அனைத்தையும் நாடி  திருமணத்திற்குப் பின் பெண்களின் தொழில் செய்யும் உரிமை!

திருமணத்திற்குப் பின் பெண்களின் தொழில் செய்யும் உரிமை!

2022 Dec 14

திருமணதிற்குப்பின்னும் பெண் வேலைக்குப்போவதால்தான் குடும்ப உறவுகள் சீர்குலைகின்றனவென்றும்  குழந்தைகளுக்கு அன்பு கிடைக்காது அவர்கள் தவறான பாதைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் சமுதாயம் நலிவுறுகிறதென்றும் நம்மில் பலர் நினைப்பதுண்டு. அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால் இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை. பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண் சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும்.

காலங்காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும் நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும் இல்லையா? ஒழுக்கம் குழந்தை வளர்ப்பு, குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை போன்றவையெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்கு தேவையானதென்றால் அது கணவனுக்கும் தேவையான ஒன்றே ஒரு ஆண் இதையெல்லாம் செய்துகொண்டே தன ஆளுமையையும், அறிவாற்றலையும், இன்னபல திறமைகளையும் வெளிப்படுத்திக்கொள்ளவும் மென்மேலும் வளர்த்துக்கொள்ளவும் உரிமை இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு அத்தகைய திறமைகள் இருப்பதில் என்ன தவறிருக்க முடியும்? எல்லா குடும்பங்களிலும் கணவன் தன மனைவின் ஆளுமைக்கும் சேர்த்தே செலவழிப்பான் என்றில்லையே? ஏனெனில் பல குடும்பங்களில் மனைவியின் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பணம் கொடுக்காத கணவர்கள் இருப்பதில்லையா?

ஒரு தாயினால்தான் தன் குழந்தையினை பராமரிக்க முடியும் என்பது மறுக்கவியலாது உண்மைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்குமே இடமில்லை. ஆனால் எல்லா தாய்மார்களுக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லையே? இதற்கு பெண் வேலையை விட்டு விடுவது மட்டும்தான் தீர்வாக இருக்க முடியுமா? நாம் ஏன் இதற்கான மாற்றுத்தீர்வுகளை யோசிக்கக்கூடாது? பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் இல்லையா? பொதுவாகவே பிரசவத்திற்குப்பின் மூன்று மாதகால சம்பளத்துடன் கூடிய விடுமுறை நம் அனைவருக்குமே சட்டரீதியில் கிடைக்கக்கூடியது. ஆனால் ஒரு குழந்தைக்கு ஆறு மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்பது வைத்தியர்களின் பரிந்துரையாக இருக்கின்றபோது நம்முடைய தொழிலாளர் சட்டம் திருத்தியமாக்கப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

இந்த மூன்றுமாதகால விடுமுறை கட்டாயம் ஆறுமாதகாலமாக மாற்றியமைக்கப்படவேண்டியது அவசியமானவொன்றல்லவா? ஆறு மாதங்களுக்குப்பின் குழந்தையை பராமரிக்க பெண்ணின் தாயாரோ மாமியாரோ அல்லது சகோதரியோ யாரேனும் ஒரு மிகச் சிறந்த நபர் இருப்பாராயின் அவள் தன் உத்தியோகத்தை தொடர்வதில் சிக்கலென்ன? மேலும் ஒரு குழந்தையுடன் முழுநேரமும் அதன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குழந்தை வளர்ப்பினைப்பற்றி பேசும் பல மருத்துவர்கள் “spend quality time “என்றுதான் குறிப்பிடுகிறார்களேயொழிய முழு நேரமும் குழந்தையை சுற்றிச் சுற்றி வந்து சுயமாக அதனை எதையுமே செய்யவிடாது எல்லாவற்றுக்கும் உங்களையே எதிர்பார்க்கும் ஒன்றாக அதனை மாற்றிவிடாதீர்கள் என்கிறார்கள். நாம் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் எத்தகைய தரமுடியாது என்பது மிக மிக முக்கியமானது.

