அனைத்தையும் நாடி  அலுவலக சூழல் புரட்சி!

அலுவலக சூழல் புரட்சி!

2022 Nov 13

பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றது என யாரேனும் கேட்டால் என்ன சொல்வோம் ? Computers, laptops, table’s, chairs, files என சிலவற்றை சொல்லிக்கொண்டே போவோம் இல்லையா? ஆனால் இனியும் நாம் அப்படியே சொல்லிக்கொண்டிருப்போமாயின் நம்மை சென்ற தலைமுறை என்று சொல்லிவிடுவார்கள்! ஏனெனில் இன்றைய அலுவலகங்கள் எப்படியெல்லாமோ மாற்றமடைந்து விட்டன. உதாரணமாக பல நாடுகளில் உள்ள அலுவலகங்களில் தூங்கும் இடங்களெல்லாம் இருக்கின்றனவாம். அதிகமான தூக்கக்கலக்கமென்றால் ஒரு குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம்.

அதேபோல் அலுவலகத்தினுள்ளேயே காபிஷொப்ஸ் விளையாட்டு அரங்கங்கள், ஜிம்  நூலகங்கள், டிவி, என பலவும் வந்துவிட்டன. குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் மையங்கள் முதலிய கூடுதல் வசதியும் செய்துதரப்படுகின்றனவாம் . காலை 8.30 முதல் மாலை 5.30 வரை அலுவலகத்தில் இருந்தேயாகவேண்டும் வருகைப்பதிவேடு மெஷினில் கட்டைவிரலை பதித்தேயாகவேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. விரும்பிய நேரத்தில் வரலாம் விரும்பிய நேரத்தில் செல்லலாம் வீட்டிலிருந்தேகூட வேலை பார்க்கலாம்.

ஆனால் ஏற்றுக்கொண்ட பொறுப்பை முறையாய் செய்துமுடித்தல் வேண்டும். அதை எப்படி செய்யவேண்டும் என்பதில் முழுசுதந்திரம் ! இதெல்லாம் ஏதற்காக? ஊழியர்கள் மகிழ்ச்சியாக வேலைபார்க்க வேண்டும் “அலுவலகத்துக்கு செல்வதே போர் எரிச்சல் என்கிற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது.இந்தவிஷயத்தில் பழைய நிறுவனங்கள் புதிய சிறிய நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.

வருவாயிலோ லாபத்திலோ அல்ல நிறுவனகலாசாரத்தில் ஒருகாலத்தில் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதையே மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரும்பினார்கள். நிறைய சம்பளம் நிரந்தரவேலை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலர் சம்பளத்தைக்காட்டிலும் மகிழ்ச்சியான வேலையையே உயர்வாக கருதுகின்றனர். அதாவது செய்கின்ற வேலையை விரும்பிச்செய்ய வேண்டும் அதில் திருப்தி ஏற்படவேண்டும். பெரிய நிறுவனங்களுள் என்னதான் வசதியிருந்தாலும் சுதந்திரம் இருக்காது.

நினைத்ததை நினைத்தபடி செய்யவியலாது. இத்தனை மணிக்கு அலுவலகம் வரவேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட நேரடியான மறைமுகமான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கும். அவற்றுக்கு இணங்கியே வேலைபார்க்க வேண்டும். இவையெல்லாமே இன்று பல சிறிய மற்றும் புதிய நிறுவனங்களில் தலைகீழ்! பெரியவருவாயோ வசதிகளோ இருக்காது ஆனால் நினைத்ததை நினைத்தபடி செய்யலாம். யாரும் யாரையும் கட்டுப்படுத்தவியலாது. ஆனால் இப்படியிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமா? ஏதாவது சொதப்பிவிட்டால்? அதற்கும் இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஒருவிடயம் சொதப்பிவிட்டால் தூக்கியெறிந்துவிட்டு அடுத்த விடயத்திற்கு சென்றுவிடுகின்றார்கள்.

