அனைத்தையும் நாடி  ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

2022 Sep 24

தற்கொலைகள்!

தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். “ஐயோ பாவம்”  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு வெறுமனே ஒரு செய்தியாக  மாத்திரமே இருக்கிற இந்த தற்கொலைகள்  சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும்  அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தினைப்பற்றி யாரும் அறிவதில்லை. ஏன் இந்த துன்பநிலை நிகழ்கிறது? தற்கொலை பற்றி நாம் நிறையவே அறிந்துவைத்திருக்கிறோம் ஆனால் அதை தடுப்பது பற்றியோ அது பற்றிய போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவது பற்றியோ எம்முடைய அறிவு எந்த அளவில்  உள்ளது.

 உலக அளவில் தற்கொலை பற்றிய பல ஆராய்ச்சிகள் இன்றுவரை நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. அந்தவகையில் ஒருவர் தானாகவே வேண்டுமென்று தனது உயிரினை மாய்த்துக்கொள்வதே தற்கொலை எனப்பொதுவாக கூறப்பட்டாலும்  அறிவியல் பூர்வமாக அதனை வரையறை செய்வது அத்தனை எளிதானதல்ல எனக்கூறப்படுகிறது. மனிதர்கள்  ஏன்  வலிந்து மரணத்தை நாடுகிறார்கள்? அதற்கு உந்துதலாக அமையும் மனநிலைதான் என்ன?

 ஏனெனில் தற்கொலை செய்துகொள்வதென்பது  டார்வின் கூறும் “பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது”. மனித இனம் தவிர்த்து வேறு எந்த உயிரினங்களும் தற்கொலை செய்துகொள்வதில்லையாம். இந்தக் கட்டுரையினை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு  இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு என நம் அனைவருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் “என்னடா வாழ்க்கையிது” என்ற சலிப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா?  ஏன் நம்மில் பலருக்கு அந்த தருணத்தில் தற்கொலை எண்ணம்கூட தலைதூக்கியிருக்கக்கூடும். ஆனால்  நமக்கிருக்கும் பொறுப்புக்களும்  கடமைகளும் நம்முடைய அந்த எண்ணம்தனை அடுத்த நொடியே தவறு என உணரவைத்து மனதை மாற்றிக்கொண்டிருப்போம்.

தற்கொலை ஒரு தனிமனித  செயற்பாடு  என்றாலும்கூட அதன் வேர்கள்  சமூகப் பொருளாதாரக் காரணிகளிலேயே வேரூன்றியுள்ளது. எனவேதான் இதனை ஓர் தனிமனித நிகழ்வாக மட்டும் கருதாமல் ஒரு சமூக நிகழ்வாக பார்ப்பது அவசியம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் காலங்காலமாக தற்கொலை என்ற நிகழ்வு நிகழ்ந்துகொண்டேதான் வருகிறது. தொன்மைக்காலம் தொட்டு இன்றைய நவீன யுகம்வரையில் இது தொடர்கிறது. பண்டைய சமுதாயத்தில் தற்கொலை என்ற விடையம் பலவிடையங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும்  ஏன் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகவும்கூட இருந்திருக்கிறது எனலாம்.

உதாரணமாக இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்ற முறைமை வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருந்த ஓர் தற்கொலை வடிவமே. அதுபோலவே ஒரு ஆணினால் ஏமாற்றப்பட்ட  அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் இனி இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற மனப்பான்மையுடன் வளர்க்கப்பட்டு அவர்களது பிரச்சினைக்கான தீர்வு தம் உயிரை மாய்த்துக்கொள்ளலே என்பது எழுதப்பட விதியாக இருந்து வந்திருக்கிறது. இந்த பாரம்பரியம்தனை  அண்மைக்காலம்வரையில்கூட நம் தமிழ் சினிமாக்கள் கட்டிக்காத்து வந்திருக்கின்றன என்றால்  மிகையில்லை. (பெரும்பாலான தமிழ் திரைப்படங்களை அவதானித்தால் புரியும் அதில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் நிச்சயம்  சாகடிக்கப்பட்டுவிடுவாள்)

அதுமட்டுமன்றி பல தற்கொலைகள் அரசியல் ரீதியாகவும்  மத ரீதியாகவும் புனிதமாக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்கள் கிராமிய தெய்வமாக்கப்பட்டமை  மற்றும் வரலாற்று ரீதியில் வேலுநாச்சியாரின் பெண்படைத்தளபதியான  குயிலி முதல் தற்கொலைப்படை பெண்ணாக மாறி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடி குண்டுகளோடு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை  என எண்ணிலடங்கா உதாரணங்களை எடுத்துக்காட்ட இயலும்.