குழந்தையுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு , அதனோடு அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்போமாயின் அது எப்படி சரியானதாகும்? ஏனெனில் அந்த நேரத்தில் நாம் குழந்தையுடன்தான் இருப்போமாயினும் அதன் ஆளுமையை வளர்க்கும் அல்லது அதன் மனோநிலையோடு ஒன்றிப்போகும் எந்தவொன்றையுமே நாம் அவ்விடத்தே செய்யவில்லையே? நமக்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம்தான் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியுமாயின் இடையிடையே குழந்தையோடு பேச்சுக்கொடுத்துக்கொண்டே மற்ற வேலைகளை செய்துகொண்டிராது அந்த ஒரு மணிநேரமும் குழந்தையோடு விளையாட அல்லது நேருக்கு நேர் அமர்ந்துகொண்டு பிரமாண்டமான அபிநயங்களோடு கதைகளைக்கூற முழுமையாக அந்த நேரத்தினை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுவோமாயின் எந்தக்குழந்தையுமே சூழ்நிலையை புரிந்துகொள்ளும் இல்லையா?

வேலைக்குப்போகும் அம்மாக்கள் செய்யக்கூடாத இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் நம்முடைய குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை அதனுடன் போதுமான நேரத்தினை செலவிடமுடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி மேலோங்க அது கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து அதை ஒரு “வீணடிக்கப்பட்ட” குழந்தையாக மாற்றிவிடாதீர்கள். பிறகு குழந்தையின் குளறுபடி தாளாமல் “உனக்காகத்தானே நான் வேலைக்குப் போகிறேன் ” என சுயபச்சாபத்துடன் கெஞ்சுவீர்களேயாயின் “நானா உன்னை வேலைக்குப் போகச் சொன்னேன்?” என அது உங்களிடமே எதிர்கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும்.

இந்த தனி ரக அவஸ்தையை கெட்டிக்காரத்தனமாக கையாளக்கற்றுக்கொள்ளுங்கள் ஒருபோதும் தான் ஒதுக்கப்படுகிறோம் தன்னை கவனிக்க ஆளில்லை என்பதுபோன்ற எண்ணங்கள் குழந்தைகள் மனதில் வளரும் வகையில் நேரமின்மை என்ற ஒன்றை காரணம்காட்டி அவர்களை கவனிக்கத் தவறாதீர்கள். இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது இல்லையா?

“நான் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறேன் அதனால் என் மனைவி வேலைக்குப்போய்த்தான் சம்பாதிக்கவேண்டும் என்ற அவசியம் இங்கில்லை” என்று கூறும் கணவர்கள் ஒரு ரகம் என்றால் “வேலைக்கு போய் சம்பாதிப்பதால்தானே இந்த திமிர் அந்த வேலை இல்லாவிட்டால் என்னையும் என் குடும்பத்தையும் இவள் மதிப்பாள் ” என்ற குரூர நோக்கில் மனைவிக்கு தடை சொல்லும் கணவர்கள் இன்னொரு ரகம் “நீ ஏன் இன்னும் வேலைக்குப் போய் கஷ்டப்படணும்? நிம்மதியா வீட்ல இருந்து வேலை செஞ்சிட்டு டிவி பார்த்துகிட்டு இருக்கலாமே? என்பது அன்பார்ந்த இன்னுமோர் ரகம். (இதனால்தானோ என்னவோ, லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஆண்களைக்காட்டிலும் திறமையான பல பெண்கள் “சன் டிவி, விஜய் டிவி, zee தமிழ் போன்றவற்றில் புதைந்துபோய் கிடக்கிறார்கள்.)

இன்னும் சிலர் இருக்கின்றனர் ” ஏன் ஆபீஸ் போய்த்தான் ஆத்ம திருப்தி அடைய வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே இருந்து கூடை பின்னுதல் எம்பிராய்டரிங் , பூ வேலைப்பாடு செய்தல் , தையல் வேலை செய்தல் , வானம், பூ , நிலா, பெண்மை என விதவிதமான தலைப்புக்களில் கவிதையெழுதி வாரப்பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்தல் போன்ற வேலைகளை செய்து தனது சுயம் அழியாமல் பார்த்துக்கொள்ளக்கூடாதா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்புவது எரிச்சலுக்குரியது. அப்படியே வேலையை விடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உறவினர்களிடமோ நண்பர்களிடமோ விடயத்தை பகிர்ந்துகொண்டால் ” வேலையா குடும்பமான்னு பார்த்தா குடும்பம்தான் முக்கியம் பேசாம புருஷன் சொல்றத கேட்டு புத்திசாலித்தனமா வாழ்க்கையை காப்பாத்திக்க” என்ற அறிவுரைதான் அதிகமாக வந்து சேரும்.

