Uncategorized கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

2022 Sep 28

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால் உருவானது தான் சுற்றுலா. பயணங்கள் தொடர்ந்தால் பணம் வரலாம் என்பதற்கு ஏற்றது போல் ஒரு நாட்டிற்கு பெருமளவு வருவாய் ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத் துறை திகழ்கிறது. இந்தவொரு மையக்கருத்தை கொண்டு உலக சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உலக சுற்றுலா தினமாக நினைவுகூறப்படுகிறது.

அதற்கமைய இன்று தான் உலக சுற்றுலா தினம்.

இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு ஓய்விற்காகவோ அல்லது வேறு நோக்கங்களிற்காகவோ சென்று தங்கி வருவதை சுற்றுலா என்று கூறுகிறோம். எதையாவது தேடி அலைந்து அதனை பார்த்து ரசிக்கும் போது கிடைக்கும் அந்தவொரு அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இந்த உலகம் இவ்வளவு அழகானதா? என்று நம்மை வியக்க வைக்கிறது சுற்றுலாப் பயணம். அதுமட்டுமா? சுற்றுலாப் பயணத்தின்போது நமக்குள் மலர்ந்த அழகான நினைவுகளை ஆண்டுகள் கடந்து நினைத்து பார்த்தாலும் இனிக்கும்.

சுற்றுலாவிற்கு பெயர்போனவர்கள் வெள்ளையர்கள். இதனை நம் நாட்டிலேயே கண்கூடாக பார்க்கலாம். அவர்கள் ஏன் அதிக செலவு செய்து நம் நாட்டை வந்து பார்க்கிறார்கள் என்று சிலர் எண்ணிக்கொள்வது உண்டு. அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக அல்லது உலகத்தை ரசிக்க அல்லது புதிய விடயங்களை தேடி பார்க்கவே பணத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இலாபம் இல்லையென்றாலும் இன்பம் கிடைக்கிறது. விலைமதிப்பற்ற அனுபவங்கள் கிடைக்கின்றன.

நாளும் சைக்கிளைப்போலே சுற்றுக்கொண்டிருக்கும் நம்மவர் களைத்து களைத்து பணத்தை சேர்த்து கடைசியில் சுற்றியிருக்கும் அழகான காட்சிகளை ரசிக்காமல் மண்ணோடு போகின்றனர். தம் கண்ணை மூடியே உலகத்தை காண்கின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளோ தான் வாழும் இந்த உலகத்தை ரசிப்பதற்காக பணத்தை செலவிடுகின்றனர். கண்களை திறந்து இயற்கையை உணர்கின்றனர். புதிய நகர்வுகளால் தேடல்களை நோக்கி பயணிக்கின்றனர். ‘கலைவார் அவரெல்லாம் தொலைவார்.வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார். அவர் அடையும் புதையல் பெரிது.!’ என்று இன்னும் அழகாக தாமரையின் வரிகள் கூறுகின்றன.

சுற்றியிருக்கும் அழகை ரசித்து அனுபவிக்க புறப்படுவது சுற்றுலாப் பயணமாகிறது. அப்படியிருக்க நாம் காதுகளால் கேட்டு புத்தகங்களில் படித்து படங்களில் பார்க்கும் இடங்களை நேரே சென்று பார்த்தால் எப்படியிருக்கும்?. சிலசமயம் நாமே நினைத்திருப்போம். அதிலும் குறிப்பாக தமிழ் படங்களில் நாம் பார்க்கும் சில இடங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என்றோ அல்லது சாதாரண ஒரு இடம் என்றோ நாம் நினைத்திருக்ககூடும். அதைவிட சிலசமயம் நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருப்போம். அப்படி உங்கள் ஆர்வத்தை தூண்டும் நீங்கள் திரைப்படங்களில் பார்த்த சில இடங்கள் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளங்களாகும். அதனை உங்களுக்கு நியாகப்படுத்துகிறேன்.

உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை இடங்களாக திகழ்பவை 7 உலக அதிசயங்கள் தான்.

ஜீன்ஸ் படத்தில் ‘பூவுக்குள் ஒழிந்திருக்கும்’ என்ற பாடலில் ஏழு உலக அதிசயங்களும் காட்டப்பட்டிருக்கும்.

·1 எந்திரன் படத்தில் ‘காதல் அணுக்கள்’ பாடல் பிரேசிலிலுள்ள லென்கோயிஸ் மரன்ஹென்ஸ் சர்வதேச பூங்காவாகும். அதே படத்தில் ‘கிளிமஞ்சரோ’ பாடல் பேருவில் உள்ள மச்சு பிச்சு இல் எடுக்கப்பட்டது.