இதனடிப்படையிலேயே தம்முடைய எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஓர் அரசியல் ஆயுதமாக தற்கொலையினை பயன்படுத்துவது ஒரு பாரம்பரியமாக வளர்ந்து வந்திருக்கிறது என்றால் மிகையில்லை. இன்றுவரை தொடருமிதனை பொறுப்புணர்வுள்ளவர்கள் வன்மையாகக் கண்டிப்பதுமில்லை  . இவற்றை ஓர் தற்கொலை கலாசாரமாகவும்  ஆரோக்கியமற்ற போக்காகவும் கருதாது ஊடகங்கள் அவர்களை தியாகிகளாக சித்தரிப்பதும்  அரசு அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதன்றோ?

மத அடிப்படையில் தற்கொலை பற்றி நோக்கின்  எல்லா மதங்களுமே தற்கொலை கூடாது என்ற கூற்றினை முன்வைக்க முயன்றாலும்  அடிப்படையில் தெளிவற்ற சிக்கலான  ஓர் நிலையினையே மதங்களிலும் காணக்கூடியதாக உள்ளதெனலாம். பிரதான மதங்கள் அத்தனையுமே முரணான செய்திகளையே சொல்கின்றன. இந்துமதப் புராணங்களிலும்  இதிகாசங்களிலும் பல தற்கொலைகள் வீர மரணங்களாக கூறப்படுகிற அதேவேளையில் ஞானிகள் மோட்சம் பெரும் ஒரு வழிமுறையாகவும் தற்கொலைகள் கையாளப்பட்டுள்ளமையினை அறிய இயலும். இஸ்லாம் தற்கொலைகளை கூடாது எனக்கூறினாலும்  மதத்தினை பாதுகாக்கும்பொருட்டு தற்கொலைத் தாக்குதல்களில் (ஜிகாத்) ஈடுபடுவதென்பது புனிதமாக கருதப்படுவது இஸ்லாத்தின் நிலையினை சர்ச்சைக்குள்ளாகக்கூடியது.

விவிலியத்தின் அடிப்படையில் ஆரம்ப கிருஸ்தவ மதபோதகர்களால் தற்கொலைகள் நியாயப்படுத்தப்பட்டாலும்  பிற்காலத்தில் அது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டது. கடவுளுக்கு மட்டுமே உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் உரிமை இருக்கிறது எனவே தற்கொலை கடவுளுக்கு எதிரானது என பின்னாளில் கிறிஸ்தவம் போதிக்கத் தொடங்கியது. பௌத்த  சமயத்தில்  தேரவாத பௌத்தத்தின் அடிப்படையில் உலகப் பற்றினைத் துறந்து  துக்கத்திலிருந்து விடுபடலாம். என்பது கோட்பாடு இதனடிப்படையில் இடர்கள் வரும்போது வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட பல பௌத்தர்கள் சுலபமான ஓர் வழிமுறையாக தற்கொலையைக் கையாள்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

 சரி  என்னென்ன காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழ்ந்தேறுகின்றன?

மன அழுத்தம், மனச் சிதைவு, வறுமை, கடன் சுமை, தீரா உடல் மற்றும் உளவியல் நோய்கள், அளவுகடந்த பேரச்சம், சமூக கலாசார அழுத்தங்கள், சமூக மதிப்பு குறைதல் (கௌரவக்  கேடு /சுயமரியாதை கெடல்) ஈடு செய்யமுடியாத இழப்பு  கடுமையான சித்திரவதைகள் மது மற்றும் போதைக்கு அடிமையாதல் தேர்வில் தோல்வி  பிடித்தமானவர்களுக்கு அன்பினை வெளிப்படுத்தவும்  மேலும் அவர்களுக்கு குற்றவுணர்வினை உண்டாக்கவும்  வாழத் தகுதியற்றவர் என்ற உணர்வு மேலிடுதல்   பொதுப் பிரச்சினைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீ வைத்துக்கொள்லல் என ஏதோவொரு காரணத்திற்க்காக தற்கொலைகள் நிகழ்ந்தேறுகின்றனவெனலாம்.