ஆனால் இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள் பெண்கள் வேலைக்குச் செல்வது சம்பாத்தியம் தொடர்பானது மட்டுமல்ல அது அவளுக்கு தன்னம்பிக்கையை தருகிறது தன குடும்பத்தின் பொருளாதார தேவைகளை தன்னாலும் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்ற மன நிறைவினைத் தருகிறது. சமையல், வீட்டு வேலை என்று தன்னுடைய திறமைகளை நான்கு சுவருக்குள்ளேயே முடக்கிக்கொள்ளாமல் ,அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. சுய மரியாதையைக் கொடுக்கிறது மண வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் குடும்பத்தை தனியாளாக சமாளிக்க நேரின் குறைந்த பட்சம் பொருளாதார பிரச்சினையிலிருந்தாவது தப்பிக்க முடிகிறது.

பெண்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களுக்கு கிடைக்கும் பல வெளி உலக அனுபவங்களால் குடும்பத்தில் ஏட்படும் சில சிக்கல்களைக்கூட சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது தம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றி நன்றாக திட்டமிட கற்றுக்கொள்கிறார்கள். காலை முதல் இரவு நித்திரைக்குச் செல்லும்வரை ஒவ்வொரு வேலையையும் நன்கு திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்ற உத்வேகம் அவர்களுக்கு ஏற்பட்டு அவ்வாறே செய்து முடிக்கும் ஆற்றல் வளர்கிறது. இதனால் திட்டமிடுதல் சுறுசுறுப்பாக செயட்படுத்தல், தன வேலைகளை விரைந்து முடிக்க சிந்தித்தால் போன்ற சிறப்புக்கள் அவர்களிடம் உருவாகும்.

நெருக்கடியான நேரங்களில் விரைந்து செயட்பட, தகவல் தொடர்பு கொள்ளும் முறைமை மாற்றுவழிமுறைகளை தேர்ந்தெடுத்தல் என பல பண்புகள் இயல்பாகவே இவர்களிடம் ஏற்படும் வேலை பார்க்குமிடத்தில் பலதரப்பட்ட பணியாளர்களுடன் பழக நேருவதால் ,குழு மனப்பான்மை , விட்டுக்கொடுத்தல் , அனுசரிதல் ,வெவ்வேறு குணாதிசயங்களுடன் கூடிய மனிதர்களை சந்திக்க நேருகையில் ஒவ்வொருவரிடமும் எப்படி பழக வேண்டும் என்ற பக்குவம் போன்றனவெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏட்படுகிறது.

குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக இல்லாமல் படித்த படிப்பு வீணாகக்கூடாதே என்று பணிக்கு செல்லும் பெண்களைக் கேளுங்கள் வேலையை விடுவார்களா என்று? நிச்சயம் மாட்டார்கள். “அலுவலகத்திலும் நிமிரமுடியாத அளவுக்கு வேலை வீட்டிலும் வேலை, நேரமே இல்லை” என ஆயிரம்தான் புலம்பினாலும் வேலையை விடமாட்டார்கள் . ஏன் ? வேலைக்கு போகவேண்டும் என்ற கட்டாயமும் அவர்களுக்கு இருப்பதில்லை ஆனாலும் வேலையை கைவிடமாட்டார்கள். “அலுவலகம் சென்றால் ஒரே வேலை வீட்டில் இருந்தால் ஆயிரம் வேலை” என நகைச்சுவையாகக்கூட சிலர் சொல்வதைக் கேட்டதுண்டு

சில பெண்களுக்கு வேலையை விட சுய கெளரவம் தடுக்கிறது. அதுமட்டுமன்றி தானாகவே உருவாக்கிவிட்டுக்கொண்ட பொருளாதார நிர்பந்தங்கள் அவர்களுக்கு எந்தவித சாய்ஸ்சையும் கொடுப்பதில்லை வீட்டில் ஆபிஸ் சிந்தனை ஆபீசில் வீட்டு சிந்தனை என குழம்பிக்கொண்டிருக்கும் பெண்களும் இல்லாமலில்லை. எது எவ்வாறாயினும் வேலைக்கு போவதும் போகாததும் பெண்களை பொறுத்ததாக இருக்கவேண்டும். இதில் ஆண்கள் தலையிடக்கூடாது. விரும்பி வேலைக்கு போகும் எந்தப்பெண்ணும் அதை பாரமாக நினைக்கமாட்டாள் எனவே அப்படிப்பட்ட பெண்ணுக்கு கணவர் ஏன் தடையிடுவானேன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php