ஒரே வருடத்தில் பல நிறுவனங்களுக்கு மாறுவது ஏன் பல நிறுவனங்களை ஆரம்பித்து மூடுவதுகூட இன்றைக்கு சர்வசாதாரணம். முந்தைய தலைமுறையினருக்கு இதைக்கேட்டால் “பகீர்” என்றிருக்கும்! காரணம் அவர்கள் சம்பளம் சேமிப்பு  மேலாளர்மீது மரியாதை, பயம், நிறுவனத்தின்மீது விசுவாசம் கட்டுப்பாடு கௌரவம், என்ற உலகத்தில் வாழ்கின்றவர்கள். தோல்வியை கெட்டவார்த்தையாக அவமானமானதாக கருத்துகின்றவர்கள். இன்றைய தலைமுறை வேறுவிதமாக சிந்திக்கின்றது தனக்கு திருப்தியான வேலை. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம். பிறருக்காக தங்களை எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.

“நான் நினைப்பதுபோல் என்னால் வாழமுடியவில்லை என்றால் எவ்வளவு பணம் புகழ் சம்பாதித்து என்ன பிரயோஜனம்? என கேட்பவர்கள்தான் இன்றைய தலைமுறை! இந்தமனோபாவம் பரவிக்கொண்டிருப்பதால் சிறிய நிறுவனங்கள் ஏராளமாக உருவாகுகின்றன. “ஸ்டார்ட் அப்” இல் வேலை பார்ப்பது பெருமையான விடயமாயிற்று நம் இளைஞர்க்கு. ஆகவே பெரிய நிறுவனங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதற்கேற்ப மாறவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் திறமைசாலி இளைஞர்களை தக்கவைத்துக்கொள்வது கடினமாயிற்றே…! அலுவலக மாற்றங்களின் அரசியல் இதுதான்.

“அலுவலகம் வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் வேலை நல்லபடியாக நடக்கவேண்டும்” அதற்கேற்ப பணிச்சூழலை மாற்றியமைத்தால் ஊழியர்கள் இன்னும் திறமையாக செயற்படுவார்கள். “Shared office spaces” எனப்படும் அதிநவீன அலுவலகங்களை இந்த உணர்வின் ஒரு நீட்சியாக பார்க்கலாம்.

அதென்ன shared office spaces?

அலுவலகம் என்றாலே ஒரு நிறுவனம்தான் அதன் ஊழியர்கள்தான் என்று என்ன கட்டாயம்? ஒரே கட்டடத்துக்குள் பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்றாக வேலைபார்த்தால் என்ன? யோசித்துப்பார்ப்பின் இப்போது அலுவலகம் என்பது ஒரு குடையின்கீழ் பல விசுவாசிகள் வாழ்கின்ற அமைப்பாக இருக்காது. ஒத்த சிந்தனையுள்ள பலர் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒன்றுதிரண்டு வேலை பார்க்கிறார்கள் சிரிக்கின்றார்கள் விளையாடுகின்றார்கள் சாப்பிடுகின்றார்கள். கிட்டத்தட்ட ஒரு கல்லூரியைப்போல ஜாலியான வாழ்கை. ஆனால் வேலையும் முடிந்துவிடும் சம்பளமும் வந்துவிடும்.

இந்த கற்பனைக்குபின்னால் ஒரு பெரிய கலாசார மாற்றமே இருக்கிறது “வேலை என்பது மகிழ்வான விடயம் பளு அல்ல” இன்றைய இளைஞர்கள் பலரும் இதை விரும்பக்காரணம் இதிலிருக்கும் நெகிழ்வுத்தன்மை. ஐந்துபேர் வேலைபார்க்குமிடத்தில் தேவையேற்பட்டால் ஐம்பதுபேரை சேர்க்கலாம் அல்லது ஐந்தில் இரண்டை குறைக்கலாம். இந்த இடம் பிடிக்கவில்லையாயின் வேறு இடம் மாறலாம். ஒவ்வொரு நிறுவனமும் தனியே கட்டடம் கட்டி வாடகை கொடுத்துக்கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியம் இல்லையல்லவா?
இப்போது இயல்பாக தோன்றும் இந்த விடயம் அறிமுகமான புதிதில் எப்படிப்பட்ட அதிர்ச்சியை சந்தித்திருக்கும் என யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட இந்த அதிர்ச்சியைத்தான் “ஆதாம் நியூமன் “2001” இல் அனுபவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆதம் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் அமெரிக்காவுக்கு வந்து தனது சகோதரியின் அடுக்குமாடிகுடியிருப்பில் தங்கியிருந்தார். ஓர்நாள் அவரும் அவருடைய சகோதரியும் liftல் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஆனால் யாரும் யாருடனும் ஒருவார்த்தைகூட பேசவில்லை. இது ஆதமுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் எல்லோரும் ஒரே குடியிருப்பில் வாழ்பவர்கள்தனே பின் ஏன் பேசிக்கொள்வதில்லை? என சகோதரியிடம் கேட்க இங்கே எல்லோரும் அப்படிதான்! என்ற சகோதரியின் பதில் ஆதமுக்கு பிடிக்கவில்லை.