·2 மாற்றான் திரைப்படத்தில் ‘நானி கோனி’ பாடலில் காட்டப்படுவது நோர்வேயின் ட்ரொல்ஸ்டிஜென், கீராஞ்சர் ஆகும்.

·3 ஐ திரைப்படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ பாடலில் சீனாவின் குய்லின் நகரம் காட்டப்பட்டிருக்கும்.

·4 ஆம்பள திரைப்படத்தில் ‘வா வா வா வெண்ணிலா’ பாடல் பிரசித்திபெற்ற ஓமானின் வாடி ஷாப் இல் எடுக்கப்பட்டது.

·5 ஆதவன் திரைப்படத்தின் ‘ஏனோ ஏனோ பனிதுளி’ பாடல் ஐயர்லாந்தின் ரெய்னிஸ்ட்ராங்கர் இல் எடுக்கப்பட்டது.

6. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ‘ஓமானப் பெண்ணே’ பாடலில் மால்டா தீவின் இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.

7.24 திரைப்படத்தில் ‘நான் உன் அழகினிலே’ பாடலில் போலந்து நாட்டின் மோர்ஸ்கி ஓகோ-ஜகோபேன் காட்டப்பட்டிருக்கும்.

·8 பாய்ஸ் திரைப்படத்தின் ‘அலே அலே’ பாடலில் தஸ்மேனியாவின் ப்ரைட்ஸ்டொவ் எஸ்டேட் லாவெண்டர் பண்ணை காட்டப்பட்டிருக்கும்.

·9 அந்நியன் திரைப்படத்தின் ‘ஐயங்கார வீட்டு அழகே ‘ பாடலில் நெதர்லாந்தின் அம்ஸ்டார்டம் நகரின் பூங்கா காட்டப்பட்டிருக்கும்.

இப்படி இன்னும் ஏகப்பட்ட பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழ் பாடல்களிலும், படங்களிலும் காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக சில திரைப்படங்களில் நம்முடைய இலங்கை நாட்டின் பல அற்புதமான இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.
காக்க காக்க திரைப்படத்தில் காட்டப்படும் மரவீடு மற்றும் பாடல் காட்சிகள் மற்றும் க்ளைமக்ஸ் காட்சிகள் நுவரெலியாவில் கந்தே எல யில் எடுக்கப்பட்டது.
தேவதையை கண்டேன் திரைப்படத்தின் ‘அழகே பிரம்மனிடம்’ மற்றும் வாழ்த்துக்கள் திரைப்படத்தின் ‘எந்தன் வானமும்’ போன்ற பாடல்கள் நுவரெலியாவில் எடுக்கப்பட்டன.

புதிய முகம் , பார்திபன் கனவு ,கண்களால் கைது செய்,தீ , கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களில் கொழும்பு,தெய்வளை மிருகக்காட்சி சாலை,கந்தளான, நுவரெலியா,பேராதனை பூங்கா,சிகிரியா போன்ற பல இடங்கள் காட்டப்பட்டிருக்கும்.

பொய் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் முதல் க்ளைமக்ஸ் காட்சிகள் வரை பெரும்பாலான காட்சிகள் மற்றும் ஆணிவேர் திரைப்படத்தின் முழு காட்சிகளும் இலங்கையின் பிரசித்தமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

வேடன் திரைப்படத்தின் ‘என் காதலா’ பாடல் பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டிருக்கும்.
உன்னை நினைத்து திரைப்படத்தின் ‘என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல், சிலம்பாட்டம் திரைப்படத்தின் ‘மச்சான் மச்சான்’, அபிமன்யூ திரைப்படத்தின் ‘தொடுவானம்’பான்ற பாடல்கள் கண்டி பேராதனை பூங்காவில் எடுக்கப்பட்டது.
ஹிப்பி என்ற தெலுங்கு படத்தின் ‘யெவதிவே யெவதிவே’ பாடல் காலியில் எடுக்கப்பட்டது.

ஆகவே இலங்கையில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தளங்களுக்கு பஞ்சமேயில்லை என்றுதான் கூறவேண்டும். ‘Wonder Of Asia’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டை சுற்றிப் பார்க்க கடல்கடந்து பலரும் வருகின்றனர். இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எப்போது நம் நாட்டை சுற்றிப் பார்க்க போகிறோம் ப்ரென்ட்ஸ்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php