2022 Dec 12
அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகளிலிருந்து கிடைத்த வரலாற்றுத்தகவல்கள்தான். பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை தொல்காப்பியம், திருக்குறள் திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உற்பட பல சங்க இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது.
பனை ஓலைகளில் எழுதப்பட்டதால்தான் இந்த இலக்கியங்களும் , தமிழ் எழுத்துக்களும் அழியாமல் தப்பிப்பிழைத்தன எனக்கூறினாலும் தகும். உலக நாகரீகங்களில், எழுதுவதற்காக ஆமை ஓடுகள் மற்றும் பல்வேறு விலங்குகளின் தோள்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும் தமிழர்கள்தான் இதனை எளிமைப்படுத்தி பனைஓலைகளில் எழுதத்தொடங்கினர். அச்சுக்கருவி கண்டுபிடிக்கப்படும்வரையில் இந்தமுறை தொடர்ந்ததென்றால் மிகையில்லை. திருக்குறளில் “பயன் மரம் ” என குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மரங்களில் பனை மரமும் ஓன்று.
ஒருகாலத்தில் ஐந்துவகை நிலங்களிலும் நிலத்திற்கு ஏற்றவாறு மக்கள் வாழ்ந்துவந்தனர். கடலும் கடல்சார்ந்த பிரதேசங்களிலும் வாழ்ந்துவந்த நெய்தல் நில மக்கள் தற்போது வாழ்வாதார மாற்றத்தினால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட தற்போதெல்லாம் கடற்கரை என்பது பெரிய பெரிய பங்களாக்கள் சொகுசு தொடர்மாடிகள் போன்றவற்றை அமைத்துக்கொண்டு பணக்காரர்கள் வசிக்கக்கூடிய இடமாகவும், சுற்றுலாவிற்கான இடமாகவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்ட இடமாகவும் மாறிவிட்டதென்றால் மிகையில்லை . இந்த மாற்றமென்பதும் பனையின் அழிவிற்கு ஓர் காரணம் ஏனெனில் தற்போதெல்லாம் கடற்கரைகளை அழகுபடுத்த அயல் தாவரங்களானா “பாம் ட்ரீக்களே” அதிகம் விரும்பப்படுகின்றன.
இதனால் காலங்காலமாக நம் கடற்கரைகளை தன்னுடைய சல்லி வேர்களால் பாதுகாத்து மண்ணரிப்பு கடல்கோள் போன்றவற்றை தடுத்து நிறுத்திய பனை மரங்கள் வேண்டப்படாத ஒன்றாகிப்போய்விட்டன. உண்மையில் ஆங்கிலேயரின் வருகையுடனேயே பனையின் அழிவும் ஆரம்பித்து விட்டன என்றுதான் கூறவேண்டும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் இனிப்பு சுவை என்கிறவொன்றிற்கு பயன்பட்டது. கருப்பங் கட்டி ” எனப்படும் பனங்கருப்பட்டியே.
ஆனால் வெள்ளை சர்க்கரை என்கிற உணவு ஆங்கிலேயரால் நம் சமூகத்தினுள் புகுத்தப்பட பனங்கருப்பட்டியின் பாவனை மெல்லமெல்ல அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் இன்றும் பல மேலைத்தேய நாடுகளில் பனங்கருப்பட்டி பனங்கல்கண்டு போன்றவற்றையே தமது உணவுப்பட்டியலில் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி மிளகாயை நம்மிடம் தள்ளிவிட்டுவிட்டு ஆரோக்கியம் நிறைந்த மிளகை அபகரித்துக்கொண்டார்களோ அப்படிதான் இதுவும்.
கிராமப்புர பொருளாதாரத்தினை மேம்படுத்த பனைமரங்களை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் தற்போது நம்மிடம் உள்ளது. முன்பெல்லாம் , பாய் விசிறி, பெட்டிகள், தூரிகைகள், பல அலங்காரப்பொருட்கள் போன்றவை இந்த பனைமரத்திலிருந்து உருவாக்கப்பட்டது, இது கிராமப்புறத்தில் உள்ள பலருக்கும் ஓர் வாழ்வாதாரமாகவும் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் நிலைமை தலைகீழ் . பனைக்கென்று எந்த ஆராய்ச்சி நிலையமோ, அல்லது ஊக்குவிப்புகளோ இல்லை என்பது வருந்தத்தக்கது. சுமார் நூறு அடிகளுக்கு மேல் வளர்ந்துள்ள பனையில் ஏறுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்த தொழில் நவீனமயப்படுத்தப்படாமல் இன்னும் பாரம்பரிய முறையில் நகர்ந்துகொண்டிருப்பதும் பனைப்பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது.