உடனே நம்மிருவர்க்கும் ஒரு போட்டி இந்த அபார்ட்மெண்டில் ஒவ்வொரு மாடியிலும் ஒரு நண்பரைக்கண்டுபிடித்து பேசிப்பழக்கவேண்டும் சரியா? என்றார். அடுத்த சில வாரங்களிலேயே இருவர்க்கும் பல நண்பர்கள் கிடைக்க அதற்குபிறகு அந்த வாழ்க்கை முன்பைக்காட்டிலும் இனிமையாகிவிட யாரோ தெரியாதவர்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்கிற உணர்வுபோய் இயந்திரத்தனம் குறைந்தது. இப்படி ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் அறிந்து பழகுகிறவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? என்று யோசித்த ஆதம் அந்த திட்டத்தை ஒரு பிசினஸ் திட்டமாக தயாரித்து ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால் அத்திட்டம் சென்ற வேகத்தில் நிராகரிக்கப்படவே ஏன்? என்ற கேள்விக்கு இப்படியொரு முட்டாள்தனமான திட்டத்தில் யாருமே முதலீடு செய்யமாட்டார்கள் என்ற பதில் வந்தது.எனினும் ஆதம் நம்பிக்கை இழக்கவில்லை . சில மாதங்கள் கழித்து காலியான ஒரு கட்டிடத்தை பார்த்ததும் தன்னுடைய “சமூக அடுக்குமாடியை யோசனையை கொஞ்சம் மாற்றி “சமூக அலுவலகமாக” உருபடுத்தினார். உடனே அந்த கட்டிடத்தின் உரிமையாளரான “ஜோஷ்வா கட்மனை” சந்தித்து இந்த இடத்தை ஓர் அலுவலகமாக மாற்றி அதை பல நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம் இது வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் அல்ல இதை சரியாக செய்தால் மக்கள் மகிழ்ச்சியோடு வந்து பணிபுரியும் இடமாக மாற்றினால் நாம் பல மடங்கு சம்பாதிக்கலாம் ” என புரியவைத்தார்.

ஜோஷுவாவும் ஆதமின் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள ” மிகுவெல் மெக்கெல்வே ” என்ற வடிவமைப்பு நிபுணருடன் சேர்ந்து ” கிறீன் டெஸ்க் ” (green desk) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். கிறீன் டெஸ்க் பெரிய அளவில் வெற்றியடையவே ஆதம் இன்னும் பெரிதாக சிந்திக்க தொடங்கினார்.அப்போதுதான் ஆதாமும் மிகுவெலும் சேர்ந்து 2010ம் ஆண்டு “wework” என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். பகிர்ந்துகொள்ளப்படும் அலுவலக இடங்கள் என்கிற கொள்கையை பிரபலப்படுத்தினார்கள். ஆதமின் சமூக நம்பிக்கை மிகுவெலின் வடிவமைப்புத்திறன் இரண்டும் சேர்ந்து “wework”கை பெரிய அளவு வளர்த்தன.

இன்று weworkநிறுவனம் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா கனடா, சீனா என பல நாடுகளில் இயங்கிவருகின்றது. நாளுக்குநாள் அதன் சந்தைமதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.ஆனால் இந்த பணமதிப்பையெல்லாம் ஆதம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. வேலைக்கு போவது என்றாலே அது சுமைதான்” என்கிற உலகக்கருத்தை மாற்றவேண்டும் அதனை ஓர் களிப்பான அனுபவமாக மாற்றவேண்டும் அதன்மூலம் வேலையும் சிறக்கவேண்டும் திருப்தியும் பெருகவேண்டும். உலகை இன்னும் சிறந்த இடமாக்கவேண்டும் இந்த கனவோடுதான் wework இயங்குகின்றது. இயந்திரபுரட்சிபோல் இதுவோர் அலுவலக சூழல் புரட்சி.

-ப்ரியா ராமநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php