன்றாக இருந்தன. உண்மையான ஆடுகளமாக அன்று டுபாய் இருந்தது அத்தோடு எப்போதும் போலவே சிறப்பாக இருந்தது என்றார். பாகிஸ்தானின் இந்த தோல்விக்கு துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்ததோடு களத்தடுப்பும் காரணம் என கூறினார். எங்களுடைய ஆளுமைக்கு ஏற்றாற்போல் தாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. எங்களுடைய ஆரம்பம் சிறப்பாக இருந்தும்..
கடைசி 15 தொடக்கம் 20 வரையிலான ஓவர்களில் எதிரணிக்கு ஓட்டங்களை மேலதிகமாக வாரி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக நிறைவடையவில்லை. எங்களுடைய களத்தடுப்பு ஒழுங்காக அமையவில்லை என்றாலும் சில தவறுகளினால் தோல்வியைத் தழுவினோம். ரிஸ்வான், நவாஸ் மற்றும் நசீம் ஆகியோர் நேர்மறையாக இருக்கின்றனர். ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும் நாம் சரியாக செயற்பட்டிருந்தால் சரியாக அமைந்து இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதவேளை பாகிஸ்தானின் ஆசிய கிண்ண தோல்வியைத் தான் பொறுப்பேற்பதாக அணியின் உதவி தலைவர் சதாப் கான் தெரிவித்துள்ளார். அதாவது போட்டியின் திருப்புமுனையாக அமைந்த பானுகவின் இரண்டு பிடியெடுப்புக்களை சதாப் கான் தவறவிட்டிருந்தார். பாகிஸ்தான் அணியின் சிறந்த களத்தடப்பாளர்களில் ஒருவரான சதாப் இவ்வாறு இரண்டு பிடியெடுப்புக்களை தவறவிட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிடியெடுப்புக்களை எடுத்தால் வெற்றி பெற முடியும். ஆனால் போட்டியில் முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்டேன் மற்றும் அணியின் தோல்விக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது அணியின் தோல்விக்கு நான்தான் காரணம் என சதாப் கான் தெரிவித்துள்ளார். நஷீம் ஷா, ஹரீஸ் ரவூப் ஆகிய இருவரினதும் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததோடு முஹம்மத் ரிஸ்வானும் சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கியிருந்தார். ஒட்டுமொத்த அணியும் இயன்றவரை முயற்சித்தது என்று அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தகுதிகான் சுற்றில் அணி A யில் இலங்கை,நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. குழு B ல் மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து,ஐயர்லாந்தூ மற்றும் சிம்பாபே அணிகள் மோதவுள்ளன.
சுப்பர் 12 சுற்றில் குழு ஒன்றில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அணியுடன் தகுதிகான் சுற்றில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் இணையவுள்ளது.சுப்பர் 12 இன் குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் தகுதிகான் சுற்றில் தெரிவுசெய்யப்படும் இரண்டு அணிகள் இணையவுள்ளன.
தகுதிககான் சுற்று ஒக்டோபர் 16 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.சுப்பர் 12 சுற்று ஒக்டோபர் 22 தொடக்கம் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய T20 உத்தியோகபூர்வமாக அணிகளை அறிவித்து வருகின்றது. இதுவரையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நமீபியா ஆகிய அணிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பை செய்துள்ளனர்.
2024 T20 உலகக்கிண்ணத்தில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் மே.தீவுகளில் 2024 டி20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளது.இ்ப் போட்டிக்கு 12 அணிகள் நேரடியாகதத் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும்.
போட்டியை நடத்தும் நாடுகளான அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் நேரடித் தகுதியை அடைந்துள்ளன. எஞ்சியுள்ள இரண்டு அணிகள் தரவரிசைப்படி தெரிவாகும். ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் 8 இடங்களில் இடம்பெற்றால் தரவரிசையின் அடிப்படையில் மூன்று அணிகள் தெரிவு செய்யப்படும்.ஏனைய 8 அணிகளும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. T20 உலகக் கிண்ணப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த முறை நடக்கவிருக்கின்ற T20 உலகக்கிண்ண அணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்து வருகின்ற நிலையில் பாகிஸ்தான் அணி சற்று தடுமாற்றம் அடைந்துள்ளது.ஆசியாக்கிண்ண இறுதிப்போட்டி தோல்வியின் பின்னர் அந்த தொடரில் சிறப்பாக விளையாடாத பக்ஹர் சமான் அணியிலிருந்து விளக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தற்போது 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்,பாபர் அசாம்(அணித் தலைவர்),சதாப் கான் (உதவித் தலைவர்),முஹம்மத் ரிஸ்வான்(விக்கெட் காப்பாளர்),ஆசிப் அலி,கைதர் அலி, ஹரீஸ் ரவூப்,இப்திகார் அஹ்மத் ,குஷ்தில் ஷாஹ்,முஹம்மத் ஹஸ்னய்ன்,முஹம்மத் நவாஸ்,முஹம்மத் வஸீம்,நஸீம் ஷாஹ்,ஷஹீன் அப்ரிடி,ஷான் மக்ஷுட்,உஸ்மான் காதிர் இதில் உள்ளடங்குகின்றனர்.
17 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 7 T20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமையவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை கராச்சி மற்றும் லாகூரில் இடம்பெறவுள்ளது. ஆசியாக் கிண்ணத்தில் பிரகாசிக்க தவறிய பாகிஸ்தான் அணத் தலைவர் பாபர் அசாம் T20 தரவரிசையில் முதலிடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். எனவே எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள T20 தொடருக்கான பயிற்சி ஆட்டமாக இது அமையவுள்ளது. இதில் பாபர் அசாம் உட்பட பாகிஸ்தான் அணி மீண்டெழுந்து வந்து பிரகாசிக்க வேண்டும் என்பதே அனைத்து இரசிகர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
-அப்ரா அன்சார்