உலகில் நூற்றி எட்டு நாடுகளில் பனை மரங்களும் அது சார்ந்த தொழிலும் முன்னிலை வகித்தாலும் தமிழகத்திலும் இலங்கையிலும் பனைத்தொழில் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரித்தானது இழிவானது என்கிற ஓர் எண்ணமும் நம் சமூகத்தில் இருப்பதால் அந்த தொழிலை செய்யும் பலரும் தமக்குப்பின் இந்த தொழிலை தம்முடைய வாரிசுகள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் . இதுவும் பனையின் வீழ்ச்சிக்கான காரணம் .
இலங்கையைப்பொறுத்தவரையில் பனங்காடுகளை அதிகம் கொண்ட யாழில் பனையுடன் தொடர்புபட்ட பிரதான தொழில்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அத்தொழிலும் அச்சாதியும் குறைந்த சமூக அந்தஸ்த்து உள்ளதாக கருதவும் படுகிறது. பனை தொழில் படுத்துப்போவதற்கு இதுவும் ஓர் பிரதான காரணமெனலாம் .பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரையில் ஆண்டான் அடிமை முறைமையைக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது.
பனங் காடுகள் உற்பட ஏராளமான காணிகள் தரிசு நிலங்களாக இருந்த காலப்பகுதியில் காணியில் தனி உடமையை நிலைநாட்டுவதற்கு இறுக்கமான சட்டங்கள் இருக்கவில்லை.இதன்படி அனைத்துக் காணிகளும் வெள்ளாளரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.கள்ளோ அல்லது கருப்பட்டியோ ஒரு விற்பனைப் பண்டமாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்வதானால் பனைக்கு ஒரு பணப்பெறுமானம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. பனை சீவல், ஓலை வெட்டுதலழ, பனைமரம் பிளத்தல், சிலாகை அறுத்தல், பெட்டி கடகம் பொத்துதல் போன்ற தொழில்கள் கூலி எதுவும் இன்றி அடிமைகளைக்கொண்டே செய்யப்பட்டன. ஆகையால் இவ்விதம் பெறப்பட்ட பொருட்கள் ‘உயர்சாதியினருக்கு’ சொந்தமானதாகவே இருந்தன.
இவர்களே யாழ்ப்பாண எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள் என்றபடியாலும், அடிமை குடிமைகள் சுதந்திரமாக எதையும் கொள்வனவு செய்யும் உரிமை அற்றிருந்தபடியாலும் இப்பொருட்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறவில்லை. இதனால் பனம்படு தொழில்களில் ஒரு வளர்ச்சி ஏற்படவில்லை என்றே கூறப்படுகின்றது .மேலும் மிகக்குறுகியகால அவகாசத்துள் நிலம் தமது உரிமை என்பதை இலங்கைப் பிரஜைகள் ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கும்படியும் தவறும் பட்சத்தில் அதனை காணிகளும் அரசுடைமையாக்கப்படும் என்கிற பிரிதானியர்களின் சட்டரீதியிலான ஆணையினை ஆங்கில அறிவும் அதனுடன் அரசாங்க சட்டதிட்டங்களைப்பற்றிய புரிதலும் பெற்றிருந்த உடையார் மணியகாரர் முதலியார் குடும்பங்களாகிய மேட்டுக்குடியினர் காணிகள் தமது என்பதை நிரூபிப்பதற்கு அவசியமான சட்ட ஆவணங்களை குறுகிய கால இடைவெளிக்குள் தயாரிப்பதில் அபார வெற்றி பெற்றார்கள்.