எனினும் சட்டத்தின் பார்வையில் தற்கொலைகள் தண்டிக்கத்தக்க குற்றமாகவே கருதப்படுகிறது. தற்கொலையினை முயற்சிப்போர்க்கு சிறைத் தண்டனையோ  அல்லது அபராதமோ அந்தந்த நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் விதிக்கப்படுவதுடன் தற்கொலைக்கு தூண்டுகோலாக அல்லது உடந்தையாக இருந்தவர்களும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . குழந்தைப் பருவத்தில் இருந்தே தோல்வியே கூடாது , எப்போதும் வெற்றியே பெறவேண்டும் என்றதோர் மனோநிலையில் வளர்க்கப்படுவதாலோ என்னவோ இன்றெல்லாம் முன்பைவிட தற்கொலைகள் மலிந்துவிட்டன .

 தற்கால சூழலைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கான காரணங்கள் மிகவும் அற்பமானவையாகக்கூட அமைந்துவிடுவதும்முண்டு. எனக்குத் தெரிந்தவொரு பெண் தீபாவளியன்று உறவினர்கள் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு அவர்கள் வராததால் சட்டென ஆதங்கப்பட்டு தூக்கு மாட்டி செத்துப்போனாள்.   சமீபத்திய பல மரணங்கள் இவ்வாறான அற்ப  காரணங்களுக்காகவே நிகழ்ந்துள்ளன என்றால் அது மிகையில்லை. அதுமட்டுமன்றி  நம்மில் பலர் சண்டையின்போதோ அல்லது பிரச்சினைகளிலிருந்து நழுவும் பொருட்டோ அடுத்தவர்களை மிரட்டும்பொருட்டு கழிவறைகளை சுத்தம் செய்யும் திரவங்களைக் குடிப்பது, மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை உடலில் ஊற்றிக்கொள்வது, தூக்குப் போட்டுக்கொள்வது போன்ற சில செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதுண்டு.  அடுத்தவர்களை அச்சப்படுத்தி தமது காரியத்தை சாதிப்பதே இவர்களது நோக்கமேயன்றி  மாறாக மரணம் அல்ல .

சிலர் பிளேடு, கத்தி  கண்ணாடித்துண்டு போன்றவற்றால் தமது உடல் பாகங்களில் காயத்தினை ஏற்படுத்திக்கொள்வதை கண்டிருப்போம். உண்மையில் இவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமே இருப்பதில்லையாம். ஆனால் இவர்கள் தாம் அனுபவிக்கும் கடுமையான உணர்வுக் கொந்தளிப்பிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலைபெற தம்மைத்தாமே காயப்படுத்தி வருத்திக்கொள்கின்றனராம்.

இது அவர்களது கவனத்தினை மனவேதனையிலிருந்து உடல் வேதனைக்கு திசை திருப்ப உதவுவதுடன் அடுத்தவர்களது அவதானத்தினையும்  கரிசனையையும் தம்மீது திசைதிருப்பிக்கொள்ள உதவுகிறதாம்.  சற்று யோசிக்காமல் அவசர கதியில் தற்கொலை முடிவினை எடுத்த பலர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும்பொழுது  தாம் அவசரப்பட்டு எடுத்த முடிவுக்காக நொந்துபோய்  அழுவதுண்டு. எப்படியாவது தம்மைக் காப்பாற்றும்படி மருத்துவரிடம் கதறுவதுமுண்டு. தாம் மீண்டும் உயிர் பிழைத்துவிடக்கூடாதா என்ற எண்ணம் அந்த இறுதி போராட்டநிலையில் அவர்களுக்கு யதார்த்தத்தை புரியவைத்தாலும்  அநேகமாய் அது பலனற்றுப் போய்விடுகிறதெனலாம்.

சரி  தற்கொலைகளை எவ்வாறெல்லாம் தடுக்கலாம்?

