அனைத்தையும் நாடி  சமூக உளவியல்!

சமூக உளவியல்!

2022 Nov 3

உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை வாய்ந்த கற்கை நெறி எனவும் இன்னும் சிலர் நவீன கற்கை நெறி எனவும் அழைக்கின்றனர்.

சமூக உளவியல் பற்றி பல்வேறு அறிஞர்களும் தத்தம் கருத்துக்களை கூறியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நோக்குவோம். “சமூக உளவியல் என்பது தனி மனித சிந்தனைகள், உணர்வுகள், நடத்தைகள் என்பன பற்றிய ஏனைய மனிதர்கள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பவற்றினை அறிகின்ற ஒரு விஞ்ஞானம் ஆகும். என்று “கோர்டன்” அல்பேர்ட் கூறுகிறார்.

மேலும் கிம்போல் யங் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். “மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்ப்புக் கொள்வதை ஆய்வு செய்வது” சமூக உளவியலாகும் என்று அவர் தன் கருத்தை முன் வைக்கிறார்.மேலும் தனிமனிதர்களுக்குள் ஏற்படும் சிந்தனைகள், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கற்பது சமூக அறிவியல் ஆகும்” என்று கிங்வொல் யங் கூறியுள்ளார்.அதாவது சமூக உளவியலானது சமூகத்தை பற்றி கற்கின்ற சமூகப் பிரச்சினைகள் ஆராய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது என்பதனை எம்மால் அறிய முடியுமாக இருக்கிறது.

சமூக உளவியலானது முழு சமூகத்தினதும் அத்தியாவசிய தேவையாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம் துரித வாழ்க்கை முறையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதகங்களும் ஆகும். அந்த வகையில் முழு சமூகத்தினரும் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நடத்தைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நல்லவை நடக்கும் போது முன்னேறி செல்வதற்கும் தீயவை நடக்கும்போது அதை தாண்டி செல்வதற்குமான வழிகாட்டுதல்கள் சமூக அறிவியல் முலமே வழங்கப்பட முடியும். மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் அவனது தேவைகள் அனைத்துமே இன்னொருவரில் தங்கியே நிற்கிறது.

மனிதனால் தனித்து செயல்படுவது மிகவும் கடினமாகும். சமூக பொருளாதார தேவைகளை தாண்டி மனிதன் உயிர் வாழ உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வுளவியல் தேவைகள் சமூக இடைவினைகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.மேலும் மனித உள்ளம் எவ்வாறு சமூகத்தால் தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதே சமூக உளவியலின் கருப்பொருள் ஆகும். மனித நடத்தைகள் யாவுமே மனப்பாங்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

ஆகையினாலேயே இக்கற்கை மனித உள்ளத்தோடு தான் அன்றாடம் இடைவினை புரியும் சமூகத்தினை இணைந்து விவரிக்கிறது.மனிதனது சிந்தனை உணர்வு என்பது மனித மனபாங்கினையே சுட்டி நிற்கிறது. ஒரு தனியனாயினும் அல்லது குழுவாயினும் ஒரு செயற்பாட்டை செய்யத் தொடங்கும் போது அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளமும் சமூகமும் காணப்படுகின்றன. இவ்வாறான உள சமுக காரணிகளை கண்டறிவதற்கு சமூக உளவியல் அன்றி வேறு எந்த கற்கை நாளும் முடியாது.

ஆளுமை தொடர்பான முழுமையான அல்லது மிக சரியான புரிதல் நாம் வாழும் சமூகத்தில் கிடையாது. ஆனால் ஆளுமை என்பது ஒவ்வொரு தனிமனிதனிலும் தவிர்க்க முடியாத பண்பாக காணப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனிலும் இவ்வாளுமையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. அல்லது வெளிக்காட்டப்படுகிறது. ஒருவரின் ஆளுமை பண்பை தெளிவாக வரையறை செய்வது சமூக உளவியல் ஆகும்.

உளவளத்துவம் என்பது இன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. ஏனெனில் எந்த ஒரு செயலை தொடங்கும் முன்னும் அது தொடர்பான வழிகாட்டுதல் அல்லது ஆற்றுப்படுத்தல் இன்றி அமையாதது. சமூக உளவியலை பொறுத்தவரையில் தனியன்களது மனப்பாங்கு மற்றும் நடத்தை தொடர்பான புரிதல்களில் உழவளத்துவத்தினையும் இணைந்திருப்பது இக் கற்கையின் சிறப்பியல்பாகும்.

சமூகப் புலக்காட்சி, சுயம், ஆளுமை, குழு நடத்தை, தப்பபிப்பிராயம் – பாரபட்சம், உளவளத் துணை, ஆவேசம் – வன்முறை – மன அழுத்தம், இவை அனைத்தும் சமூக உளவியலின் பிரிவுகளின் கீழ் நோக்கப்படுகின்றன.இவை ஒவ்வொன்றையும் விரிவாக நோக்குவோம்.