படிப்பறிவில்லாத ஏனைய மக்களை ஏமாற்றி அவர்களின் பயன்பாட்டில் இருந்த காணிகளை தமதாக்கிக் கொண்டார்கள். பணத்தினை கடனாகக் கொடுப்பது பஞ்சத்திற்கு உணவு கொடுப்பது வெளிநாட்டுக் குடிவகை கொடுப்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளையும் பின்பற்றி அம்மக்களை ஏமாற்றி ஏகப்பட்ட பனங் காடுகளை தம் வசப்படுத்திக்கொண்டனர் . நிலக்கொள்ளையைத் தொடர்ந்து நிலமும் அதில் உள்ள பனை மரங்களும் பெரும் நில உடமையாளர்களின் சொத்தாக மாறுகிறது. குடியிருக்கவும் அடிவளவாகப் பயன்படுத்தவும் பனம்பொருட்களை அனுபவிக்கவும் நில உடமையாளர்களின் அனுமதி பெறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பனையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
பனை அடிமைப்படுத்தப்படுகிறது. பனை என்ற இயற்கைத் தாவரம் சமூக பொருளாதார அர்த்தத்தில் இயற்கைத்தாவரம் என்ற நிலையை இழந்தது அப்போதே ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரும் பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள ஏனைய சாதிப்பிரிவினரில் பெரும்பான்மையோடும் ஏதோ ஒரு வழியில் உயர்சாதி மேட்டுக்குடி நில உடமையாளர்களில் தங்கி நிற்க வேண்டிய சமூக பொருளாதார நிலமை தோற்றுவிக்கப்பட்டது.
“ஆமாம் சாமி” என கீழ்ப்படிபவர்களுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை மற்றும் பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. எதிர்ப்புக் காட்டினால் அவ்வளவுதான். சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் அந்தோ கதிதான்.
பனைமரம் என்பது நட்டதும் உடனடியாக பலன் தரக்கூடியதல்ல அதற்கு குறைந்தது இருபது தொடக்கம் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், ஆகவே இன்றைய தலைமுறையில் நட்டதும் குறைந்தது ஆறுமாதங்களில் பலன் தந்துவிடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பனையின் வளர்ச்சியில் மக்கள் ஈடுபாடுகாட்டாமைக்கு ஓர் காரணம் எனலாம் . “கிணற்றைச் சுற்றி பத்து பனைமரம் நின்றால் இறுதிவரை அந்த கிணறு வற்றவே வற்றாது. அப்படி வற்றவிடாத அந்த பனைமரம் கழுத்து முறிந்து சாகிறது என்றால் அந்த நிலம் பாலை வனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்” என்பது நம்மாழ்வார் கூற்று. ஒரு சமூகத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களைவைத்து அச்சமூகத்தை கணிப்பது “புழங்குபொருள் பண்பாடு ” எனப்படும்.
அந்தவகையில் தாலி முதல் பல்வேறு அன்றாட தேவைக்குரிய மற்றும் உணவு பொருட்கள்வரை பனையின் பயன்பாடு தொன்றுதொட்டு தமிழர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டது. (பனை ஓலையிலிருந்து செய்யப்பட்ட தாலி “தாலிப்பனை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது இலக்கியங்களில்) பனை மரத்தினை தலவிருட்சமாக கொண்ட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பனையின் பெயரை அடிப்படையாகக்கொண்டு பல ஊர்களின் பெயர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றை பனைமரம் எண்ணூருக்கும் மேற்பட்ட மருத்துவ பயன்களைக்கொண்டது என விளக்குகிறது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கத்தாத்தா என அழைக்கப்படும் சோம சுந்தரப்புலவர் எழுதிய “தாளவிலாசம்” எனும் இலக்கியம் .
மனிதர்கள் மட்டுமன்றி வௌவால் புணுகுப்பூனை, மரநாய் , நாகணவாய் , மைனா தூக்கணாங்குருவி, போன்ற உயிரினங்களும்கூட பனை மரத்தினை சார்ந்து வாழக்கூடியவை. அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் பனை மரத்தின் அழிவு என்பது இந்த உயிரினங்களின் அழிவாகவும் பார்க்கப்படவேண்டியவொன்று . பூலோகத்தின் “கற்பகத்தரு” எனப்படும் பனைமரம் முழுமையாக வளர இருபது ஆண்டுகாலம் தேவைப்படும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின்னரே ஒரு பனை ஆண் பனையா? பெண் பனையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். பெண் பனையினை “பருவப் பனை” என்றும் ஆண் பனையினை “அழுகுப்பனை” என்றும் குறிப்பிடுகின்றனர்.
சுமார் நூற்றி இருபது அடிவரை வளரக்கூடிய இம்மரங்களின் நுனி மு தல் அடிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலன்களைத் தரக்கூடியது.”தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரி வார் ” என்பது திருக்குறள் ஆனால் , நமக்கெல்லாம் நம் மொழியைக் கட்டிக்காத்து அருளிய பனை மரத்தினை காக்க மறந்து நன்றி மறந்த இனமாக மாறிவிட்டோமா தமிழர்களாகிய நாம்?