உண்மையில் தற்க்கால சூழலைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கான காரணங்கள் என்பது  தங்கள் வாழ்வில்  ஏற்படும்  சில தவிர்க்கவியலாத சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனில்லாமை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை? தன்மை மாறுபட்டாலும் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். எனவே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுண்டு என்று முதலில் நம்பவேண்டும் . முதலில் நம்மை நாமே நம்பியாகவேண்டும். பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாது மனதுக்குள்ளேயே பூட்டிவைத்து புழுங்கிக்கொண்டிராது  நமக்கு நெருக்கமான  நேர்மறையான சிந்தனையும்  நம்பிக்கையும் கொண்ட நபர்களிடம் நாம் அவற்றை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளும்போது  மன அழுத்தம் குறைந்து தற்கொலை எண்ணங்கள் இல்லாதொழிந்துவிடும்.

நமது பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கவோ  ஆறுதல் சொல்லவோ சரியான ஆள் இருந்தாலே தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டுவிடும். இழந்தவொன்றையோ தவற விட்ட ஒன்றையோ நினைத்து நினைத்து உருகிக்கொண்டிராது  அடுத்த இலக்கினை நோக்கி நகர்வதற்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்  குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைக்கேற்ப வாழுதல் தன்னம்பிக்கை  சிக்கல்களை எதிர்கொள்ளுதல்  தேவை ஏற்படின்  பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் நாம் விதைக்கவேண்டும்.

குறிப்பாக குழந்தைப் பருவம் முதல்  இளமைப் பருவம்வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூக குற்றம் என்பதை உணர்த்தவேண்டியது நம் கடமை. தற்கொலை எண்ணங்களை தூண்டக்கூடிய சமூக, கலை ,குறிப்பாக திரைப்படங்கள்  பண்பாட்டுக்கு காரணிகளை கட்டுப்படுத்தியேயாகவேண்டும் . அரசுகள் தற்கொலைகளைத் தடுக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றினால் நன்று  தனிப்பட்ட ரீதியில் தற்கொலை எண்ணம் மேலீடுவோர் முடிந்தவரையில் தனிமையை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம்  எக்காரணம் கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களுக்கு அலுப்படிக்கும்வகையில் அறிவுரை சொல்வது  அவர்களுடன் விவாதங்களில்  வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுதல் போன்றவற்றையும் தவிர்த்தல் நன்று  மட்டுமன்றி அவர்களை நாம் தொடர்ந்தும் கண்காணிப்புக்குள் வைத்துக்கொள்வது நல்லது. உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை அவர்களுக்கு உணரச்  செய்தல் வேண்டும் . ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு. அந்த நிமிடங்களைக் கடந்துவிட்டால் பின்னாளில் அவர்களும் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறிவிடக்கூடும்.

எனவே தற்கொலை எதிர்ப்பை மக்கள் கருத்தாக மாற்றி  அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் நாம் அனைவருக்குமே பொறுப்புண்டு இல்லையா?  ஒவ்வொருநாளும் தற்கொலை தடுப்பு நாளாக இருக்கவேண்டும். தற்கொலை செய்துகொள்ளாத ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உள்ளது. தற்கொலைக்கான காரணங்களை நிவர்த்தி செய்து  அதற்க்கான மருத்துவ, மன, உள சிகிச்சைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது நமது கடமை.

எப்போது பிறக்கவேண்டும்  என்பதை நாம் தீர்மானிக்கவில்லை .அதுபோலவே  எப்போது இறக்கவேண்டும் என்பதையும் நாம் முடிவு செய்யக்கூடாது அல்லவா? தற்கொலை மிகப்பெரியதோர் கோழைத்தனம். முட்டாள்தனம். நம்முடைய வாழ்க்கைப் புத்தகத்தை சட்டென்று மூடிவிடும் உரிமை நமக்கு இல்லவேயில்லை. யார் கண்டது நம்முடைய வாழ்க்கை என்னும் நாவலின் அடுத்தப் பக்கத்தில் எப்பேர்பட்ட திருப்புமுனைகள் வெற்றிகள் நமக்காக காத்திருக்கின்றனவோ! பிறப்பது ஒருமுறை  அதில் எதற்க்காக இறப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php