சமூகப் புலக்காட்சி :- சமூகத்தைப் பற்றிய புரிதல்களில் சமூகப் புலக்காட்சி ஆனது பலர் அறிந்திராத ஒரு எண்ணக்கருவாகும். சமூகப் புலக்காட்சி தொடர்பான வரைவிலக்கணங்கள் மற்றும் சமூக புலக்காட்சி உருவாக்கத்தின் அடிப்படை கூறுகள் சமூகப் புலக்காட்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் குறிப்பாக வாய்மொழி மூலம் மற்ற தொடர்பாடல் முறை என்பன இங்கு விஷேடமாக விளக்கப்படுகின்றன.

சுயம் :- சமூக உளவியலில் சுயம் எனும் எண்ணக் கரு மிகப் பிரதான இடத்தினை பெற்றுள்ளது. சமூக உளவியலாளன்றி வேறெந்த கற்கையினாலும் சுயத்தினை பற்றிய முழுமையான ஆய்வினை மேற்கொள்ள முடியாது. அந்த வகையில் சமூக உளவியலானது சுயம் என்றால் என்ன? சுய உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் யாவை? போன்ற இன்னும் பல உப தலைப்புகளில் பேசுகின்றது.

ஆளுமை :- ஆளுமையானது ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பாகும். ஒவ்வொரு தனியனினதும் ஆளுமையானது ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தான் வாழும் சமூகத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயற்படும் திறனே ஆளுமை ஆகும். இதனைத் தீர்மானிப்பதில் இட் (id), ஈகோ (ego), சூப்பர் ஈகோ (superego) போன்றவற்றின் பங்கு பிரதானமானதாகும். இவற்றினை விரிவாக ஆராய்வதே இவ்வத்தியாயமாகும்.

குழு நடத்தை :- “மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் அவன் சமூகம் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்” எனும் கூற்றுக்கிணங்க மனிதனால் தனித்து வாழ முடியாது. எண்ணிறைந்த தேவைகள் உடையவனாக இவ்வுலகில் வாழும் மனிதர்களின் குழு நடத்தை மற்றும் இடைவினைகள் இங்கு உள்ளடக்கப்படுகின்றன.

தப்பபிப்ராயம், பாரபட்சம்:- தப்பபிப்ராயமும், பாரபட்சமும் சற்று வித்தியாசமான எண்ணக்கருக்களாகும். எனினும், பல்லினத்தன்மை கொண்டு சமூகங்களில் இவ்வாறான கருத்தியல்கள் பாரிய சவாலாகவே இன்று வரை காணப்படுகின்றது. உள்ளத்தில் எழுகின்ற ஒருவகையான காழ்ப்புணர்ச்சியின் விளைவான இவ்விரண்டு எண்ணப்பாங்குகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்த வல்லன. ஆகவே சமூக உளவியலில் இவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படுகின்றது.

உளவளத்துணை :- ஆற்றுப்படுத்துதல், வழிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல்வேறுபட்ட பெயர்களை கொண்ட இவ்வுளவளத்துணையானது இன்றைய அவசர உலகில் அத்தியாவசியமானதொன்றாகவே உள்ளது. நகரமயமாக்கம், நாகரீகமயமாக்கம் என்பவற்றோடு குறிப்பாக கைத்தொழில் மயமாக்கம் போன்றன ஈன்றெடுத்த செல்லப் பிள்ளை தான் மன உளைச்சலும், மன அழுத்தமும் ஆகும். இக்கொடிய உள நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான சிகிச்சையினையே உளவளத்துணை காட்டுகிறது. உளவளத்துணை என்றால் என்ன? உளவள ஆலோசகர் மற்றும் சேவை நாடி தொடர்பான தகவல்களும் அவர்களின் தார்மீகப் பொறுப்புகளும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆவேசம், வன்முறை, மன அழுத்தம் :- மிகையான மன அழுத்தத்தின் இறுதி முடிவு ஆவேசமும், வன்முறை உணர்வும் ஆகும், உளவியல் சார் கொடிய நோய்களில் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய மன அழுத்தத்தின் இறுதி முடிவு சில வேலைகளில் மரணமாகக்கூட இருக்கலாம். எனவே தான் இங்கு ஆவேசம் மற்றும் அதன் அடிப்படை, வன்முறை மற்றும் அதற்கான காரணங்கள் போன்றவற்றையும் மன அழுத்தம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்பனவும் சமூக உளவியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமூக உளவியல் ஆனது எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது சூழலிற்கேற்ப மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை பற்றி கற்க முடிகிறது. சமூகத்தின் எண்ணத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த உளவியல் கல்வியின் தேவைப்பாடு அதிகமாக இருக்கிறது. மேலும், சமூகத்தில் பிறழ்வு நடத்தை கொண்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து அதற்கான முறையான தீர்வினை ஏற்படுத்த உதவுகிறது.

சமூகத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு நடத்தை கோலத்தினை கொண்டவர்களாக காணப்படுவார்கள். சமூகத்தில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள சமூக உளவியல் எமக்கு பங்களிக்கிறது. பிறருடைய மனநிலை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஒரு மனிதன் தன்னுடைய உளப்பாங்கில் மாற்றத்தினை கொண்டுவர, சமூக உளவியல் கல்வி பெரிதும் துணை புரிகிறது. இவ்வாறு சமூக உளவியல் ஆனது எமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகையில் எமக்கு துணை புரிகிறது. எனவே சமூக உளவியல் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பாடப்பரப்பாக மாறிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php